அநேக ஆண்டுகளாக, பல்வேறு தரப்பட்ட மக்களைக் கொண்ட, உலகிலேயே மிகப் பெரிய பட்டணமாக லண்டன் பட்டணம் கருதப்பட்டு வருகின்றது. 1933 ஆம் ஆண்டு, ஒரு பத்திரிக்கையாளர், இங்கிலாந்தின் மிகப் பெரிய தலை நகரமான லண்டனைக் குறித்து, “வெவ்வேறு வகையான நிறமும், மொழியும் கொண்ட ஜனங்களின் அணிவகுப்பு தான் லண்டன் பட்டணத்தின் சிறந்த அம்சமாகும்” என்றார். உலகெங்கும் உள்ள மணமும், ஓசையும், காட்சிகளும் கொண்ட மக்களின் அணிவகுப்பை இன்றும் காணலாம். உலகத்திலேயே மிகப்பெரிய பட்டணங்களுள் ஒன்றில் காணப்படும் மிகப் பெரிய வேறுபாடுகள் தான், அதனுடைய பிரம்மிக்கச் செய்யும் தோற்றத்திற்குக் காரணம் எனலாம்.

மனிதர்களால் நிரம்பிய எந்தப் பட்டணத்திலும் இருக்கின்ற பிரச்சனைகள் லண்டன் பட்டணத்திலும் இருக்கின்றது. மாற்றங்கள் சவால்களைக் கொண்டு வருகின்றது. சில வேளைகளில் கலாச்சாரங்கள் மோதுகின்றன. இதனாலேயே மனிதர்களால் கட்டப்பட்ட எந்த ஒரு பட்டணமும், நமது நித்திய வீட்டின் அதிசயத்தோடு ஒப்பிடத்தகுந்ததல்ல என்று கூறமுடியும்.

அப்போஸ்தலனாகிய யோவான், தேவனுடைய பிரசன்னத்துக்குள் பிரவேசித்த போது, வேறுபாடுகள் தான் பரலோக ஆராதனையின் முக்கிய அம்சமாக இருந்தது. அங்கு மீட்கப்பட்டவர்கள், “தேவரீர் புஸ்தகத்தை வாங்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரராயிருக்கிறீர்; ஏனெனில் நீர் அடிக்கப்பட்டு, சகல கோத்திரங்களிலும் பாஷைக்காரரிலும் ஜனங்களிலும் ஜாதிகளிலுமிருந்து எங்களை தேவனுக்கென்று உம்முடைய இரத்தத்தினாலே மீட்டுக் கொண்டு, எங்கள் தேவனுக்கு முன்பாக எங்களை ராஜாக்களும், ஆசாரியர்களுமாக்கினீர்; நாங்கள் பூமியிலே அரசாளுவோம் என்று புதியப் பாட்டைப் பாடினார்கள் (வெளி. 5:9-10).

பரலோகத்தை கற்பனை செய்து பார். உலகெங்கிலிருந்தும் வந்த வெவ்வேறு ஜனக் கூட்டத்தின் மக்கள், அனைவரும் இணைந்து, ஜீவனுள்ள தேவனுடைய பிள்ளைகள் என்ற அதிசயத்தைக் கொண்டாடுகின்றார்கள்! இயேசுவின் விசுவாசிகளாகிய நாம், அந்த வேறுபாட்டை இப்பொழுதே கொண்டாடுவோம்.