போதுமான சூரிய ஒளி மற்றும் தண்ணீர் இருந்தால், கலிபோர்னியாவின் காட்டுப்பூக்கள் விளையும் பகுதிகளான ஆன்டெலோப் பள்ளத்தாக்கு மற்றும் ஃபிகியூரோவா மலை போன்றவை செழிப்பாக இருக்கும். ஆனால் வறட்சி ஏற்பட்டால் என்ன ஆகும்? விஞ்ஞானிகள் சில காட்டுப்பூக்கள் மண்ணின் வழியாக முளைத்து பூக்க அனுமதிக்காமல், அவற்றின் விதைகளை பெருமளவில் நிலத்தடியில் சேமித்து வைத்திருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். வறட்சிக்குப் பிறகு, தாவரங்கள் தாங்கள் சேமித்த விதைகளைப் பயன்படுத்தி மீண்டும் செழிக்கத் தொடங்குகின்றன.

பண்டைய இஸ்ரவேலர் கடுமையான நிலைமைகளை மீறி எகிப்து தேசத்தில் செழித்து வளர்ந்தனர். அடிமைகளாயிருந்த இவர்களை வயல்களில் வேலை செய்யவும் செங்கற்களை தயாரிக்கவும் எகிப்தியர்கள் கட்டாயப்படுத்தினர். இரக்கமற்ற இந்த எகிப்திய கண்காணிகள், பார்வோனுக்கு முழு நகரத்தையும் கட்டுவதற்கு அவர்களை கட்டாயப்படுத்தினர். எகிப்தின் மன்னர் சிசுக்கொலையை நடைமுறைப்படுத்தினான். ஆயினும், தேவன் அவர்களை பாதுகாத்ததால், “அவர்களை எவ்வளவு ஒடுக்கினார்களோ அவ்வளவாய் அவர்கள் பலுகிப் பெருகினார்கள்” (யாத்திராகமம் 1:12). பல வேத அறிஞர்கள் இஸ்ரவேலின் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளின் மக்கள் தொகை எகிப்தில் இருந்த காலத்தில் இரண்டு மில்லியனாக (அல்லது அதற்கு மேற்பட்டதாக) இருந்தது என்று மதிப்பிடுகின்றனர்.

அப்போது தம் மக்களைப் பாதுகாத்த தேவன், இன்றும் நம்மை ஆதரிக்கிறார். எந்த சூழலிலும் அவர் நமக்கு உதவ முடியும். இன்னொரு கடினமான சூழ்நிலையை சகித்துக்கொள்வது பற்றி நாம் ஒருவேளை கவலைப்படலாம். ஆனால், “இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படும் காட்டு புல்லுக்கு” தேவன் கரிசனையுடன் இருந்தால் நம் தேவைகளை அவர் கண்டிப்பாக பூர்த்தி செய்ய முடியும் என்று வேதம் நமக்கு உறுதியளிக்கிறது (மத்தேயு 6:30).