Archives: ஜூலை 2020

மேலே பார்!

திரைப்படம் தயாரிக்கும் வைலி ஓவர்ஸ்ட்ரீட் என்பவர், நிலாவின் நேரடிக் காட்சியை, தனது வலிமைவாய்ந்த தொலை நோக்கி வழியே பார்க்கும்படி மற்றவர்களுக்குக் காண்பித்தார்.  மிக அருகில் தெரிந்த அக்காட்சியை அநேகர், ஆச்சரியத்தோடு வியந்து பார்த்தனர். இத்தனை மகிமை பொருந்திய காட்சியைப் பார்க்கும் போது, “நம்மைக் காட்டிலும் மிகப் பெரிய பொருட்கள் இருக்கின்றன என்பதை நினைக்கும் போது, அது நம்மை ஆச்சரியத்தால் நிறைக்கின்றது” என்று அவர் விளக்கினார்.

சங்கீதக்காரனாகிய தாவீது, தேவனுடைய பரலோக ஒளியைக் கண்டு வியக்கின்றார். “உமது விரல்களின் கிரியையாகிய உம்முடைய வானங்களையும், நீர் ஸ்தாபித்த சந்திரனையும் நட்சத்திரங்களையும் நான் பார்க்கும் போது, மனுஷனை நீர் நினைக்கிறதற்கும், மனுஷகுமாரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம்?” என்கின்றார் (சங்.8:3-4).

தாவீதின் இந்த தாழ்மையான கேள்வி, நம்மை ஆச்சரியப்படுத்தும் ஒரு கண்ணோட்டத்திற்கு கொண்டு செல்கின்றது. தேவன் புதிய வானத்தையும், புதிய பூமியையும் படைத்த பின்னர், அங்கு சூரியனும் சந்திரனும் தேவையில்லை. அபோஸ்தலனாகிய யோவான் கூறுவதைப் போல, தேவனுடைய பிரகாசமான மகிமையே ஒளியைத் தருகின்றது. “நகரத்திற்கு வெளிச்சம் கொடுக்கச் சூரியனும் சந்திரனும் அதற்கு வேண்டுவதில்லை; தேவனுடைய மகிமையே அதைப் பிரகாசிப்பித்தது, ஆட்டுக் குட்டியானவரே அதற்கு விளக்கு…………..அங்கே இராக்காலம் இல்லை.” (வெளி. 21:23-25).

இதனை நினைக்கும் போது எத்தனை ஆச்சரியமாக இருக்கின்றது! அவருடைய பரலோக மகிமையை நாம் இப்பொழுதும்             அநுபவிக்கலாம். உலகிற்கு ஒளியாக வந்த கிறிஸ்துவை நாம் தேடும் போது நாம் அந்த மகிமையைக் காணமுடியும். ஓவெர்ஸ்ரீட் கூறியதை போல, “நாம் அடிக்கடி மேல் நோக்கிப் பார்ப்போமாக” அவ்வாறு நாம் செய்யும் போது தேவனைக் காண்போம்.

பிரிவிலும் இணைக்கப்படல்

தன்னுடன் பணிபுரியும் தருணுடன் ஒரு செயல் திட்டத்தை செய்யும்படி கட்டாயப்படுத்தப்பட்ட அசோக், ஒரு பெரிய சவாலைச் சந்தித்தான். அசோக்கும் தருணும் எப்போதுமே எதிர் எதிரான எண்ணங்களைக் கொண்டவர்களாகையால், இதனை எப்படி செய்ய முடியும் என்று மலைத்தனர். இருவரும் மற்றவரின் கருத்துக்களை மதிப்பவர்களாக இருப்பினும், அவர்கள் இருவரின் அணுகு முறைகளும் வேறுபட்டிருப்பதால், பிரச்சனை மிக அருகில் இருக்கின்றது என்பதை உணர்ந்து கொண்டனர். முரண்பாடுகள் தோன்றுவதற்கு முன்பு, அந்த இருவரும் தங்களுடைய வேறுபட்ட கருத்துகளைக் குறித்து, தங்களுடைய மேலாளரிடம் கூறினர், அவர், இருவரையும் வெவ்வேறு குழுக்களில் போட்டார். அது ஒரு புத்திசாலித்தனமான முடிவு. அன்று, அசோக் ஒரு பாடத்தைக் கற்றுக் கொண்டான்: ஒன்றாக இணைந்திருப்பது என்பது எப்பொழுதும் இணைந்து வேலை செய்ய வேண்டும் என்பதைக் குறிப்பதில்லை.

