Archives: ஆகஸ்ட் 2020

மீன் பிடிக்க அனுமதி இல்லை

ஜெர்மானிய நாசிகளின் பேரழிவில் தப்பிப் பிழைத்த காரி டென் பூம் என்பவள் மன்னிப்பின் முக்கியத்துவத்தை அறிந்திருந்தார். மன்னிக்கப்பட்ட பாவங்கள், கடலின் அடியில் எறியப்பட்டன என்ற காட்சியையே அவள் மனதில் பிரதானமாக வைத்திருப்பதாக அவளுடைய புத்தகத்தில் எழுதுகின்றாள். “நாம் பாவங்களை அறிக்கையிட்டால், தேவன் அவற்றை கடலின் ஆழத்தில் எறிந்து விடுவதால் அவை நிரந்தரமாக போய் விட்டன……பின்னர் தேவன், இங்கு மீன் பிடிக்க அனுமதியில்லை என்ற ஓர் அடையாளத்தையும் அங்கு வைக்கின்றார்” என்பதாக எழுதியுள்ளாள்.

இயேசுவின் விசுவாசிகளாகிய நாம் சில வேளைகளில் கவனிக்கத் தவறிய முக்கியமான உண்மையை குறிப்பிட்டுக் காண்பிக்கின்றாள். தேவன் நம்முடைய தவறுகளை மன்னிக்கும் போது, நாம் முற்றிலுமாக மன்னிக்கப் படுகின்றோம்!  நாம் நம்முடைய வெட்கத்திற்குரிய செயல்களை தோண்டி எடுக்கத் தேவையில்லை, நம்முடைய அழுக்கான உணர்வுகளில் உழலத் தேவையில்லை. அதற்குப் பதிலாக அவருடைய கிருபையையும் மன்னிப்பையும் ஏற்றுக் கொண்டு, விடுதலையோடு அவரைப் பின்பற்றுவோம்.

“இங்கு மீன் பிடிக்க அனுமதியில்லை” என்ற ஒரு கருத்தினை சங்கீதம் 130 ல் காண்கின்றோம். தேவன் நேர்மையானவராய் இருக்கின்றார், அவர் மனம் வருந்துகின்றவர்களின் பாவத்தை மன்னிக்கின்றார், “உம்மிடத்தில் மன்னிப்பு உண்டு” (வ.4) என்கின்றார் சங்கீதக்காரன். தேவன் மீது நம்பிக்கை வைத்து, அவருக்கு காத்திருக்கின்றான் (வ.5). “அவர் இஸ்ரவேலை அதின் சகல அக்கிரமங்களினின்றும் மீட்டுக் கொள்வார்” (வ.8) என்று நம்பிக்கையோடு தெரிவிக்கின்றான். அவரை நம்பியிருப்பவர்கள் “முழுமையான மீட்பை பெற்றுக் கொள்வர்” (வ.7) என்கின்றான்.

நாம் வெட்கத்தாலும், உதவாதவர்கள் என்ற எண்ணத்தாலும் பிடிக்கப்படும் போது, நம்முடைய முழு இருதயத்தோடும் தேவனுக்குப் பணிசெய்ய முடியாது. நம்முடைய கடந்த கால எண்ணங்கள் நம்மைத் தடைசெய்துவிடும். நீ செய்த தவறுகளை எண்ணி கஷ்டமான சூழலில், இருப்பாயானால், தேவனிடம் உதவி கேள், அவருடைய ஈவாகிய மன்னிப்பிலும், புதிய வாழ்விலும் முழு நம்பிக்கையையும் வை. அவர் உன்னுடைய பாவங்களை சமுத்திரத்தின் ஆழத்தில் போட்டுவிட்டார்!

அறுப்பு வரை உண்மையாயிருத்தல்

ஒரு பெண் அருகிலுள்ள பூங்காவில், சிறுவர் நிகழ்ச்சியொன்றை நடத்த திட்டமிட்டாள். அவள் அருகிலிருப்போரின் குழந்தைகளை அதில் பங்கு பெறுமாறு அழைத்தாள். தன்னுடைய விசுவாசத்தை அருகில் இருப்போருடன் பகிர்ந்து கொள்ள கிடைத்த இந்த வாய்ப்பினை எண்ணி மிகவும் ஆர்வமாய் இருந்தாள்.

