அமெரிக்காவின் தெற்கு விர்ஜீனியா மாகாணத்தில் டிசம்பர் 6, 1907இல் ஏற்பட்ட வெடி விபத்து, நிலக்கரி சுரங்க வரலாற்றில் மிகவும் மோசமான ஒன்று. இந்த விபத்தில் 360பேர் பலியாயினர். இந்த கோர விபத்து, 250 பெண்களை விதவைகளாகவும் 1000 பிள்ளைகளை தகப்பனில்லாதவர்களாகவும் மாற்றியது. இந்த நினைவுநாளையே அமெரிக்க சரித்திர நிபுணர்கள் தகப்பனார்கள் தினமாய் கொண்டாடத்துவங்கினர். பெரிய இழப்பிலிருந்து நினைவுகூருதல் நிகழ்ந்தது. அது பின் மகிழ்ச்சியான தருணமாய் மாறியது.
மனிதர்கள் தங்கள் சிருஷ்டிகரை சிலுவையில் அறைந்த அவலம் மனித சரித்திரத்தின் பெரிய சோகம். இந்த இருண்ட நிகழ்வு நினைவுகூருதலையும் மகிழ்ச்சியினையும் தோற்றுவித்தது. சிலுவைக்கு போவதற்கு முன் தினம் இரவில், இஸ்ரவேலின் பஸ்காவை ஆசரித்த இயேசு தன்னுடைய நினைவு நாளையே ஆசரித்தார். லூக்காவின் பதிவு அதை இப்படியாய் விவரிக்கிறது. “பின்பு அவர் அப்பத்தை எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து: இது உங்களுக்காகக் கொடுக்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது; என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார்” (லூக்கா 22:19).
இன்றுவரை ஒவ்வொருமுறையும் கர்த்தருடைய பந்தியை நாம் ஆசரிக்கும்போதும் நமக்காக அவருடைய விரிசலில்லாத அன்பை நாம் கனப்படுத்துகிறோம். நம்மை மீட்டதற்கான விலைக்கிரயத்தையும் அவருடைய தியாகம் நமக்குக் கொடுத்த வாழ்க்கையையும் நினைவுகூருகிறோம். சார்லஸ் வெஸ்லி தன்னுடைய பாடல் ஒன்றில் “ஆச்சரியமான அன்பு! எனக்காய் என் தேவனே நீர் மரித்தது எப்படி!” என்று பாடியுள்ளார்.
ஒவ்வொருமுறையும் கர்த்தருடைய பந்தியை அனுசரிக்கும்போது நீங்கள் எப்படி உணருகிறீர்கள்? சிலுவையைத் தொடர்ந்து தியானிக்க என்ன வழிகள் உண்டு?
பிதாவே, கர்த்தருடைய பந்தியை ஆசரிக்க வரும்போது, என்னுடைய மன்னிப்பு எவ்வளவு விலையேறப்பெற்றது என்பதை நினைவுகூரவும் உம்முடைய மேன்மையான அன்பை உணரவும் எனக்கு உதவி செய்யும்.