இந்த உண்மையை ஆபிரகாமும் உணர்ந்திருக்க வேண்டும். பெத்தேலில் இருந்த அவனும் லோத்துவும் வெவ்வேறு வழிகளைத் தெரிந்து கொள்ள வேண்டும் என ஆலோசனை கூறினான் (ஆதி.13:5-9). அவர்கள் இருவரின் மந்தைகளுக்கும் போதிய இடம் இல்லை என்பதை அறிந்த ஆபிரகாம், புத்திசாலித்தனமாக அவர்களின் கூட்டு வாழ்க்கையைப் பிரிக்க ஆலோசனை கூறுகின்றான். முதலில், அவன் “நாம் சகோதரர்” என்பதை வலியுறுத்துகின்றான் (வ.8), லோத்துவிற்கு தன்னுடைய உறவினை நினைவு படுத்துகின்றான். பின்னர், மிகப் பெரிய தாழ்மையைக் காட்டுகின்றான், தன்னுடைய உறவினனான லோத்து முதலாவது தேர்ந்தெடுக்கட்டும் (வ.9) என்று விட்டு கொடுக்கின்றான். ஆபிரகாம் மூத்தவனாக இருந்த போதும், ஒரு போதகர் குறிப்பிட்டதைப் போன்று, “மனம் ஒன்றிய பிரிவினை” க்கு வழிவகுக்கின்றார்.

நம் ஒவ்வொருவரையும் தேவன் தனித்தனி திறமைகளோடு படைத்துள்ளதால், நாம் தனித்து செயல் பட்டால், அந்த இலக்கினை சிறப்பாக அடைய முடியும் என நினைக்கக் கூடும். வேறுபாடுகளிலும் ஒரு ஒற்றுமை உண்டு. நாம் தேவனுடைய குடும்பத்தில் சகோதரரும் சகோதரிகளுமாக இருக்கின்றோம். நாம் காரியங்களை வெவ்வேறு வகையில் தான் செய்ய முடியும், ஆனாலும் நாம் ஒருமித்து ஒரே நோக்கத்திற்காக செயல்படுவோம்.

வண்ணங்களின் அணிவகுப்பு

அநேக ஆண்டுகளாக, பல்வேறு தரப்பட்ட மக்களைக் கொண்ட, உலகிலேயே மிகப் பெரிய பட்டணமாக லண்டன் பட்டணம் கருதப்பட்டு வருகின்றது. 1933 ஆம் ஆண்டு, ஒரு பத்திரிக்கையாளர், இங்கிலாந்தின் மிகப் பெரிய தலை நகரமான லண்டனைக் குறித்து, “வெவ்வேறு வகையான நிறமும், மொழியும் கொண்ட ஜனங்களின் அணிவகுப்பு தான் லண்டன் பட்டணத்தின் சிறந்த அம்சமாகும்” என்றார். உலகெங்கும் உள்ள மணமும், ஓசையும், காட்சிகளும் கொண்ட மக்களின் அணிவகுப்பை இன்றும் காணலாம். உலகத்திலேயே மிகப்பெரிய பட்டணங்களுள் ஒன்றில் காணப்படும் மிகப் பெரிய வேறுபாடுகள் தான், அதனுடைய பிரம்மிக்கச் செய்யும் தோற்றத்திற்குக் காரணம் எனலாம்.

மனிதர்களால் நிரம்பிய எந்தப் பட்டணத்திலும் இருக்கின்ற பிரச்சனைகள் லண்டன் பட்டணத்திலும் இருக்கின்றது. மாற்றங்கள் சவால்களைக் கொண்டு வருகின்றது. சில வேளைகளில் கலாச்சாரங்கள் மோதுகின்றன. இதனாலேயே மனிதர்களால் கட்டப்பட்ட எந்த ஒரு பட்டணமும், நமது நித்திய வீட்டின் அதிசயத்தோடு ஒப்பிடத்தகுந்ததல்ல என்று கூறமுடியும்.

அப்போஸ்தலனாகிய யோவான், தேவனுடைய பிரசன்னத்துக்குள் பிரவேசித்த போது, வேறுபாடுகள் தான் பரலோக ஆராதனையின் முக்கிய அம்சமாக இருந்தது. அங்கு மீட்கப்பட்டவர்கள், “தேவரீர் புஸ்தகத்தை வாங்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரராயிருக்கிறீர்; ஏனெனில் நீர் அடிக்கப்பட்டு, சகல கோத்திரங்களிலும் பாஷைக்காரரிலும் ஜனங்களிலும் ஜாதிகளிலுமிருந்து எங்களை தேவனுக்கென்று உம்முடைய இரத்தத்தினாலே மீட்டுக் கொண்டு, எங்கள் தேவனுக்கு முன்பாக எங்களை ராஜாக்களும், ஆசாரியர்களுமாக்கினீர்; நாங்கள் பூமியிலே அரசாளுவோம் என்று புதியப் பாட்டைப் பாடினார்கள் (வெளி. 5:9-10).

