போட்டியாளரா? அல்லது கூட்டாளியா?
அநேக ஆண்டுகளாக, இந்தியாவும் பாக்கிஸ்தானும் ஒருவரையொருவர் மோதிக் கொள்கின்றனர். 1947 ஆம் ஆண்டு, நிலப்பகிர்வு நடந்ததிலிருந்து இந்த மோதல் இருந்து கொண்டேயிருந்தாலும், வாகா எல்லையில், ஒவ்வொரு மாலையும், நீங்கள் பார்த்திராதவகையில், ஆடம்பரமாக, சிறப்பான வகையில், மனதைக் கவரும் வகையில், இரு தேசங்களின் ராணுவ வீரர்களும் கொடி வணக்கம் செய்து, நட்பினைத் தெரிவிக்கும் வகையில் இரு வீரர்களும் கைகளைக் குலுக்கிக் கொள்கின்றனர். பல வருட கருத்து வேறுபாடு, 3 பெரிய யுத்தங்கள் நடந்த போதிலும், அனுதினமும் நடைபெறும் இந்த உறவு, இரு நாட்டினரும் எல்லையால் பிரிக்கப் பட்டிருந்தாலும், இணக்கத்தோடு செயல்பட வழிவகுக்கின்றது.
கொரிந்து சபை விசுவாசிகள் தங்களின் முக்கிய பாதையில் எல்லைக்கோடு போட்டு பிரிக்காவிடினும், அவர்கள் பிரிந்திருக்கின்றனர். தங்களுக்கு யார் இயேசுவைக் குறித்து கற்றுக் கொடுத்தார்களோ அவர்களைச் சேர்ந்தவர்கள் என்று தங்களுக்குள்ளே சண்டையிட்டுக் கொள்கின்றனர். சிலர் பவுலைச் சேர்ந்தவர்களென்றும், சிலர் அப்பொல்லோவைச் சேர்ந்தவர்களென்றும், சிலர் கேபாவைச் (பேதுரு) சேர்ந்தவர்களென்றும் சொல்கின்றார்கள். பவுல் அவர்களை “ஏக மனதும் ஏக யோசனையும்” (1 கொரி.1:10) உள்ளவர்களாய் இருக்கும்படி அழைக்கின்றார். கிறிஸ்துவே அவர்களுக்காக சிலுவையில் அறையப்பட்டார், அவர்களுடைய ஆன்மீக வழிகாட்டியல்ல என்பதை நினைவு படுத்துகின்றார்.
நாமும் இவ்வாறே செயல்படுகின்றோம் அல்லவா? நாம் கொண்டுள்ள அதே விசுவாசத்தைக் கொண்டுள்ளவர்களை- நம்முடைய தவறான செய்கைகளுக்காக, இயேசு செய்த தியாகத்தை மறுத்து அவர்களை நண்பர்களாக பாவிப்பதற்குப் பதிலாக, எதிரிகளாக்குகின்றோம். கிறிஸ்து பிரிந்திருக்கின்றாரா? இப்புவியில் அவருடைய பிரதிநிதிகளாக இருக்கும் நாம்- அவருடைய சரீரமாக இருக்கும் நாம், முக்கியமல்லாத காரியங்களின் நிமித்தம் பிரிவினைகளை ஏற்படுத்தக் கூடாது. அதற்குப் பதிலாக அவருக்குள் நாம் ஒற்றுமையைக் கொண்டாடுவோம்.
நெருப்பில் புடமிடப்படல்
24 காரட் தங்கம் என்பது, ஒரு சில மாசுக்களைக் கொண்ட, 100% சுத்தமான தங்கமாகும். ஆனால், இத்தகைய சுத்தத்தை அடைவது மிகக் கடினம். சாதாரணமாக, சுத்திகரிப்பாளர்கள் இரண்டு சுத்திகரிப்பு முறைகளைக் கையாளுகின்றனர். இவற்றுள், மில்லர் முறை, விரைவாகவும், குறைந்த செலவிலும் செய்யக் கூடியது. ஆனால், இதன் விளைவாகக் கிடைக்கக் கூடிய தங்கம் 99.95% தான் சுத்தமாக இருக்கும். வோல்ஹில் முறையில் சுத்திகரிப்பதற்கு அதிக நேரம் எடுக்கும், அதிக செலவாகும். ஆனால் இதில் கிடைக்கும் தங்கம் 99.99% சுத்தமானது.
