நமது அப்பாவின் அக்கறை
நான்! சத்தம் வந்த திசையில் திரும்பிப்பார்த்தேன். என் வீட்டு ஜன்னல் கண்ணாடியில் ஏதோ மோதி விழுந்த அழுக்குத்தடம் தெரிந்தது. வெளியே எட்டிப்பார்த்தேன். பறவையொன்று கீழேவிழுந்து துடித்துக்கொண்டிருந்தது. என் மனது வலித்தது. சிறகொடிந்த அந்த பறவைக்கு உதவிசெய்ய ஏங்கினேன்.
மத்தேயு 10இல், வரப்போகிற அழிவைக் குறித்து எச்சரிக்கப்பட்ட சீஷர்களை ஆறுதல்படுத்தும் நோக்கத்துடன் இயேசு, அடைக்கலான் குருவி மீதும் அக்கறைக்காட்டும் பிதாவைக் குறித்து தெரிவிக்கிறார். இயேசு, “தம்முடைய பன்னிரண்டு சீஷர்களையும் தம்மிடத்தில் வரவழைத்து, அசுத்த ஆவிகளைத் துரத்தவும், சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கவும் அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்” (வச. 1). சீஷர்களுக்கு அருளப்பட்ட இந்த வல்லமை அதிகமாய் தெரிந்தாலும், அதினிமித்தம் அவர்கள் அதிகாரத்திலுள்ள பலரால் பகைக்கப்படுவார்கள், தன் சொந்த குடும்பத்தினரால் வெறுக்கப்படுவார்கள்; தீமையின் விளிம்பில் நிறுத்தப்படுவார்கள் என்றும் எச்சரிக்கப்படுகின்றனர் (வச. 16-28).
பின்பு 10:29-31இல் இயேசு, எந்த இக்கட்டான சூழ்நிலையிலும் அவர்களை பயப்படவேண்டாம் என்றும் அவர்கள் தேவனுடைய பாதுகாப்பிலிருந்து என்றுமே விலகவில்லை என்றும் அறிவுறுத்துகிறார். “ஒரு காசுக்கு இரண்டு அடைக்கலான் குருவிகளை விற்கிறார்கள் அல்லவா?” என்று கேட்கிறார். “ஆயினும் உங்கள் பிதாவின் சித்தமில்லாமல், அவைகளில் ஒன்றாகிலும் தரையிலே விழாது... ஆதலால், பயப்படாதிருங்கள்; அநேகம் அடைக்கலான் குருவிகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷத்தவர்களாயிருக்கிறீர்கள்” என்று உறுதிகொடுக்கிறார்.
ஜன்னலுக்கு கீழே விழுந்த அந்த பறவையை அடிக்கடி கண்காணித்தேன். அது உயிரோடுதான் இருந்தது. ஆனால் கொஞ்சமும் அசையவில்லை. மாலையில் அது பறந்துபோய்விட்டது. அது உயிர்பிழைக்கவேண்டும் என்று நான் வேண்டிக்கொண்டேன். ஒரு பறவைக்காக நானே இந்த அளவிற்கு அக்கறை எடுத்துக்கொள்வேன் என்றால், தேவன் இதைவிட அதிகமாய் அக்கறை செலுத்துவது அதிக நிச்சயம். அவர் நம்மீது எந்த அளவிற்கு அக்கறைக் காட்டுகிறார் என்பதை சற்று கற்பனை செய்துபாருங்கள்!
