ஒரு பெண் அருகிலுள்ள பூங்காவில், சிறுவர் நிகழ்ச்சியொன்றை நடத்த திட்டமிட்டாள். அவள் அருகிலிருப்போரின் குழந்தைகளை அதில் பங்கு பெறுமாறு அழைத்தாள். தன்னுடைய விசுவாசத்தை அருகில் இருப்போருடன் பகிர்ந்து கொள்ள கிடைத்த இந்த வாய்ப்பினை எண்ணி மிகவும் ஆர்வமாய் இருந்தாள்.

அவள் தன்னுடைய 3 பேரப்பிள்ளைகளையும், இரண்டு உயர்நிலைப் பள்ளி மாணவியரையும் இதில் உதவுமாறு ஏற்படுத்தியிருந்தாள். அவர்கள் செய்ய வேண்டிய வேலைகளையும், விளையாட்டுகளையும், பிற செயல்களையும் திட்டமிட்டாள். உணவு தயாரித்தாள், குழந்தைகளுடன் பகிர்ந்து கொள்ள வேண்டிய வேதாகமக் கதையையும் தயாரித்தாள். அவர்கள்  அனைவரும்    வந்து சேருவதற்கு காத்திருந்தாள்.

முதல் நாள் ஒரு குழந்தை கூட வரவில்லை, இரண்டாம் நாளும், மூன்றாம் நாளும் அப்படியே சென்றது. ஆனாலும் என்னுடைய சினேகிதி, ஒவ்வொரு நாளும் அந்த வேலைகளை தன்னுடைய பேரப்பிள்ளைகளுடனும், உதவியாளருடனும் செய்து வந்தாள்.

நான்காம் நாள், அருகில் சுற்றுலா வந்த ஒரு குடும்பத்தை கண்டு அவர்களுடைய பிள்ளைகளை இதில் பங்கு பெறுமாறு அழைத்தாள். ஒரு சிறுமி, அங்குள்ள விளையாட்டுகளில் பங்கு பெற்றாள், அவர்களோடு சாப்பிட்டாள், இயேசுவைப் பற்றிய கதைகளைக் கேட்டாள். இன்னும் அநேக ஆண்டுகளுக்கு அவற்றை நினைவில் வைத்திருப்பாள். இதன் பின்விளைவு என்னவாயிருக்கும் என்று யாருக்குத் தெரிந்திருக்க முடியும்? கலாத்தியர் புத்தகத்தின் வாயிலாக தேவன் நம்மை ஊக்குவிகின்றார். “நன்மை செய்கிறதில் சோர்ந்து போகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்து போகாதிருந்தால்  ஏற்ற காலத்தில் அறுப்போம். ஆகையால், நமக்குக் கிடைக்கும் சமயத்திற்குத்தக்கதாக, யாவருக்கும், விசேஷமாக விசுவாசக் குடும்பத்தார்களுக்கும் நன்மை செய்யக் கடவோம் (6:9-10).

எண்ணிக்கையைக் குறித்தும் காணக்கூடிய வெற்றியின் அளவைக் குறித்தும் கவலைப் படாதே. நாம் செய்ய வேண்டுமென தேவன் எதிர்பார்க்கின்ற காரியங்களில் உண்மையாயிரு. அறுவடையை அவருடைய கரத்தில் கொடுத்து விடு. பலனை தேவனே நிர்ணயிப்பார்.