ரெபேக்கா மற்றும் ரஸ்ஸல் தம்பதியினருக்கு குழந்தை பிறப்பதற்கு இனி வாய்ப்பில்லை என்று அவர்களுடைய மருத்துவர் கூறிவிட்டார். ஆனால் தேவனுடைய சித்தம் வேறு. பத்து ஆண்டுகள் கழித்து ரெபேக்கா கர்ப்பந்தரித்தாள். கர்ப்பகாலம் ஆரோக்கியமாகவே இருந்தது. பிரசவவலி துவங்கியதும் மருத்துமனைக்கு விரைந்தனர். பிரசவ வலி தீவிரமாய் அதிகரித்தது. ஆனால் குழந்தைபெற்றெடுக்கும் அளவிற்கு அவளுடைய சரீரம் இன்னும் ஒத்துழைக்கவில்லை. கடைசியில், அறுவைசிகிச்சை மூலமாய் குழந்தையை வெளியில் எடுக்க மருத்துவர்கள் தீர்மானித்தனர். ரெபேக்கா தன் குழந்தையைக் குறித்தும் தன்னைக் குறித்தும் துக்கமடைந்திருந்தாள். அவளிடம் உறுதியளித்த மருத்துவர், “என்னால் இயன்றதைச் செய்கிறேன்; மற்றபடி, நாங்கள் தேவனிடத்தில் வேண்டிக்கொள்கிறோம், அவரால் இன்னும் அதிகமாய் செய்யமுடியும்” என்று கூறினார். மருத்துவர் ரெபேக்காவோடு சேர்ந்து ஜெபித்தார். பதினைந்தே நிமிடங்களில், ப்ரூஸ் என்னும் ஆரோக்கியமான ஆண் குழந்தை பிறந்தது. 

அவள் தேவனையும் அவருடைய வல்லமையையும் சார்ந்திருப்பதை மருத்துவர் அறிந்திருந்தார். அறுவைசிகிச்சை செய்ய தேவையான அறிவும் திறமையும் மருத்துவரிடத்தில் இருந்தாலும், அவர் தேவ ஞானத்தையும், பெலத்தையும், தன் கைகளை இயக்கும் உதவியையும் தேவனிடத்தில் கேட்டார் (சங். 121:1-2).       

மிகவும் திறமையான நபர்கள் தேவனுடைய உதவியை நாடுவதை கேள்விப்படும்போது நாம் உற்சாகமடைகிறோம். ஏனெனில், நமக்கும் அது நிச்சயமாய் தேவை. நாம் அல்ல, அவரே தேவன். “நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய்” (எபேசியர் 3:20) நம்மில் கிரியை செய்ய அவரால் மட்டுமே முடியும். அவரிடத்தில் கற்றுக்கொள்ள நம்முடைய இருதயத்தை தாழ்த்தி, ஜெபத்தில் நம் விசுவாசத்தை பிரதிபலிப்போம். ஏனெனில் நாமெல்லோரைக் காட்டிலும் அவரால் அதிகம் செய்யமுடியும்.