ஒரு விவசாயி தன்னுடைய வாகனத்தில் ஏறி தன்னுடைய வயல் நிலத்தை பார்வையிட புறப்பட்டார். தன் நிலத்தின் ஓரத்தில் வந்தவுடன் அவருக்கு இரத்தம் கொதிக்க ஆரம்பித்தது. ஏனென்றால், தன்னுடைய பண்ணையின் ஒதுக்குப்புறத்தில் யாரோ மீண்டும் சட்டவிரோதமாய் குப்பையை கொட்டியிருந்தனர். அந்த குப்பைகளை தன்னுடைய வாகனத்தில் ஏற்றிய அவர், அதில் ஒரு கடித உறையை கண்டுபிடித்தார். அந்த முகவரிக்கு நேராய் சென்று அந்த வீட்டின் தோட்டத்தில், அந்த குப்பைகளையும் அதோடு சேர்த்து தன்னுடைய குப்பைகளையும் அதில் கொட்டிவிட்டு வந்தார். 

பழிவாங்குதல் இனிமையானது என்று யாரோ சொன்னார்கள். ஆனால் அது சரியானதா? 1 சாமுவேல் 24இல் தாவீதும் அவனுடைய மனிதர்களும் தங்களை கொலைசெய்ய தேடும் சவுலிடத்திலிருந்து தப்பிக்க குகைக்குள் ஒளிந்துக்கொண்டனர். அதே குகையில் சவுல் வரும்போது தாவீதின் மனிதர்கள், தாவீது சவுலை பழிவாங்குவதற்கான சரியான வாய்ப்பாய் அதை கருதினர் (வச. 3-4). ஆனால் தாவீது அதை செய்யவில்லை. “என் ஆண்டவன் மேல் என் கையைப்போடும்படியான இப்படிப்பட்ட காரியத்தை நான் செய்யாதபடிக்கு, கர்த்தர் என்னைக் காப்பாராக” (வச. 6) என்று அவன் கூறுகிறான். தாவீது தனக்கு ஒன்றும் செய்யவில்லை என்று சவுல் அறிந்ததும், “நீ என்னைப் பார்க்கிலும் நீதிமான்” என்று உணர்ச்சிவசப்படுகிறான் (வச. 17-18). 

நாமோ அல்லது நம்மைச் சார்ந்தவர்களோ அநீதியை சந்திக்கும்போது, அதற்கு பழிவாங்குவதற்கான சரியான தருணம் நமக்கு வாய்க்கலாம். அந்த விவசாயி அதை தவறாய் பயன்படுத்தியதுபோல நாம் பயன்படுத்தப்போகிறோமா? அல்லது தாவீதைப் போன்று பழிவாங்குவதற்கு பதிலாக நீதியை பிரதிபலிக்கப்போகிறோமா?