சுட்டி, சீனி, குண்டு. இவை நம்முடைய குழந்தைகளுக்கு நாம் கொடுக்கும் சில “புனை பெயர்கள்”. அநேகமான இப்பெயர்கள் அவர்களின் குணாதிசயம், சரீரத் தோற்றம், ஆகியவற்றை விளக்குவதாக இருக்கும், இவை தங்களின் பிரியத்தைக் காட்டும் பெயர்கள்.

புனைபெயர்கள் குழந்தைகளுக்கு மட்டும் வைக்கப் படுவதில்லை, இவற்றின் பயனை நாம் வேதாகமத்திலும் காண்கின்றோம். எடுத்துக் காட்டாக, யோவான், யாக்கோபு என்ற இரு சீஷர்களுக்கும் இயேசு “இடிமுழக்க மக்கள்” (மாற்.3:17) என்று புனை பெயரிட்டார். தனக்குத் தானே புனைபெயரிடும் அரிய நிகழ்வையும் வேதாகமத்தில் காணலாம். நகோமி என்ற பெயர் கொண்ட ஒரு பெண், தன்னை “மாரா” என்று அழைக்குமாறு கூறுகின்றாள். அதற்கு “கசப்பு” என்று அர்த்தம் (ரூத். 1:20), ஏனெனில், அவளுடைய கணவனும், இரு மகன்களும் மரித்துப் போயினர். தேவன் அவளுடைய வாழ்வைக் கசப்பாக்கினார் என்பதாக அவள் உணர்ந்தாள் (வ.21).

நகோமி தனக்கு கொடுத்த புதிய புனைபெயர் நீண்ட நாட்கள் நிலைத்திருக்கவில்லை, ஏனெனில் அவளை நிலைகுலையச் செய்த அந்த இழப்புகளோடு அவளுடைய கதை முடிந்து போகவில்லை. அவளுடைய துயரத்தின் மத்தியில், தேவன் அவளுக்கு ஓர் அன்பான மருமகள், ரூத்தைக் கொடுத்து ஆசீர்வதித்தார். அவள், மறுமணம் செய்து, ஒரு மகனைப் பெற்றெடுத்ததின் மூலம், நகோமிக்கு திரும்பவும் ஒரு குடும்பத்தை உருவாக்கினாள்.

 நாமும் சில வேளைகளில் நமக்கு, “தோற்றவன்”, “நேசிக்கப்படாதவன்” போன்ற கசப்பான புனைபெயர்களை,  நாம் அநுபவிக்கும் கஷ்டங்களையோ அல்லது நாம் இழைத்த தவறுகளையோ தழுவி, கொடுக்கும்படி முனைவோம். ஆனால், இந்தப் பெயர்கள், நம்முடைய கதையின் முடிவு ஆகிவிடுவதில்லை. நம் ஒவ்வொருவருக்கும் தேவன் கொடுத்துள்ள பெயரான “சிநேகிக்கப்பட்டவன்” (ரோம.9:25) என்ற பெயரால், நம்முடைய கசப்பான பெயரை மாற்றுவோம். நம் வாழ்வின் மிக சவாலான வேளைகளில், தேவன் தரும் வழியை எதிர்நோக்கி இருப்போம்.