என்னுடைய தாயார் அவருடைய வாழ்நாளில் பல்வேறு காரியங்களில் ஈடுபட்டிருந்தாலும், சிறு பிள்ளைகளுக்கு இயேசுவை அறிவிப்பதில் அதிக ஆர்வம் காண்பித்தார். தேவையில்லாத செலவு என்று சிறுவர் ஊழியத்திற்கு சபை ஓதுக்கிய நிதியை தடைசெய்ய சிலர் முயற்சி செய்தபோது, தன்னுடைய கருத்துவேறுபாட்டை எனது தாயார் வெளிப்படையாய் முன்வைத்ததை நானே பார்த்திருக்கிறேன். “என்னுடைய பிரசவகாலத்தில் ஒரேயொரு கோடைவிடுமுறையில் மட்டும் இந்த ஊழியத்தை நான் தவிர்க்கநேரிட்டது, அவ்வளவுதான்” என்று என் தாயார் என்னிடத்தில் கூறியிருக்கிறார். என்னுடைய கணக்கின்படி, எனது தாயார் தொடர்ந்து 55 ஆண்டுகள் இந்த ஊழியத்தை சபை மூலமாக செய்து வருகிறார்.

இயேசு சிறுபிள்ளைகளைச் சந்திக்கும் சுவிசேஷத்தின் பிரபலமான சம்பவம் மாற்கு 10ஆம் அதிகாரத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அதில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை இயேசுவிடம் ஆசீர்வாதம் பெறும்படிக்கு கொண்டுவருகிறார்கள். ஆனால் அவர்கள் இயேசுவை நெருங்கவிடாமல் சீஷர்கள் தடைசெய்தனர். அதைக் கண்டு இயேசு விசனமடைந்தார் என்று மாற்கு பதிவுசெய்கிறார். அத்துடன் தன் சீஷர்களை நோக்கி, “சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்; அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்; தேவனுடைய ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது” (வச. 14) என்று கடிந்துகொள்கிறார்.

சார்லஸ் டிக்கன்ஸ் இப்படியாக எழுதுகிறார், “இந்த சிறுவர்களை நான் நேசிக்கிறேன்; தேவனால் அருளப்பட்ட இந்த புதிய வரவுகள் நம்மை நேசிப்பது சாதாரண விஷயம் கிடையாது.” அதேபோன்று மூத்தவர்களாகிய நாம் கிறிஸ்துவின் அன்பிலிருந்து சிறுவர்களை இடறப்பண்ணுகிற செயல்களைச் செய்யாமல் கவனமாய் இருப்பதும் சாதாரண விஷயமல்ல.