நான் என்னுடைய கோடை விடுமுறையை கழிக்கச் சென்ற தேசத்தில் என்னுடைய பணப்பையை ஒருவன் திருட முயற்சித்தான். அங்கு அது ஆச்சரியமில்லை. வழியில் திருடர் பயம் இருக்கும் என்ற எச்சரிப்பை நான் பார்த்தேன். ஆகையால் என்னுடைய பணப்பையை எப்படி பராமரிப்பது என நான் அறிந்திருந்தேன். ஆனால் அது சம்பவிக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை. 

அதிர்ஷ்டவசமாய் என் பணப்பையை உருவிய அந்த இளைஞனின் கைகள் வழுக்கியது. அதினால் அவன் உருவிய என் பணப்பை கீழே விழுந்தது. அதை சட்டென்று குனிந்து எடுத்துக்கொண்டேன். ஆனால் அந்த எச்சரிப்பை நான் பொருட்படுத்தியிருக்கவேண்டும் என்பதை அந்த சம்பவம் எனக்கு உணர்த்தியது. 

நாம் எச்சரிக்கைகளை எப்போதும் நினைவில் வைத்துக்கொள்வதில்லை. அவைகள் நம் வாழ்க்கையின் மகிழ்ச்சி பாதையில் ஆங்காங்கே இடம்பெற்றிருக்கிறது என்பது நமக்குத் தெரியும். ஆனால் அதற்கு கவனம் செலுத்துவதில்லை. வரப்போகிற தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்து அறிவிக்க தன்னுடைய சீஷர்களை அனுப்பும்போது, இயேசு அவர்களுக்கு எச்சரிப்பு கொடுக்கிறார் (மத்தேயு 10:7). அவர் “மனுஷர் முன்பாக என்னை அறிக்கை பண்ணுகிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக அறிக்கைபண்ணுவேன். மனுஷர் முன்பாக என்னை மறுதலிக்கிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக மறுதலிப்பேன்” (வச. 32-33).

நமக்கு தேர்ந்தெடுக்கும் அதிகாரம் உண்டு. நாம் தேவனோடு அவருடைய அன்பில் நித்திய நித்தியமாய் இருப்பதற்காக ஒரு இரட்சகரை நமக்கு அனுப்பியிருக்கிறார். நாம் தேவனை விட்டு திரும்பி, அவருடைய இரட்சிப்பின் செய்தியை நாம் புறக்கணிப்போமாகில் அவர் கொடுக்கும் நித்திய வாழ்க்கையையும் அவரோடு இருக்கும் வாய்ப்பையும் நாம் இழக்க நேரிடும். 

நம்மை நேசிக்கிறவரும் உண்டாக்கினவருமாகிய தேவனிடத்திலிருந்து நித்தியமாய் பிரிக்கப்படாதபடிக்கு நம்மை இரட்சிப்புக்கு தெரிந்துகொண்ட இயேசுவை நாம் நம்புவோம்.