“அவருடைய திட்டம் எனக்கு புரியவில்லை. என் வாழ்க்கை முழுவதும் அவரைத் தானே நம்பியிருந்தேன். கடைசியில் இப்படி நடந்துவிட்டதே.” ஒரு நல்ல ஓட்டப்பந்தய வீரனாய் மாறவேண்டும் என்னும் கனவை தற்காலிகமாய் தொலைத்த ஒரு மகன் தன் தாயாரிடத்தில் இப்படியாய் சொல்லுகிறான். எதிர்பாராத அல்லது வேதனை தரக்கூடிய சில அனுபவங்களை சந்தித்து கேள்வியோடும் ஆச்சரியத்தோடும் பயணிக்காதவர்கள் நம்மில் யாருண்டு? குடும்ப நபர்கள் திடீரென்று நம்மிடம் பேசுவதை நிறுத்திக்கொள்ளுகிறார்கள், உடல்நலக் குறைவு ஏற்படுகிறது, எதிர்பாராத விதமாய் அலுவலகம் இடமாற்றப்படுகிறது, வாழ்க்கையையே திசைதிருப்பும் விபத்து நேரிடுகிறது.
யோபுவின் வாழ்க்கையில் ஒன்றன்பின் ஒன்றாய் தொடர்ந்து நடந்த அசம்பாவிதங்கள், யோபு 1-2 அதிகாரங்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. யதார்த்தமாய் சொன்னால், பிரச்சனையே இல்லாத ஒரு வாழ்க்கை சூழல் கொண்ட ஒரு நபர் என்றால், அது யோபு தான். “உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாயிருந்தான்” (1:1). ஆனால் நாம் விரும்புகிற பாதையில் நம்முடைய வாழ்க்கையில் பயணிப்பதில்லை. யோபுக்கும் அப்படித்தான். நமக்கும் அப்படித்தான். அவனுடைய மனைவியே “தேவனைத் தூஷித்து ஜீவனை விடும்” (2:9) என்று அவனிடத்தில் சொல்லுகிறாள். யோபு அவளுக்கு பொருந்தக்கூடிய ஒரு ஞானமான பதிலை சொல்லுகிறான். அந்த பதில் நமக்கும் நேர்த்தியாய் பொருந்தும். நாம் சந்திக்கிற சிறியதோ அல்லது பெரிய பிரச்சனைகளோ “தேவன் கையிலே நன்மையைப் பெற்ற நாம் தீமையையும் பெறவேண்டாமோ என்றான்; இவைகள் எல்லாவற்றிலும் யோபு தன் உதடுகளினால் பாவஞ்செய்யவில்லை” (வச. 10).
நம்முடைய கடினமான வாழ்க்கைச் சூழ்நிலையிலும் தேவன் எப்படி கிரியை செய்கிறார் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியவில்லையென்றாலும், அவருடைய பெலத்தினாலே, நம்முடைய நம்பிக்கையும் கனமும் குறையாமல் இருக்கக்கடவது.
தேவன் மீதான உங்கள் விசுவாசம் எப்போது சோதனைக்கு உள்ளாக்கப்பட்டது? கடினமான சூழ்நிலைகளில் அவர் மீதான உங்கள் கனம் குறையாமலிருக்கும்பொருட்டு அவர் என்ன செய்தார்?
பிதாவே, உம்முடைய கரத்தை நான் காணாதபோதும், உம்முடைய திட்டத்தை நான் உணராதபோதும், அதை நம்புவதற்கும் கனப்படுத்துவதற்கும் எனக்கு உதவிசெய்யும்.