தேனை விட மதுரமானது
அக்டோபர் 1893இல் சிகாகோ தினத்தில் நகரத்தின் திரையரங்குகள் மூடப்பட்டன. ஏனெனில் அனைவரும் உலக கண்காட்சியில் கலந்து கொள்வார்கள் என்று உரிமையாளர்கள் கண்டறிந்தனர். ஏழு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் சென்றனர். ஆனால் சிகாகோவின் மறுமுனையில் டுவைட் மூடி (1837–1899) ஒரு இசை மண்டபத்தை பிரசங்கத்தாலும், போதனையாலும் நிரப்ப விரும்பினார். கண்காட்சியின் அதே நாளில் மூடியால் ஒரு கூட்டத்தை ஈர்க்க முடியுமா என்று அவரது நண்பர் ஆர். ஏ. டோரே (1856-1928) சந்தேகப்பட்டார். ஆனால் தேவனுடைய கிருபையால், அவர் செய்து காட்டினார். கூட்டம் ஏன் வந்ததென்றால் “இந்த பழைய உலகம் அறிய விரும்பும் ஒரு புத்தகம்-வேதம்” என்பதை மூடி அறிந்திருந்தார் என்று, பின்னர் டோரே கூறிமுடித்தார். மூடியைப் போலவே மற்றவர்களும் வேதாகமத்தை நேசிக்க வேண்டுமென்றும், அதை அர்ப்பணிப்புடனும் ஆர்வத்துடனும் தவறாமல் வாசிக்க வேண்டுமென்றும் டோரி விரும்பினார்.
சிகாகோவில், பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் தேவன் தம்முடைய ஆவியின் மூலம் தன் ஜனங்களைத் தன்னிடம் கொண்டுவந்தார். இன்றும் அவர் தொடர்ந்து பேசுகிறார். சங்கீதக்காரன் தேவன் மீதும் அவருடைய வேதவசனங்களின் மீதும் கொண்டிருந்த அன்பை நாமும் பிரதிபலிக்கமுடியும். “உம்முடைய வார்த்தைகள் என் நாவுக்கு எவ்வளவு இனிமையானவைகள்; என் வாய்க்கு அவைகள் தேனிலும் மதுரமாயிருக்கும்” (சங்கீதம் 119:103). சங்கீதக்காரனைப் பொறுத்தவரை தேவனுடைய கிருபை மற்றும் சத்தியம் அவரது பாதைக்கு ஒரு வெளிச்சமாகவும் அவரது கால்களுக்கு ஒரு தீபமாகவும் செயல்பட்டன (வச. 105).
நீங்கள் எவ்வாறு மீட்பரிலும் அவருடைய செய்தியிலும் கொண்டுள்ள அன்பில் இன்னும் அதிகமாய் வளர முடியும்? நாம் வேதத்தில் நம்மை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ளும்போது, தேவன் நாம் அவரிடம் கொண்டுள்ள அர்ப்பணிப்பை அதிகரிக்கச் செய்து நமக்கு வழிகாட்டுவார், நாம் நடந்து செல்லும் பாதைகளில் அவருடைய ஒளியைப் பிரகாசிக்கப்பண்ணுவார்.
தேவன் செயல்பட்டு கொண்டிருக்கிறார்
“தேவன் அழுகிறார்” பில் ஹேலியின் பத்து வயது மகள் இயேசுவில் பலதரப்பட்ட விசுவாசிகள் குழுவுடன் மழையில் நின்றபோது முணுமுணுத்த வார்த்தைகள் அவை. அவர்கள் தேவனைத் தேடவும், அமெரிக்காவிலுள்ள இன வேறுபாட்டின் மரபுகளை புரிந்துக்கொள்ளவும் வந்திருந்தனர். முன்னாள் அடிமைகள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அவர்கள் நின்றபோது அவர்கள் ஜெபத்தில் கைகோர்த்தார்கள். பின்னர் திடீரென்று காற்று வீசத் தொடங்கியது மழை பெய்யத் தொடங்கியது. தலைவர் இனரீதியான ஒற்றுமைக்காக அழைப்புவிடுத்தபோது மழை இன்னும் அதிகமாக பெய்யத் தொடங்கியது. ஒற்றுமையையும், மன்னிப்பையும் கொண்டுவருவதற்காக தேவன் செயல்பட்டு கொண்டிருக்கிறார் என கூடிவந்தவர்கள் நம்பினர்.
