ஒவ்வொரு இரவும் தன்னுடைய கண்களை மூடும்போது இருள் தன்னை சூழ்வதை காலேபு உணருவான்.  கோஸ்ட்டா ரிக்கா நாட்டில் இருக்கும் மரத்தினால் செய்யப்பட்ட அவனுடைய வீடு அவ்வப்போது உராய்வதினால், அந்த அறையின் நிசப்தம் கெடும். பிறகு பலகணிகளில் உள்ள வவ்வால்கள் ஆட்டம் பிடிக்கும். அவனுடைய அம்மா அவன் அறையில் ஒரு சிறிய விளக்கை வைத்திருந்தார்கள். ஆனாலும் அவன் இருட்டுக்கு பயப்படுவான். ஒருநாள் இரவில் அவன் அப்பா அவனுடைய படுக்கை கால்மாட்டில் ஒரு வேத வசனத்தை மாட்டி  வைத்தார். அது யோசுவா 1:9: “பலங்கொண்டு திடமனதாயிரு; திகையாதே, கலங்காதே, உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார்” அந்த வசனங்களை ஒவ்வொரு ராத்திரியும் படிப்பான் காலேபு. அவன் கல்லூரி சேர்கிறவரை அந்த வசனத்தை வைத்திருந்தான்.

யோசுவா முதலாம் அதிகாரத்தில், மோசே இறந்தபின் தலைமை யோசுவாவுக்கு மாறுவதை பற்றி படிக்கிறோம். “பலங்கொண்டு திடமனதாயிரு” என்ற கட்டளை திரும்பத் திரும்ப – அவர்கள் அதன் முக்கியத்தை உணரத்தக்கதாக – யோசுவாவுக்கும் இஸ்ரவேலருக்கும் கொடுக்கப்பட்டது (வச. 6,7,9). எதிர்காலம் நிலையற்றது போல் காணப்பட்டதால் இஸ்ரவேலர் கலங்கினார்கள். அப்பொழுது தேவன் அவர்களுக்கு உறுதி அளிக்கும் வகையாக “நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை” (வச. 5) என்றார்..

பயப்படுவது இயற்கைதான் என்றாலும் நீடிய பயம் நம்முடைய சரீரத்தையும் ஆத்துமாவையும் பாதிக்கும்.  அந்த காலத்தில் ஆண்டவர் தம்முடைய ஊழியக்காரர்களை  ஊக்குவித்தது போலவே நாமும் அவருடைய வாக்குத்தத்தங்களை நம்பினால் பலங்கொண்டு திடமனதாயிருக்கலாம்.