நான்கு சிற்றாலய போதகர்கள் கதாநாயகர்களாய் அறியப்படவில்லை. ஆனால் இரண்டாம் உலகப் போரின்போது, 1943 ஆம் ஆண்டு பிப்ரவரி இரவு, எஸ்.எஸ். டோர்செஸ்டர் என்னும் அவர்களின் போக்குவரத்துக் கப்பல், கிரீன்லாந்து கடற்கரையில் தாக்கப்பட்டது. இந்த நான்கு பேரும் பீதியடைந்த நூற்றுக்கணக்கான வீரர்களை அமைதிப்படுத்த முயற்சி செய்தனர். கப்பல் மூழ்கிக்கொண்டிருக்க, காயமடைந்த நபர்கள் நெரிசலான உயிர் காக்கும் படகுகளில் குதித்தனர். இந்த நான்கு போதகர்களும் அமைதியாய் “தைரியத்தைப் பிரசங்கித்து” குழப்பத்தை அமைதிப்படுத்தினர் என்று உயிர் பிழைத்த ஒருவர் கூறுகிறார்.

உயிர்காக்கும் லைஃப் ஜாக்கெட்டுகள் தீர்ந்துபோனபோது, இவர்கள் நால்வரும் தங்களுடையதை கழற்றி, பயந்துபோன ஒரு இளைஞனுக்குக் கொடுத்தனர். மற்றவர்கள் வாழும்படி அவர்கள் கப்பலுடன் மூழ்க தீர்மானித்தார்கள். அதில் தப்பிப்பிழைத்த ஒருவர், “இது நான் பார்த்த மிகச் சிறந்த விஷயம், அல்லது பரலோகத்தின் இந்தப் பக்கத்தைப் பார்க்க வாஞ்சிக்கிறேன்” என்று கூறுகிறார்.

கப்பல் மூழ்கத் தொடங்கியவுடன் தங்கள் கரங்களைக் கோர்த்து, இந்த நான்கு போதகர்களும்  ஒன்றாக ஜெபித்து, அவர்களுடன் அழிந்துபோகிறவர்களுக்கு ஊக்கத்தை அளித்தனர்.

துணிச்சல் அவர்களின் வீரமிகு சாதனையைக் குறிக்கிறது. இருப்பினும், அன்பானது நான்குபேர் வழங்கிய இந்த பரிசை வரையறுக்கிறது. கொரிந்துவில் புயலால் தாக்கப்பட்ட தேவாலயத்தில் உள்ளவர்கள் உட்பட அனைத்து விசுவாசிகளிடமும் இதுபோன்ற அன்பை பவுல் வலியுறுத்தினார். மோதல், ஊழல் மற்றும் பாவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பவுல் “விழித்திருங்கள், விசுவாசத்திலே நிலைத்திருங்கள், புருஷராயிருங்கள், திடன்கொள்ளுங்கள்” என்று வலியுறுத்தினார் (1கொரிந்தியர 16:13). பின்னர் அவர், “உங்கள் காரியங்களெல்லாம் அன்போடே செய்யப்படக்கடவது.” (வச.14) என்றும் வலியுறுத்தினார்.

இயேசுவில் உள்ள ஒவ்வொரு விசுவாசிக்கும், குறிப்பாக ஒரு நெருக்கடியின் போது இது ஒரு உத்தமமானக் கட்டளை. கிறிஸ்துவைப் பிரதிபலிப்பதும் மற்றவர்களுக்கு அவருடைய அன்பைக் கொடுப்பதுமே வாழ்க்கையில் பிரச்சனைகள் அச்சுறுத்தும் போது நம்முடைய துணிச்சலான பதிலாய் இருக்கட்டும்.