வேதாகமம் எழுதப் பட்ட காலத்தில், தங்கத்தைச் சுத்திகரிக்க, நெருப்பை பயன் படுத்தினர். நெருப்பு, மாசுக்களை உருகிய தங்கத்தின் மேற்பரப்பிற்குக் கொண்டு வந்து விடும், அதனை எளிதில் நீக்கி விடலாம். ஆசியா மைனரிலுள்ள (வடக்கு துருக்கி) இயேசுவின் விசுவாசிகளுக்கு அப்போஸ்தலனாகிய பேதுரு எழுதிய முதல் கடிதத்தில், அக்கினியால் பொன் சுத்திகரிக்கப் படுவதுபோல, விசுவாசியின் வாழ்வில், சோதனைகள் செயல்படும் என்று ஒப்பிடுகின்றார். அந்நாட்களில் அநேக கிறிஸ்தவர்கள், அவர்களின் விசுவாசத்தின் நிமித்தம், ரோமானியர்களால் துன்புறுத்தப்பட்டனர். பேதுரு அதனை நேரில் பார்த்தவர். துன்பங்கள் வழியாக “உண்மையான விசுவாசம்” வெளிப்படுத்தப்படும் என்று பேதுரு விளக்குகின்றார் (1 பேதுரு 1:7).
ஒரு வேளை நீயும் சுத்திகரிக்கப் படும் நெருப்பில் இருப்பதைப் போன்று உணரலாம். புடமிடும் நெருப்பின் உஷ்ணமாகிய பின்னடைவு, வியாதி அல்லது மற்ற சவால்களை உணரலாம். நாம் இந்த வேதனையின் மத்தியில் தேவனை நோக்கி, இந்த சுத்திகரிப்பு முறையை சீக்கிரம் முடித்துவிடுமாறு கெஞ்சலாம். ஆனால், வாழ்வு வேதனைப் படுத்தினாலும், நமக்கு எது சிறந்தது என்பதை தேவன் அறிவார். இரட்சகரோடு தொடர்பில் இரு, அவர் தரும் ஆறுதலையும் சமாதானத்தையும் பெற்றுக்கொள்.
போதிய அளவு பெரியது
என்னுடைய பேரன், பொழுது போக்கு பூங்காவில், ரோலர் கோஸ்டர் ராட்டின வரிசைக்கு வேகமாக ஓடி, அதில் ஓடுவதற்குப் போதிய அளவு உயரத்தைக் கொண்டிருக்கிறானா என்பதைக் குறிக்கும் அடையாளத்தினிடம் போய் நின்றான். அவனுடைய தலை அந்த அளவுக்கு மேலே இருந்ததால், மகிழ்ச்சியில் கத்தினான்.
நம்முடைய வாழ்விலும் போதிய அளவு என்பது அடிக்கடி தேவைப் படுகின்றதல்லவா? ஓட்டுனர் தேர்வுக்குள் நுழைவதற்கு, வாக்களிப்பதற்கு, திருமணம் செய்துகொள்ள என அநேக காரியங்களுக்கு, என்னுடைய பேரனைப் போல, வளர வேண்டும் என்ற ஏக்கத்தோடு வாழ்கின்றோம்.
புதிய ஏற்பாடு எழுதப்பட்ட காலத்தில், குழந்தைகளை நேசித்தனர், ஆயினும், அவர்கள் வயதுவந்தோருக்கான சலுகையோடு, தங்கள் வீட்டிற்கும் உதவிசெய்யவும், தேவாலயத்திற்குள் செல்லவும் “போதிய வயது வரும் வரை”, அவர்களைச் சமுதாயம் உயர்வாக மதிக்கவில்லை. அந்நாட்களில் இருந்த இந்த நிலையை, இயேசு முற்றிலும் மாற்றினார். வறியோரையும், பெலவீனரையும், குழந்தைகளையும் அவர் வரவேற்றார். பெற்றோர் தங்கள் குழந்தைகள் மீது இயேசு தம் கரங்களை வைத்து ஜெபிக்கும் படி அவரிடம் கொண்டு வருகின்றனர் என்பதை மூன்று சுவிசேஷங்களிலும் (மத், மாற், லூக்) காண்கின்றோம் (மத்.19:13; மாற்.10:16).
