அக்டோபர் 1893இல் சிகாகோ தினத்தில் நகரத்தின் திரையரங்குகள் மூடப்பட்டன. ஏனெனில் அனைவரும் உலக கண்காட்சியில் கலந்து கொள்வார்கள் என்று உரிமையாளர்கள் கண்டறிந்தனர். ஏழு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் சென்றனர். ஆனால் சிகாகோவின் மறுமுனையில் டுவைட் மூடி (1837–1899)  ஒரு இசை மண்டபத்தை பிரசங்கத்தாலும், போதனையாலும் நிரப்ப விரும்பினார். கண்காட்சியின் அதே நாளில் மூடியால் ஒரு கூட்டத்தை ஈர்க்க முடியுமா என்று அவரது நண்பர் ஆர். ஏ. டோரே (1856-1928) சந்தேகப்பட்டார். ஆனால் தேவனுடைய கிருபையால், அவர் செய்து காட்டினார். கூட்டம் ஏன் வந்ததென்றால் “இந்த பழைய உலகம் அறிய விரும்பும் ஒரு புத்தகம்-வேதம்” என்பதை மூடி அறிந்திருந்தார் என்று, பின்னர் டோரே கூறிமுடித்தார். மூடியைப் போலவே மற்றவர்களும் வேதாகமத்தை நேசிக்க வேண்டுமென்றும், அதை அர்ப்பணிப்புடனும் ஆர்வத்துடனும் தவறாமல் வாசிக்க வேண்டுமென்றும் டோரி விரும்பினார்.

சிகாகோவில், பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் தேவன் தம்முடைய ஆவியின் மூலம் தன் ஜனங்களைத் தன்னிடம் கொண்டுவந்தார். இன்றும் அவர் தொடர்ந்து பேசுகிறார். சங்கீதக்காரன் தேவன் மீதும் அவருடைய வேதவசனங்களின் மீதும் கொண்டிருந்த அன்பை நாமும் பிரதிபலிக்கமுடியும். “உம்முடைய வார்த்தைகள் என் நாவுக்கு எவ்வளவு இனிமையானவைகள்; என் வாய்க்கு அவைகள் தேனிலும் மதுரமாயிருக்கும்” (சங்கீதம் 119:103). சங்கீதக்காரனைப் பொறுத்தவரை தேவனுடைய கிருபை மற்றும் சத்தியம் அவரது பாதைக்கு ஒரு வெளிச்சமாகவும் அவரது கால்களுக்கு ஒரு தீபமாகவும் செயல்பட்டன (வச. 105).

நீங்கள் எவ்வாறு மீட்பரிலும் அவருடைய செய்தியிலும் கொண்டுள்ள அன்பில் இன்னும் அதிகமாய் வளர முடியும்? நாம் வேதத்தில் நம்மை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ளும்போது, தேவன் நாம் அவரிடம் கொண்டுள்ள அர்ப்பணிப்பை அதிகரிக்கச் செய்து நமக்கு வழிகாட்டுவார், நாம் நடந்து செல்லும் பாதைகளில் அவருடைய ஒளியைப் பிரகாசிக்கப்பண்ணுவார்.