கல்வாரியிலும் அப்படியே நடந்தது - தேவன் செயல்பட்டு கொண்டிருந்தார். சிலுவையில் அறையப்பட்ட இயேசு தனது கடைசி சுவாசத்தை சுவாசித்தபோது, “பூமியும் அதிர்ந்தது, கன்மலைகளும் பிளந்தது, கல்லறைகளும் திறந்தது” (மத்தேயு 27: 51-52). இயேசு யார் என்பதை சிலர் நிராகரித்தாலும் அவரைக் காவல்செய்ய நியமிக்கப்பட்ட ஒரு நூற்றுக்கதிபதி வேறு முடிவெடுத்திருந்தார். “நூற்றுக்கு அதிபதியும், அவனோடேகூட இயேசுவைக் காவல்காத்திருந்தவர்களும், பூமியதிர்ச்சியையும் சம்பவித்த காரியங்களையும் கண்டு, மிகவும் பயந்து: மெய்யாகவே இவர் தேவனுடைய குமாரன் என்றார்கள்.” (வச. 54)
இயேசுவின் மரணத்தில் தேவன் தன்னை விசுவாசிக்கின்ற அனைவருக்கும் பாவ மன்னிப்பை வழங்கும் வேலையில் இருந்தார். “தேவன் உலகத்தாருடைய பாவங்களை எண்ணாமல் கிறிஸ்துவுக்குள் அவர்களைத் தமக்கு ஒப்புரவாக்கி…” (2 கொரிந்தியர் 5:19). ஒருவருக்கொருவர் மன்னிப்பை வழங்குவதை விட தேவனால் மன்னிக்கப்பட்டுள்ளோம் என்பதை நிரூபிக்க சிறந்த வழி வேறென்னென இருக்க முடியும்?
அன்பான கடிந்துகொள்ளுதல்
ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக என் அப்பா தனது படதொகுப்பில் சிறந்து விளங்க முயன்றார். அவரது ஆர்வம் தவறுகளைத் தேடுவது மட்டுமல்ல, தெளிவு, தர்க்கம், நிலையான ஓட்டம் மற்றும் இலக்கணம் ஆகியவற்றின் அடிப்படையில் நகலை சிறந்ததாக்குவதாகும். அப்பா தனது திருத்தங்களை குறிப்பிட சிவப்பு நிற எழுதுகோலை விட ஒரு பச்சை எழுதுகோலையே பயன்படுத்தினார். பச்சை எழுதுகோலை “நட்பாக” அவர் உணர்ந்தார். அதே நேரத்தில் சிவப்பு நிற அடிக்கோடுகள் ஒரு புதிய அல்லது நம்பிக்கையற்ற எழுத்தாளரைக் பதற்றமளிக்கும் என்றெண்ணினார். ஒரு சிறந்த வழியை மென்மையாகச் சுட்டிக்காட்டுவதே அவரது நோக்கம்.
இயேசு மக்களை கடிந்துக்கொண்டபோது, அன்பில் அவர் அவ்வாறு செய்தார். சில சூழ்நிலைகளில்-பரிசேயர்களின் மாய்மாலத்தை அவர் எதிர்கொண்டது போன்றவற்றில் (மத்தேயு 23) - அவர் அவர்களைக் கடுமையாகக் கண்டித்தார், ஆனாலும் அவர்களுடைய நலனுக்காகதான். ஆனால் அவரது தோழியான மார்த்தாளின் விஷயத்தில் ஒரு மென்மையான கடிந்துக்கொள்ளுதல் மட்டுமே தேவைப்பட்டது (லூக்கா 10: 38–42). அவருடைய கண்டிப்புக்கு பரிசேயர்கள் மோசமாக பதிலளித்தாலும் மார்த்தாள் அவருடைய அன்பான சிநேகிதர்களில் ஒருவராக இருந்தார். (யோவான் 15:31-32).
திருத்தம் சங்கடமாக இருக்கக்கூடும், நம்மில் சிலர் இதை விரும்புகிறோம். சில நேரங்களில், நமது பெருமை காரணமாக, அதை சந்தோஷமாகப் பெறுவது கடினம். நீதிமொழிகள் புத்தகம் ஞானத்தைப் பற்றி அதிகம் பேசுகிறது, மேலும் “கடிந்து கொள்ளுதலைக் கேட்பது” ஞானத்திற்கும் புரிதலுக்கும் ஒரு அடையாளம் என்றும் குறிக்கிறது. (15: 31-32).
