ஜூலியோ என்ற மனிதன் ஜார்ஜ் வாஷிங்டன் பாலத்தின்மேல் சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்தான். அந்தப் பாலம் நியூயார்க் நகரத்தையும் நியூஜெர்ஸி மாகாணத்தையும் இணைக்கும் ஒரு பாலம்; போக்குவரத்து நெரிசல் அதிகம். அப்போது அங்கே வாழ்வா சாவா என்கிற நிலையில் இருந்த ஒரு மனிதனை பார்த்தான். அந்த மனிதன் பாலத்திலிருந்து நதிக்குள் குதிக்க தயாராக இருந்தான். போலீஸ் வருவதற்கு நேரம் இல்லை என்பதை புரிந்து கொண்ட ஜூலியோ தன்னுடைய சைக்கிளிலிருந்து விரைவாக இறங்கி, கைகளை விரித்துக்கொண்டு அந்த மனிதனை அணுகி “நீ குதிக்காதே, நாங்கள் உன்னை நேசிக்கிறோம்” என்று சொல்லி கலக்கத்தில் இருந்த அவனை இறுகப் பிடித்துக் கொண்டு அப்பாதையில் சென்றுகொண்டிருந்த இன்னொரு மனிதனோடு சேர்ந்து அவனை பாதுகாப்பாக கொண்டுவந்தான். அபாயம் கடந்த போதும் கூட ஜூலியோ அந்த மனிதனை விடவில்லை.

இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் இதே விதமாக, வாழ்வு அல்லது மரணம் என்ற நிலையில் மனித வர்க்கம் இருக்கும்போதுதான் நல்ல மேய்ப்பராகிய இயேசு தம்முடைய ஜீவனையே பலியாக கொடுத்து தம்மேல் நம்பிக்கை வைத்தவர்களை ஒருபோதும் விட்டு விடுவதில்லை என்றார். தம்மில் நம்பிக்கை வைத்த ஆடுகளை இவ்விதமாக ஆசீர்வதிப்பேன் என்றும் சொன்னார்: “அவர்கள் அவரை சொந்தமாக அறிந்திருப்பார்கள், அவர்களுக்கு என்றும் அழியாத நித்திய ஜீவனை கொடுப்பார், அவருடைய கவனிப்பில் பாதுகாப்பாக இருப்பார்கள்”. இந்த பாதுகாப்பு அந்த பலவீனமான, வலிமையற்ற ஆடுகளினால் அல்ல; அந்த வலிமை மிக்க மேய்ப்பருடைய போதுமான தன்மையில் அது காணப்பட்டது. “அவர்களை என் பிதாவின் கையிலிருந்து பறித்துக்கொள்ள ஒருவனாலும் கூடாது” (யோவான் 10:28-29).

நாம் நம்பிக்கையற்று பரிதாபமாக இருக்கும் போது, இயேசு நம்மை மீட்டுக்கொண்டார். நாம் இப்பொழுது பாதுகாப்பாக அவருடைய சொந்தத்தில்  இருக்கலாம். அவர் நம்மை நேசிக்கிறார், தேடிக் கண்டுபிடிக்கிறார் இரட்சிக்கிறார், எப்பொழுதும் நம்மை கைவிடார் என்று வாக்களிக்கிறார்.