என்னுடைய தாத்தா விசுவாசத்திலும் ஜெபத்திலும் உறுதியானவர் என்பதை என்னுடைய குடும்பத்தினர் நினைவுகூறுகின்றனர். ஆனால் அது எப்பொழுதும் அப்படி அல்ல. “நாம் சாப்பிடுவதற்கு முன் தேவனுக்கு நன்றி கூறப்போகிறோம்” என்று தன்னுடைய தகப்பனார் முதல்முறையாக தன்னுடைய குடும்பத்தினருக்கு அறிவித்ததை என் அத்தை நினைவுகூர்ந்தார். அவருடைய முதல் ஜெபம் சொற்பொழிவாற்றலுக்கு அப்பாற்பட்டிருந்தது. ஆனால் தாத்தா அடுத்த ஐம்பது ஆண்டுகளுக்கு இந்த ஜெபத்தைத் தொடர்ந்தார். அந்த நாள் முழுவதும் அடிக்கடி ஜெபித்துக்கொண்டிருப்பார். அவர் இறந்தப்பொழுது என்னுடைய கணவர் என் பாட்டிக்கு ஒரு ஜெபிக்கும் கரங்களின் அருங்காட்சிப் பொருளை கொடுத்து “தாத்தா ஒரு ஜெப வீரன்”என்று சொன்னார். தேவனைப் பின்பற்றவும் அவரோடு அனுதினமும் பேச அவர் எடுத்த முடிவு தாத்தாவை கிறிஸ்துவின் ஒரு உண்மையுள்ள ஊழியக்காரனாய் மாற்றியது. 

ஜெபத்தைக் குறித்து வேதாகமத்தில் அதிகமாக சொல்லப்படுகிறது. மத்தேயு 6:9-13ல் இயேசு தம்மை பினபற்றுகிறவர்களுக்கு ஒரு ஜெபத்தின் மாதிரியைக் கொடுத்து, தேவன், அவர் யாராயிருக்கிறாரோ அவரை மனமார்ந்த துதியோடு நெருங்கக் கற்றுக்கொடுத்தார். நம்முடைய விண்ணப்பங்களை தேவனிடத்தில் கொண்டு செல்லும்போது, அவர் நமக்கு “அன்றன்றுள்ள ஆகாரத்தை” தருவார் என்று விசுவாசிக்கிறோம் (வச. 11). நம்முடைய பாவங்களை நாம் அறிக்கை செய்யும்போது, அவரிடத்தில் மன்னிப்பையும், சோதனைகளைத் தவிர்க்க உதவியையும் கேட்கிறோம் (வச. 12-13).

ஆனால் கர்த்தர் கற்பித்த ஜெபம் மட்டும் அல்லாமல் (பரமண்டல ஜெபம்), “எந்தச் சமயத்திலும் சகலவித வேண்டுதலோடும்” (எபேசியர் 6:18) நாம் ஜெபிக்க வேண்டும் என்று தேவன் எதிர்பார்க்கிறார். நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையின் வளர்ச்சிக்கு ஜெபம் மிகவும் முக்கியமானது. மட்டுமல்லாமல் ஜெபம், நாம் தேவனோடு ஒவ்வொரு நாளும் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்க வாய்ப்பளிக்கிறது (1 தெசலோனிக்கேயர் 5:17-18).

தேவனிடம் பேச வேண்டும் என்ற வாஞ்சையினால் தாழ்மையுள்ள இருதயத்தோடு நெருங்கும்போது, அவரை இன்னும் அதிகமாய் நேசிக்கவும், அறிந்துக்கொள்ளவும் உதவி செய்வார்.