ஸ்காட்லாந்து மிஷ்னரி அலெக்ஸாண்டர் டஃப், 1830ஆம் ஆண்டு இந்தியாவிற்கு முதல் சுற்றுப்பயணம் வந்தபோது, தென் ஆப்பிரிக்காவில் ஏற்பட்ட புயலினால் அவர் பயணம்செய்த கப்பல் சேதத்திற்குள்ளாக்கப்பட்டது. அவரும் அவரோடு சேர்ந்து கப்பலில் பயணித்த சகபயணிகளும் அருகில் இருந்த ஒரு சிறிய தீவில் கரையொதுங்கினர். கொஞ்ச நேரத்தில் அலெக்ஸாண்டர் டஃப்க்கு சொந்தமான வேதாகமத்தின் பிரதி ஒன்று கரையொதுங்கியதைக் கண்டெடுத்தனர். அது காய்ந்த பின், டஃப் சங்கீதம் 107ஐ எடுத்து வாசித்து, சகபயணிகளை தைரியப்படுத்தினார். கடைசியாக அவர் மீட்கப்பட்டு, மேலும் ஒரு கப்பற்சேதத்தை சந்தித்த பின்னரே இந்தியாவுக்கு வந்து சேர்ந்தார்.
கர்த்தர் இஸ்ரவேலர்களை மீட்டுக்கொண்ட வழிகளைக் குறித்து சங்கீதம் 107 வரிசைப்படுத்துகிறது. டஃப்பும் அவருடைய சகபயணிகளும் சந்தேகமேயில்லாமல், “கொந்தளிப்பை அமர்த்துகிறார், அதின் அலைகள் அடங்குகின்றது. அமைதலுண்டானதினிமித்தம் அவர்கள் சந்தோஷப்படுகிறார்கள் ; தாங்கள் நாடின துறைமுகத்தில் அவர்களைக் கொண்டுவந்து சேர்க்கிறார்” (வச. 29-30) என்ற வார்த்தையில் ஆறுதலடைந்திருக்கவேண்டும். இஸ்ரவேலர்களைப் போல “கர்த்தரை அவருடைய கிருபையினிமித்தமும், மனுபுத்திரருக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் துதித்து” (வச. 31) இவர்களும் நன்றி சொல்லியிருப்பர்.
சங்கீதம் 107க்கு இணையான ஒரு சம்பவத்தை புதிய ஏற்பாட்டில் நாம் பார்க்கமுடியும் (மத்தேயு 8:23-27; மாற்கு 4:35-41). பெருங்காற்று அடிக்கும்போது இயேசுவும் அவருடைய சீஷர்களும் படகில் இருக்கின்றனர். சீஷர்கள் பயத்தில் நடுங்கினர். அவர்களோடு மாம்சத்தில் இருந்த ஆண்டவர் காற்றை அமர்த்துகிறார். நம்முடைய இரட்சகரும் வல்லமையுள்ள தேவனும் புயலின் மத்தியிலும் நம்முடைய அழுகையின் கூக்குரலைக் கேட்டு நம்மை தேற்றுவார் என்று நம்மை தைரியப்படுத்திக்கொள்ளலாம்!
எந்த புயல் போன்ற சூழ்நிலையில் தேவனை நோக்கி அழுதீர்கள்? என்ன நேர்ந்தது?
என்னுடைய புயல்போன்ற சூழ்நிலைகளில் என்னை தனியே விடாததற்காய் நன்றி ஆண்டவரே. எனக்கு நீர் தேவை!