என் சிநேகிதியுடனான மதிய உணவிற்கு பின், என் வீட்டிற்கு வரும் வழியில் அவருக்காய் சத்தமாய் தேவனிடத்தில் நன்றி சொன்னேன். நானே விரும்பாத என்னுடைய சில காரியங்களின் மத்தியிலும் அவள் என்னை நேசிக்கிறாள். என்னுடைய திறமைகள், சுபாவங்கள், எனக்கு பிடித்தவைகள் ஆகியவைகளை அறிந்த வெகு சிலரில் அவளும் ஒருத்தி. இருப்பினும் அவளிடத்திலும் மற்றவர்களிடத்திலும் நான் சொல்ல விரும்பாத என்னுடைய மறுபக்கம் சில உண்டு. நான் விரும்பத்தகாத நபராய், இரக்கமில்லாதவளாய், நேசிக்காதவளாய் இருந்த தருணங்கள் உண்டு.  

ஆனால் தேவனுக்கு என் முழு கதையும் தெரியும். மற்றவர்களிடம் பேசத்தயங்கும் விஷயத்தைக் கூட அவரிடம் நான் தயங்கமில்லாமல் பேசமுடியும். 

நம்முடைய சர்வ ஏகாதிபத்தியராகிய ஆண்டவரிடம் நமக்கு உள்ள உறவை சங்கீதம் 139 விவரிக்கிறது. அவருக்கு நம்மை முழுமையாய் தெரியும் (வச. 1). நம்முடைய வழிகளெல்லாம் அவருக்கு தெரியும் (வச. 3). அவர் நம்மை நம்முடைய குழப்பங்கள், கவலைகள், பாடுகள், சோதனைகள் ஆகியவைகளை எடுத்துக்கொண்டு அவரிடத்திற்கு வரும்படி அழைக்கிறார். நாம் அவரை முழுவதும் சார்ந்துகொள்ளும்போது, அவர் நம் வாழ்க்கையை மறுசீரமைக்கவும், நம்மை சோகத்தில் ஆழ்த்தும் நமது கதையை மாற்றி எழுதவும் அவரால் கூடும். 

மற்றெல்லாரைக் காட்டிலும் தேவன் நம்மை நன்றாய் அறிந்திருக்கிறார். அவர் இன்னும் நம்மை நேசிக்கிறார்! ஒவ்வொருநாளும் அவரிடத்தில் சரணடைந்து, அவரை முழுவதுமாய் அறிந்துகொள்ள முனையும்போது, அவருடைய நாமம் மகிமைக்காய் நம்முடைய கதையை மாற்றி எழுதுவார். அவர் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கும் ஒரு ஆசிரியர்.