தேவனுடைய வல்லமை
ரெபேக்கா மற்றும் ரஸ்ஸல் தம்பதியினருக்கு குழந்தை பிறப்பதற்கு இனி வாய்ப்பில்லை என்று அவர்களுடைய மருத்துவர் கூறிவிட்டார். ஆனால் தேவனுடைய சித்தம் வேறு. பத்து ஆண்டுகள் கழித்து ரெபேக்கா கர்ப்பந்தரித்தாள். கர்ப்பகாலம் ஆரோக்கியமாகவே இருந்தது. பிரசவவலி துவங்கியதும் மருத்துமனைக்கு விரைந்தனர். பிரசவ வலி தீவிரமாய் அதிகரித்தது. ஆனால் குழந்தைபெற்றெடுக்கும் அளவிற்கு அவளுடைய சரீரம் இன்னும் ஒத்துழைக்கவில்லை. கடைசியில், அறுவைசிகிச்சை மூலமாய் குழந்தையை வெளியில் எடுக்க மருத்துவர்கள் தீர்மானித்தனர். ரெபேக்கா தன் குழந்தையைக் குறித்தும் தன்னைக் குறித்தும் துக்கமடைந்திருந்தாள். அவளிடம் உறுதியளித்த மருத்துவர், “என்னால் இயன்றதைச் செய்கிறேன்; மற்றபடி, நாங்கள் தேவனிடத்தில் வேண்டிக்கொள்கிறோம், அவரால் இன்னும் அதிகமாய் செய்யமுடியும்” என்று கூறினார். மருத்துவர் ரெபேக்காவோடு சேர்ந்து ஜெபித்தார். பதினைந்தே நிமிடங்களில், ப்ரூஸ் என்னும் ஆரோக்கியமான ஆண் குழந்தை பிறந்தது.
அவள் தேவனையும் அவருடைய வல்லமையையும் சார்ந்திருப்பதை மருத்துவர் அறிந்திருந்தார். அறுவைசிகிச்சை செய்ய தேவையான அறிவும் திறமையும் மருத்துவரிடத்தில் இருந்தாலும், அவர் தேவ ஞானத்தையும், பெலத்தையும், தன் கைகளை இயக்கும் உதவியையும் தேவனிடத்தில் கேட்டார் (சங். 121:1-2).
மிகவும் திறமையான நபர்கள் தேவனுடைய உதவியை நாடுவதை கேள்விப்படும்போது நாம் உற்சாகமடைகிறோம். ஏனெனில், நமக்கும் அது நிச்சயமாய் தேவை. நாம் அல்ல, அவரே தேவன். “நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய்” (எபேசியர் 3:20) நம்மில் கிரியை செய்ய அவரால் மட்டுமே முடியும். அவரிடத்தில் கற்றுக்கொள்ள நம்முடைய இருதயத்தை தாழ்த்தி, ஜெபத்தில் நம் விசுவாசத்தை பிரதிபலிப்போம். ஏனெனில் நாமெல்லோரைக் காட்டிலும் அவரால் அதிகம் செய்யமுடியும்.
தேவனுடைய ராஜ்யம்
என்னுடைய தாயார் அவருடைய வாழ்நாளில் பல்வேறு காரியங்களில் ஈடுபட்டிருந்தாலும், சிறு பிள்ளைகளுக்கு இயேசுவை அறிவிப்பதில் அதிக ஆர்வம் காண்பித்தார். தேவையில்லாத செலவு என்று சிறுவர் ஊழியத்திற்கு சபை ஓதுக்கிய நிதியை தடைசெய்ய சிலர் முயற்சி செய்தபோது, தன்னுடைய கருத்துவேறுபாட்டை எனது தாயார் வெளிப்படையாய் முன்வைத்ததை நானே பார்த்திருக்கிறேன். “என்னுடைய பிரசவகாலத்தில் ஒரேயொரு கோடைவிடுமுறையில் மட்டும் இந்த ஊழியத்தை நான் தவிர்க்கநேரிட்டது, அவ்வளவுதான்” என்று என் தாயார் என்னிடத்தில் கூறியிருக்கிறார். என்னுடைய கணக்கின்படி, எனது தாயார் தொடர்ந்து 55 ஆண்டுகள் இந்த ஊழியத்தை சபை மூலமாக செய்து வருகிறார்.
இயேசு சிறுபிள்ளைகளைச் சந்திக்கும் சுவிசேஷத்தின் பிரபலமான சம்பவம் மாற்கு 10ஆம் அதிகாரத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அதில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை இயேசுவிடம் ஆசீர்வாதம் பெறும்படிக்கு கொண்டுவருகிறார்கள். ஆனால் அவர்கள் இயேசுவை நெருங்கவிடாமல் சீஷர்கள் தடைசெய்தனர். அதைக் கண்டு இயேசு விசனமடைந்தார் என்று மாற்கு பதிவுசெய்கிறார். அத்துடன் தன் சீஷர்களை நோக்கி, “சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்; அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்; தேவனுடைய ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது” (வச. 14) என்று கடிந்துகொள்கிறார்.