அவள் தன்னுடைய 3 பேரப்பிள்ளைகளையும், இரண்டு உயர்நிலைப் பள்ளி மாணவியரையும் இதில் உதவுமாறு ஏற்படுத்தியிருந்தாள். அவர்கள் செய்ய வேண்டிய வேலைகளையும், விளையாட்டுகளையும், பிற செயல்களையும் திட்டமிட்டாள். உணவு தயாரித்தாள், குழந்தைகளுடன் பகிர்ந்து கொள்ள வேண்டிய வேதாகமக் கதையையும் தயாரித்தாள். அவர்கள்  அனைவரும்    வந்து சேருவதற்கு காத்திருந்தாள்.

முதல் நாள் ஒரு குழந்தை கூட வரவில்லை, இரண்டாம் நாளும், மூன்றாம் நாளும் அப்படியே சென்றது. ஆனாலும் என்னுடைய சினேகிதி, ஒவ்வொரு நாளும் அந்த வேலைகளை தன்னுடைய பேரப்பிள்ளைகளுடனும், உதவியாளருடனும் செய்து வந்தாள்.

நான்காம் நாள், அருகில் சுற்றுலா வந்த ஒரு குடும்பத்தை கண்டு அவர்களுடைய பிள்ளைகளை இதில் பங்கு பெறுமாறு அழைத்தாள். ஒரு சிறுமி, அங்குள்ள விளையாட்டுகளில் பங்கு பெற்றாள், அவர்களோடு சாப்பிட்டாள், இயேசுவைப் பற்றிய கதைகளைக் கேட்டாள். இன்னும் அநேக ஆண்டுகளுக்கு அவற்றை நினைவில் வைத்திருப்பாள். இதன் பின்விளைவு என்னவாயிருக்கும் என்று யாருக்குத் தெரிந்திருக்க முடியும்? கலாத்தியர் புத்தகத்தின் வாயிலாக தேவன் நம்மை ஊக்குவிகின்றார். “நன்மை செய்கிறதில் சோர்ந்து போகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்து போகாதிருந்தால்  ஏற்ற காலத்தில் அறுப்போம். ஆகையால், நமக்குக் கிடைக்கும் சமயத்திற்குத்தக்கதாக, யாவருக்கும், விசேஷமாக விசுவாசக் குடும்பத்தார்களுக்கும் நன்மை செய்யக் கடவோம் (6:9-10).

எண்ணிக்கையைக் குறித்தும் காணக்கூடிய வெற்றியின் அளவைக் குறித்தும் கவலைப் படாதே. நாம் செய்ய வேண்டுமென தேவன் எதிர்பார்க்கின்ற காரியங்களில் உண்மையாயிரு. அறுவடையை அவருடைய கரத்தில் கொடுத்து விடு. பலனை தேவனே நிர்ணயிப்பார்.

வறண்ட பகுதியில் பிரகாசிக்கும் புள்ளிகள்

கர்நாடகா மாநிலத்தில், பாறை நிறைந்த ஒரு சிறிய பகுதியை நானும் என்னுடைய கணவனும் பார்வையிட்ட போது, ஒரு வறண்ட பாறையில் மலர்ந்திருந்த சூரிய காந்தி மலரைப் பார்த்தேன். அவ்விடத்தில் முட்களைக் கொண்ட கள்ளிச் செடிகளும், களைகளுமே வளர்கின்றன. இந்த சூரியகாந்தி செடி வீடுகளில் வளரும் மற்றவற்றைப் போல உயரமாக வளர்ந்திருக்கவில்லை. ஆனால் அந்த மலரின் பிரகாசம் என்னை மகிழ்ச்சியாக்கியது.

ஒரு வறண்ட நிலப் பரப்பில் காணப்பட்ட எதிர் பாராதபிரகாசம், இயேசுவின் விசுவாசிகளின் வாழ்வும் வெறுமையாகவும் மகிழ்ச்சியற்றதாகவும் இருப்பதை நினைவுபடுத்தியது. பிரச்சனைகள் மேற்கொள்ள முடியாதவைகளாக காணப்படலாம். சங்கீதக்காரனின் கதறலைப் போன்று, நம்முடைய ஜெபங்களும் செவிகொடுக்கப் படாதவைகளாக காணப்படலாம். “கர்த்தாவே, உமது செவியைச் சாய்த்து, என் விண்ணப்பத்தைக் கேட்டருளும்; நான் சிறுமையும் எளிமையுமானவன்” (சங். 86:1) என்கின்றார். அவரைப் போல நாமும் மகிழ்ச்சிக்காக ஏங்கிக் கொண்டிருக்கலாம் (வ.4).

