ஏதோ பட்டாசு வெடித்ததுபோன்ற ஒரு சத்தம் ஜோஹன்னேயை தூக்கத்திலிருந்து எழுப்பியது. கண்ணாடி உடைந்து சிதறியது. தனிமையில் இருந்த அவள் எழுந்து என்ன நடக்கிறது என்று பார்க்க முயன்றாள். இருள் சூழ்ந்த அந்த தெரு வெறுமையாயிருந்தது. வீட்டிற்கு ஒன்றும் நேரிடவில்லை. அதன்பின் உடைந்து நொறுங்கியிருந்த கண்ணாடியைப் பார்த்தாள். 

எரிவாயு குழாயின் அருகாமையில் விசாரணையாளர்கள் ஒரு துப்பாக்கி குண்டை கண்டெடுத்தனர். அது அந்த குழாயில் பட்டிருந்தால் இந்நேரத்திற்கு அவள் உயிரோடிருந்திருக்கமாட்டாள். பின்பாக, அது பக்கத்து கட்டடத்திலிருந்து விழிவிலகி வந்த குண்டு என்று கண்டறிந்தும், ஜோஹன்னே வீட்டில் தனியாக இருக்க பயந்தாள். அவள் சமாதானத்திற்காய் ஜெபித்தாள். உடைந்த அந்த கண்ணாடி சீரமைக்கப்பட்டபின் அவளுடைய இருதயம் ஆறுதலடைந்தது. 

இக்கட்டான சூழ்நிலைகளில் தேவனை நோக்கும்படிக்கு சங்கீதம் 121 அறிவுறுத்துகிறது. “வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடத்திலிருந்து” (வச. 2) நமக்கு ஒத்தாசை வருவதால் நாம் சமாதானமும் ஆறுதலும் அடைகிறோம். உலகத்தை உண்டாக்கிய ஆண்டவர் நமக்கு உதவிசெய்து காக்கிறவராயிருக்கிறார் (வச. 3). நாம் தூங்கினாலும் அவர் தூங்குவதில்லை (வச. 4). அவர் இரவும் பகலும் நம்மை பாதுகாக்கிறார் (வச. 6). அவர் என்றைக்கும் நம்மை காக்கிறவர் (வச. 8). 

நாம் எந்த சூழ்நிலையிலிருந்தும் தேவன் நம்மை பார்க்கிறார். அவரிடமாய் நாம் திரும்புவதற்கு அவர் காத்திருக்கிறார். அப்படி செய்தால், நம்முடைய சூழ்நிலைகள் எல்லாம் ஒரேயடியாய் மாறிவிடாது. ஆனால் அவற்றின் மத்தியில் வாக்குப்பண்ணப்பட்ட சமாதானத்தை நாம் அனுபவிக்கமுடியும்.