சீஷர்கள் அவர்களை விரட்டியடிக்கின்றனர். அதனை ஓர் இடைஞ்சலாகக் கருதினர். இதனைக் கண்ட இயேசு அவர்களைக் கடிந்து கொள்கின்றார் (மாற். 10:14), சிறு பிள்ளைகளுக்கு தன்னுடைய கரங்களை விரிக்கின்றார், அவர்களின் மதிப்பை பரலோகத்தில் உயர்த்துகின்றார், மற்றவர்களிடம் குழந்தைகளை ஒதுக்கித் தள்ளாமல், அவர்களைப் போல மாறி, இயேசுவையும் அறிந்து ஏற்றுக் கொள்ளுமாறு கூறுகின்றார் (லூக்.18:17). நாம் குழந்தையைப் போல மாறுகின்ற அளவு தான், நாம் தேவனுடைய அன்பைப் பெற்றுக்கொள்ளத் தேவையான “போதிய அளவு” ஆகும்.
அன்பிற்குள் ஓடுதல்
சாரா சிறிய உருவம் கொண்டவள். ஷிரெயா முரட்டு குணமுடையள், உருவத்தில் பெரியவள், வெறுப்போடு சாராவைப் பார்த்தாள், சாரா அவளைக் கட்டாயப் படுத்தவில்லை. ஷிரெயா, ஏன் அந்த கருகலைப்பு ஆலோசனை மையத்தில் நிற்கின்றாள் என்பதையும் தெரிவிக்கவில்லை. அவள் ஏற்கனவே “அந்த குழந்தையை அகற்றி விட” தீர்மானித்து விட்டாள். எனவே, சாரா மென்மையாகச் சில கேள்விகளைக் கேட்டாள். வேதாகமத்திற்கு எதிராகச் செயல்பட்டாலும், ஷிரெயா அவற்றை முரட்டுத்தனமாக தவிர்த்தாள். ஷிரெயா தன்னுடைய கர்ப்பத்தை கலைத்துவிடுவதில் உறுதியாக இருப்பதைத் தெரிவிப்பதற்கு அடையாளமாக அவ்விடத்தை விட்டு வெளியேறுவதற்காக எழுந்தாள்.
ஷிரெயாவிற்கும் கதவுக்கும் இடையேயிருந்த சிறிய இடைவெளியில் நுழைந்த சாரா, “நீ போவதற்கு முன்பு நான் உன்னை அணைத்துக் கொண்டு, ஜெபிக்கலாமா?” என்றாள். இதுவரை அவளை யாருமே, நல்லெண்ணத்தோடு அணைத்ததில்லை, திடீரென, எதிர்பாராத விதமாக அவளுடைய கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.
சாரா தேவனுடைய இருதயத்தை அழகாக வெளிப்படுத்தினாள். தேவன் தன்னுடைய ஜனமாகிய இஸ்ரவேலை, “அநாதி சிநேகத்தால் உன்னைச் சிநேகித்தேன்” (எரே. 31:3) என்கின்றார். அந்த ஜனங்கள் அடிக்கடி தேவனுடைய வழிகாட்டலை மீறினதால், அதன் கடினமான பின் விளைவுகளைச் சந்தித்துக் கொண்டிருந்தனர். ஆனாலும், தேவன், “காருணியத்தால் உன்னை இழுத்துக் கொள்ளுகிறேன். மறுபடியும் உன்னைக் கட்டுவிப்பேன்” (வ.3-4) என்கின்றார்.
ஷிரேயாவின் கதை மிகவும் சிக்கலானது (நம்மில் அநேகருடையதும்). அன்று அவள் தேவனுடைய உண்மையான அன்பிற்குள் ஓடி வரும் மட்டும், தேவனும், தேவனைப் பின்பற்றுபவர்களும் அவளைக் குற்றவாளியென்று ஒதுக்குவர் என்று நினைத்திருந்தாள். ஆனால், சாரா வேறுவிதமான ஒன்றைக் காட்டினாள், தேவன் நம்முடைய பாவத்தை வெறுத்தாலும், நாம் நினைப்பதற்கும் மேலாக அவர் நம்மை நேசிக்கின்றார். அவர் நம்மை தனது விரிந்த கரங்களுக்குள் அழைக்கின்றார், நாம் அவரை விட்டு ஓடிப் போகத் தேவையில்லை.