சார்லஸ் டிக்கன்ஸ் இப்படியாக எழுதுகிறார், “இந்த சிறுவர்களை நான் நேசிக்கிறேன்; தேவனால் அருளப்பட்ட இந்த புதிய வரவுகள் நம்மை நேசிப்பது சாதாரண விஷயம் கிடையாது.” அதேபோன்று மூத்தவர்களாகிய நாம் கிறிஸ்துவின் அன்பிலிருந்து சிறுவர்களை இடறப்பண்ணுகிற செயல்களைச் செய்யாமல் கவனமாய் இருப்பதும் சாதாரண விஷயமல்ல.
உன் பெயர் அவருக்கு தெரியும்
வெகுநாளாய் நாங்கள் போகாமல் இருந்த எங்கள் திருச்சபைக்கு மூன்று ஆண்டுகள் கழித்து நானும் எனது கணவரும் போகத் தீர்மானித்தோம். மக்கள் எங்களை எப்படி நடத்துவார்கள்? மறுபடியும் எங்களை எப்படி வரவேற்பார்கள்? எப்படி நேசிப்பார்கள்? சபையை விட்டுச் சென்றதை மன்னிப்பார்களா? இந்த கேள்விகளுக்கெல்லாம் அந்த ஞாயிற்றுக் கிழமை காலையிலே பதில் கிடைத்தது. சபைக்குள்ளே நாங்கள் நுழைந்தபோது, எங்கள் பெயர்கள் தொடர்ந்து எங்கள் காதுகளில் ஒலித்தது. “பாட்! டான்! உங்களை சந்தித்தது மிக்க மகிழ்ச்சி!” என்று மகிழ்ச்சியோடு வரவேற்றனர். மிகவும் புகழ்பெற்ற எழுத்தாளர் சிறுவர்களுக்காய் எழுதிய புத்தகமொன்றில், “வாசகர்களே, இந்த சோகமான உலகத்தில், நீங்கள் விரும்பும் நபர் உங்களை பேர்ச்சொல்லி அழைப்பதைக் காட்டிலும் இன்பம் வேறொன்றுமில்லை” என்கிறார்.
தேவன் அதேபோன்று ஒரு உறுதியை இஸ்ரவேல் ஜனத்திற்கு கொடுத்துள்ளார். நாங்கள் தற்காலிகமாக வேறொரு திருச்சபையைத் தேர்ந்தெடுத்தோம், ஆனால் இஸ்ரவேலர்கள் தேவனை விட்டு விலகினார்கள். ஆனாலும் தேவன் அவர்களை மீண்டும் வரவேற்றார். அவர் ஏசாயா தீர்க்கதரிசியை அவர்களிடம் அனுப்பி, “பயப்படாதே, உன்னை மீட்டுக்கொண்டேன் ; உன்னைப்பேர்சொல்லி அழைத்தேன்; நீ என்னுடையவன்” (ஏசாயா 43:1) என்று உறுதிகொடுத்தார்.
இந்த உலகத்தில் நாம் கண்டுகொள்ளப்படாதவர்களாய், பாராட்டப்படாதவர்களாய், கவனிக்கப்படாதவர்களாய் இருக்கலாம். ஆனால் தேவன் நம் ஒவ்வொருவரையும் பேர்பேராய் அறிந்திருக்கிறார். “நீ என் பார்வைக்கு அருமையானபடியினால், கனம்பெற்றாய்” (வச. 4) என்று வாக்களிக்கிறார். “நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்; நீ ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை” (வச. 2). இது இஸ்ரவேலுக்கு மட்டும் கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தம் அல்ல. இயேசு தன்னுடைய வாழ்க்கையையே நமக்காய் பலியாய் கொடுத்துள்ளார். அவருக்கு நம்முடைய பெயர்கள் தெரியும். ஏன்? அன்பில் நாம் அவருக்கு சொந்தமானவர்கள்.