நாம் ஆராதிக்கும் தேவன் உண்மையுள்ளவர் என்று தாவீது வெளிப்படுத்துகின்றார், “ஆண்டவரே  நீர் நல்லவரும், மன்னிக்கிறவரும்…………கிருபை மிகுந்தவருமாயிருக்கிறீர்” (வ.5) என்கின்றார். நீர் பதிலளிக்கின்ற தேவன் (வ.7).

சில வேளைகளில், வறண்ட பகுதியில், தேவன் ஒரு சூரியகாந்தி மலரை அனுப்புகின்றார். ஊக்கம் தரும் வார்த்தையை நண்பன் மூலம் அனுப்புகின்றார், அல்லது ஆறுதலான வேத வார்த்தையைத் தருகின்றார், நம்பிக்கையுடைய சிறிய நடைகளோடு, நாம் முன்னோக்கிச் செல்ல அழகிய சூரிய உதயத்தைத் தருகின்றார். நம்முடைய கஷ்டங்களிலிருந்து தேவன் நம்மை விடுவிப்பதை நாம் அநுபவிக்க காத்திருக்கும் போது, நாமும் சங்கீதக் காரனோடு     சேர்ந்து, “தேவரீர் மகத்துவமுள்ளவரும், அதிசயங்களைச் செய்கிறவருமாயிருக்கிறீர்; நீர் ஒருவரே தேவன்” (வ.10) என்று தெரிவிப்போம்.

தேவனோடு பணிசெய்தல்

1962 ஆம் ஆண்டு, பில் ஆஷ் என்பவர் மெக்ஸிக்கோவிற்குச் சென்றிருந்த போது, ஓர் அநாதை இல்லத்திற்கு காற்றாலையில் இயங்கக் கூடிய கைப் பம்ப்களை பொருத்திக் கொடுத்தார். 15 ஆண்டுகள் கழித்து, தேவையுள்ள கிராமங்களுக்கு தூய்மையான நீர் வழங்குவதன் மூலம் தேவப் பணி செய்யும்படி தூண்டப்பட்டார். பில், லாபநோக்கமில்லாத ஒரு நிறுவனத்தை ஆரம்பித்தார். “கிராமப் புற ஏழைமக்களுக்குப் பாதுகாப்பான குடி நீரை வழங்குவதற்கு ஆர்வமுடைய மக்களை கண்டுபிடிப்பதில் என்னுடைய நேரம் அனைத்தையும் செலவிடும் படி தேவன் என் கண்களைத் திறந்தார்” என்று அவர் கூறினார். பிற்காலத்தில், 100க்கும் மேலான நாடுகளில் இருந்து போதகர்களும், ஊழியர்களும் கேட்டுக் கொண்டதிலிருந்து உலகெங்கும் பாதுகாப்பான குடி நீர் தேவையிருப்பதை அறிந்து கொண்டார், எனவே பில் மற்றவர்களையும் இந்த ஊழியத்தில் இணைந்து கொள்ளுமாறு அழைத்தார்.

பல்வேறு வகைகளில், நாம் தேவனோடும், மற்றவர்களோடும் இணைந்து குழுவாகப்பணி செய்ய தேவன் நம்மை அழைக்கின்றார். கொரிந்து சபை மக்கள், தாங்கள் தெரிந்து கொண்ட போதகரைக் குறித்து தர்க்கம் செய்த போது, அப்போஸ்தலனாகிய பவுல் தன்னை தேவனுடைய வேலையாள் எனவும், அப்பொல்லோவின் குழுவில் சேர்ந்து பணிபுரிபவன் எனவும், ஆவியின் வளர்ச்சிக்கு தேவனையே முழுமையாகச் சார்ந்திருப்பவன் எனவும் (1 கொரி.3:1-7) கூறுகின்றார். எல்லா வேலைகளுக்கும் தேவன் கூலியைக் கொடுப்பார் (வ.8) எனவும் நினைவுபடுத்துகின்றார். பவுல், பிறரோடு சேர்ந்து,  தேவனுக்குப் பணி செய்வதை தனக்குக் கிடைத்த வாய்ப்பாகக் கருதுகின்றார். தேவன் தம் அன்பினால் நம்மை மாற்றியிருக்க, நாமும் ஒருவரையொருவர் தாங்குவோம் என பவுல் நம்மை ஊக்கப் படுத்துகின்றார் (வ.9).