பரலோகத்தை கற்பனை செய்து பார். உலகெங்கிலிருந்தும் வந்த வெவ்வேறு ஜனக் கூட்டத்தின் மக்கள், அனைவரும் இணைந்து, ஜீவனுள்ள தேவனுடைய பிள்ளைகள் என்ற அதிசயத்தைக் கொண்டாடுகின்றார்கள்! இயேசுவின் விசுவாசிகளாகிய நாம், அந்த வேறுபாட்டை இப்பொழுதே கொண்டாடுவோம்.

சாதகமாக மாற்றிக் கொள்ளாதிருத்தல்

சிறைச்சாலைக் கைதிகள் அநேகம் பேர், தங்களுடைய சிறைத் தண்டனை நாட்களைக் குறைப்பதற்காக, சாலையோரங்களில் கிடக்கும் குப்பைகளைப் பொறுக்கும் வேலையைச் செய்து கொண்டிருந்தனர். அந்நேரம் அவர்களின் மேற்பார்வையாளர் ஜேம்ஸ் நிலைகுலைந்து கீழேவிழுந்தார். கைதிகள் அவருக்கு உதவும்படி ஓடினர், அவருக்கு அவசரமான மருத்துவ உதவி வேண்டும் என்று உணர்ந்தனர். ஒரு கைதி ஜேம்ஸின் அலைபேசியை எடுத்து, உதவி கேட்டு பேசினார். அவர்களுடைய மேற்பார்வையாளருக்கு உடனடியாக மருத்துவ உதவி கிடைக்கும்படி செய்தற்காக, காவல்துறையினர், அந்தக் கைதிகளுக்கு நன்றி கூறினர், ஏனெனில், அவருக்கு ஏற்பட்டுள்ள அந்த இருதய நோயில், அவர் சாகட்டும் என்று அவரை நிராகரித்திருக்கலாம், அல்லது அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, அவர்கள் தப்பித்திருக்கலாம்.

அந்தக் கைதிகளின் இரக்கச் செயல், பவுல் சீலா என்பவர்கள் சிறைச் சாலையில் இருந்தபோது நடைபெற்ற காரியத்தைப் போல் உள்ளது. அவர்களின் உடைகளைக் களைந்து, அடித்து, சிறைச்சாலையில் தள்ளிய பின்னர், ஒரு பூமியதிர்ச்சி மிகவும் வன்மையாகத் தாக்கி, அவர்களின் சங்கிலிகளைத் தளர்த்தி, சிறைச்சாலை கதவுகளைத்   திறந்தது (அப்.16:23-26). சிறைச்சாலைக்காரன் நித்திரை தெளிந்த போது, கட்டில் இருந்தவர்கள் ஓடிப்போனார்கள் என்று எண்ணி, தன்னுடைய வாழ்வை முடித்துக் கொள்ளத் தயாரானான். (சிறைக் கைதிகள் தப்பித்துவிட்டால், அவனுக்குக் கிடைக்கும் கொடிய தண்டனையை அவன் அறிந்திருந்தபடியால்) அப்பொழுது பவுல்,  “நாங்கள் எல்லாரும் இங்கேதான் இருக்கிறோம்” என்று கத்தினான் (வ.28). அவர்களின் இச்செயலால், அந்த சிறைச்சாலைக்காரன் அசைக்கப் பட்டான். சிறைச்சாலையில் இத்தகைய ஒரு காரியத்தை அவர்கள் கேட்டதே இல்லை. எனவே அவன், அவர்கள் ஆராதிக்கும் தேவனைக் குறித்து அறிய ஆவலானான், அவனும் தேவனை விசுவாசித்தான் (வ.29-34).

நாம் பிறரை நடத்தும் விதம், நம்முடைய நம்பிக்கையையும் நாம் பெற்றுள்ள மதிப்பீடுகளையும் வெளிப்படுத்தும். பிறரைக் காயப் படுத்துவதற்குப் பதிலாக, நன்மை செய்ய நாம் தெரிந்து கொள்ளும் போது, நம்முடைய செயலைப் பார்க்கும் மற்றவர்களை, நாம் ஆராதிக்கும் தேவனைப் பற்றியும் அவருடைய அன்பினைப் பற்றியும் அதிசயிக்கும் படி, அவர்களைத் தூண்டும்.