தேவனுடைய அன்பான கடிந்துக்கொள்ளுதல் நம் திசையை சரிசெய்யவும், அவரை மிகவும் நெருக்கமாக பின்பற்றவும் உதவுகிறது. அதை மறுப்பவர்கள் கடுமையாக எச்சரிக்கப்படுகிறார்கள் (வச. 10), ஆனால் பரிசுத்த ஆவியின் வல்லமையின் மூலம் அதற்கு பதிலளிப்பவர்கள் ஞானத்தையும் புத்தியையும் பெறுவார்கள் (வச. 31-32).
ஊதா சால்வை
எனது வீட்டிலிருந்து நூற்றுக்கணக்கான மைல் தொலைவில் உள்ள ஒரு புற்றுநோய் மையத்தில் எனது அம்மாவின் நேரடி பராமரிப்பாளராக சேவை செய்யும்போது எங்களுக்காக ஜெபிக்கும்படி மக்களிடம் கேட்டேன். மாதங்கள் செல்லச் செல்ல தனிமைப்படுத்தல் மற்றும் தனிமை உணர்வு என் வலிமையைக் குறைத்தன. நான் என் உடல், மன மற்றும் உணர்ச்சி சோர்வுக்கு ஆளானால் நான் எப்படி என் அம்மாவை கவனித்துக்கொள்ள முடியும்?
ஒரு நாள் எனது நண்பர் ஒருவர் எதிர்பாராத பராமரிப்புத் தொகுப்பை எனக்கு அனுப்பினார். என் நண்பர் கைப்பின்னலாலான ஒரு ஊதா நிற ஜெப சால்வையை வைத்திருந்தார், தினமும் எங்களுக்காக மக்கள் ஜெபிக்கிறார்கள் என்பதன் அன்பான நினைவூட்டல் அது. அந்த மென்மையான நூலை என் தோள்களில் சுற்றிக்கொண்ட போதெல்லாம் தேவன் தன் ஜனத்தின் ஜெபங்களால் என்னைக் கட்டிப்பிடிப்பதை உணர்ந்தேன். பல வருடங்கள் கழித்தும் அவர் அந்த ஊதா நிற சால்வையை எனக்கு ஆறுதலளிக்கவும், எனது தீர்மானத்தை பலப்படுத்தவும் பயன்படுத்துகிறார்.
மற்றவர்களுக்காக ஜெபிப்பதின் – முக்கியத்துவத்தையும், அதன் ஆவி-புத்துணர்ச்சியூட்டும் வல்லமையையும் அப்போஸ்தலர் பவுல் உறுதிப்படுத்தினார். தனது பிரயாணங்களின்போது ஜெபமுள்ள ஆதரவையும், ஊக்கத்தையும் கோருவதன் மூலம் மற்றவர்களுக்காக ஜெபிப்பவர்கள் எவ்வாறு ஊழியத்தில் பங்காளிகளாக மாறுகிறார்கள் என்பதை பவுல் விளங்கப்பண்ணினார் (ரோமர் 15:30). குறிப்பிட்ட கோரிக்கைகளை முன்வைப்பது என்பது அப்போஸ்தலன் சக விசுவாசிகளின் ஆதரவை சார்ந்த்திருப்பதைக் காட்டியது மட்டுமல்லாமல் தேவன் ஜெபத்திற்கு வல்லமையான முறையில் பதிலளிக்கிறார் என்ற நம்பிக்கையையும் காட்டுகிறது (வச. 31-33).
தனிமையாக உணரும் நாட்களை நாம் அனைவரும் அனுபவிப்போம். ஆனால், நாம் மற்றவர்களுக்காக ஜெபிப்பது போல நமக்காக மற்றவர்களிடம் ஜெபிக்க கேட்பது எப்படி என்பதை பவுல் நமக்குக் காட்டுகிறார். தேவனுடைய ஜனங்களின் பரிந்துபேசும் ஜெபங்களினால் நாம் மூடப்பட்டிருக்கும் போது, வாழ்க்கை நம்மை எங்கு அழைத்துச் சென்றாலும் தேவனுடைய பலத்தையும், ஆறுதலையும் நம்மால் அனுபவிக்க முடியும்.