நம்முடைய வல்லமை பொருந்திய பிதாவுக்கு, தன்னுடைய பெரிய வேலையை நிறைவேற்றி முடிக்க, நம்முடைய உதவி தேவை இல்லையெனினும், அவர் நம்மை பெலப் படுத்தி, அவரோடு கூட பங்காளிகளாக இருக்க அழைக்கின்றார்.

நம்பிக்கை மட்டுமே

300 குழந்தைகள் உடைமாற்றிக் கொண்டு, காலை உணவிற்காக அமர்ந்தனர். உணவிற்காக நன்றி ஜெபமும் ஏறெடுக்கப்பட்டது. ஆனால் அங்கு உணவு இல்லை! இத்தகைய சூழல், அந்த அனாதை குழந்தைகள் இல்லத்தின் இயக்குனரும் ஊழியருமான ஜார்ஜ் முல்லருக்கு (1805-1898) புதிதல்ல.  தேவன் அவர்களை எப்படி போஷிப்பார் என்பதைக் காண இது மற்றொரு வாய்ப்பு. மில்லரின் ஜெபம் முடிவடைந்த சில நிமிடங்களில், முந்திய இரவு தூங்கமுடியாமல், 3 முறை ரொட்டி செய்த ஒரு ரொட்டிக் கடைக்காரர், இந்த அனாதையில்லத்தில், அவருடைய ரொட்டிகளைப் பயன்படுத்த முடியும் என்பதை உணர்ந்து வாசலில் வந்து நின்றார். இது நடந்த சற்று நேரத்தில், அந்தப் பட்டணத்திற்குப் பால்           விநியோகிக்கும் ஒருவர் வந்தார். அவருடைய வாகனம் இந்த அனாதை இல்லத்தின் அருகில் பழுதடைந்து நின்று விட்டது. அதிலிருந்த பால் வீணாவதை விரும்பாத அவர் அதனை முல்லருக்குக் கொடுத்தார்.

நம்முடைய நலவாழ்வுக்குத் தேவையான அடிப்படைகளாகிய ஆகாரம், தங்கும் இடம், சுகம், பொருளாதாரம், நட்பு ஆகியவை கிடைக்காதபோது, நாமும் கவலை, பதட்டம், சுய பரிதாபம் ஆகியவற்றிற்குள் தள்ளப்படலாம். தேவையிலிருக்கும் ஒரு விதவையின் மூலம் தேவன் தரும் உதவி வந்ததைப் பற்றி முதல் இராஜாக்கள் 17:8-16 நமக்கு நினைவு படுத்துகின்றது. “பானையில் ஒரு பிடி மாவும், கலயத்தில் கொஞ்சம் எண்ணெயுமே அல்லாமல், என்னிடத்தில் ஒரு அடையும் இல்லை” (வ.12) என்று அவள் கூறுகின்றாள். இதற்கு முன்பு காகங்கள் எலியாவை போஷித்ததைப் பற்றி காண்கின்றோம் (வ.4-6). நம்முடைய தேவைகளைச் சந்திக்கும் படி நாம் பல்வேறு இடங்களுக்கு அலைந்து திரியலாம். நம்முடைய தேவைகளையெல்லாம் தருவதாக வாக்களித்துள்ள தேவன் நமக்குத் தருவார் என்ற தெளிவான சிந்தனையை நாம் பெற்றுக் கொள்ளும் போது, பிரச்சனையிலிருந்து விடுதலையைப் பெற்றுக் கொள்வோம். நாம் தீர்வுகளைத் தேடிக் கொள்ளும் முன்பு, முதலாவது தேவனைத் தேட கவனமாய் இருப்போம். அப்படிச் செய்யும் போது, நேரத்தை வீணாக்குவதையும், ஆற்றலைச்செலவிடுவதையும் தோல்வியையும் தவிர்த்துகொள்ளலாம்.