தேவனுடைய ராஜியத்தை உருவாக்குதல்
“அப்பா, நீங்கள் ஏன் வேலைக்குச் செல்ல வேண்டும்?” நான் அவளோடு விளையாட வேண்டும் என்ற ஆசையால் உந்தப்பட்டு, என்னுடைய இளைய மகள் இக்கேள்வியைக் கேட்டாள். என்னுடைய வேலையைத் தள்ளிவைத்துவிட்டு, அவளோடு நேரம் செலவிடலாம், ஆனால், என்னுடைய வேலையில், நான் கவனிக்க வேண்டிய காரியங்களின் எண்ணிக்கை அதிகம் இருக்கின்றது. இல்லையென்றால், அது ஒரு நல்ல கேள்விதான். நாம் ஏன் வேலை செய்கின்றோம்? நமக்கும், நாம் நேசிப்பவர்களுக்கும் தேவையானவற்றை கொடுப்பதற்காகவா? கூலியில்லாத வேலையைக் குறித்து என்ன சொல்லுவோம்? நாம் ஏன் அதனைச் செய்ய வேண்டும்?
ஆதியாகமம் 2 ஆம் அதிகாரத்தில், தேவன் முதல் மனிதனை தோட்டத்தில், “அதைப் பண்படுத்தவும் காக்கவும் வைத்தார்” (வ.15) என்பதாகக் காண்கின்றோம். என்னுடைய மாமனார் ஒரு விவசாயி, அவர், தனக்கு நிலத்தின் மீதும், உயிரினங்களின் மீதும் உள்ள அன்பினாலேயே விவசாயம் செய்வதாக அடிக்கடி கூறுவார். இது மிகவும் அருமையானது! ஆனால், தன்னுடைய வேலையை நேசிக்காதவர்களுக்கு, அது அநேக கேள்விகளை எழுப்புகின்றது. ஏன் தேவன் நம்மை ஒரு குறிப்பிட்ட இடத்தில், ஒரு குறிப்பிட்ட வேலையில் வைத்தார்?
ஆதியாகமம் முதலாம் அதிகாரம் இதற்கான பதிலைத் தருகின்றது. தேவன் படைத்த உலகத்தை ஆளும்படி, நாம் தேவனுடைய சாயலில் உருவாக்கப் பட்டுள்ளோம் (வ.26). பிறசமயத்தினரின் கதைகளில், அவர்களின் தெய்வங்கள் மனிதனை அடிமைகளாக இருக்கும்படி உருவாக்கின என்பதாகக் காண்கின்றோம். உண்மையான தேவன் மனிதனை அவருடைய பிரதி நிதியாகப் படைத்தார் என்று ஆதியாகமத்தில் காண்கின்றோம்., அவருடைய பிரதி நிதியாக அவருடைய படைப்புகளைக் காக்கும்படி நம்மை விரும்புகிறார். அவர் விரும்பும் அன்பான கட்டளையை நாம் இவ்வுலகில் நிறைவேற்றுவோம். வேலை என்பது தேவன் படைத்த உலகை, அவருடைய மகிமைக்காக பண்படுத்துவதாகும்.
காட்டிக்கொடுக்கப் படல்
2019 ஆம் ஆண்டு, லியானார்ட் டா வின்சியின் ஐநூறாவது மறைவு தினத்தை நினைவு கூரும் வகையில், உலகளவில் கலை கண்காட்சி நடத்தப்பட்டது. அவர் வரைந்த அநேக படங்களும், அறிவியல் கண்டுபிடிப்புகளும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. அவற்றுள், முழுவதுமாக வரையப்பட்ட ஐந்து படங்கள் தான், டா வின்சிக்கு உலகளவில் பெருமை சேர்த்தது, அதில் கடைசி இராப்போஜனம் படமும் அடங்கும்.
இந்த நுணுக்கமான படத்தில், இயேசு தன்னுடைய சீடர்களோடு கடைசி உணவைச் சாப்பிட்ட காட்சி, யோவான் சுவிசேஷத்தில் குறிப்பிடப்பட்டுள்ள படி காட்டப்பட்டுள்ளது. இயேசு தன்னுடைய சீஷர்களிடம், “உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக் கொடுப்பான்” (யோவா.13:21) என்று கூறிய போது, சீஷர்கள் குழப்பமடைந்த காட்சியை இந்த படம் சித்தரிக்கின்றது. கலக்கமடைந்த சீஷர்கள், காட்டிக் கொடுப்பவன் யார் என்று தங்களுக்குள்ளே விவாதித்தனர், அச்சமயம், யூதாஸ் தன்னந்தனியாக அந்த இரவில், தன்னுடைய போதகரும், நண்பருமான இயேசுவின் நடவடிக்கைகளைக் குறித்து, அதிகாரிகளுக்குச் சொல்லும்படி வெளியேறினான்.
காட்டிக் கொடுத்தான். யூதாஸ் இழைத்த துரோகத்தின் வேதனையை இயேசுவின் வார்த்தைகளில் காணலாம். “என்னுடனே அப்பம் புசிக்கிறவன், என்மேல் தன் குதிகாலைத் தூக்கினான்” (வ.18) என்றார். ஒரு நண்பன், தன்னோடு சாப்பிடும் அளவுக்கு நெருக்கமானவன், அந்த நெருங்கிய உறவை, இயேசுவுக்கு தீங்கு இழைக்க பயன்படுத்திக் கொண்டான்.
ஒரு நண்பனின் துரோகத்தை நாம் அனைவருமே அநுபவித்திருக்கலாம். இத்தகைய வேதனையின் போது, நாம் எவ்வாறு செயல் படுவோம்? இயேசு தனக்கு துரோகம் செய்தவன், தன்னோடு அப்பம் புசித்தவன் (யோவா.13:18) என்பதைக் குறிப்பிட, சங்கீதம் 41:9 ல் கூறப்பட்டுள்ளதை எடுத்துக் கூறுகின்றார். நமக்கு நம்பிக்கை தருகின்றார் தன்னுடைய உற்ற நண்பன் செய்த வஞ்சகச் செயலால், வேதனையுற்ற தாவீது, தேவன் தன் மீது பிரியமாய் இருக்கிறார், என்றென்றைக்கும் அவருடைய சமுகத்தில் நிலை நிறுத்துவார் என்பதால் ஆறுதல் அடைகின்றார் (சங்.41:11-12).
நண்பர்கள் நம்மை ஏமாற்றும் போது, தேவனுடைய அன்பு நம்மைத் தாங்குகின்றது, அவருடைய வல்லமையான பிரசன்னம் நம்மோடிருந்து, அழிவுக்குள்ளாக்கும் வேதனைகளையும் தாங்கிக் கொள்ள நமக்கு பெலனளிக்கும்.
ஊர்ந்து செல்!
உலகம் கவனிக்கத் தவறுகின்ற மக்களை தேவன் பயன்படுத்த விரும்புகின்றார். வில்லியம் கேரி என்பவர் ஒரு சிறிய கிராமத்தில், 1700 ஆண்டுகளில் வளர்ந்தார், அவர் குறைந்த அளவே அடிப்படை கல்வியைப் பெற்றிருந்தார். அவர் தான் தெரிந்து கொண்ட வியாபாரத்தில், குறைந்த அளவு வருமானம் தான் ஈட்ட முடிந்ததால், வறுமையில் வாழ்ந்தார். தேவன் அவருக்கு, சுவிசேஷத்தைப் பரப்புவதில் தீராத தாகத்தைக் கொடுத்தார், அவரை சுவிசேஷப் பணிக்கு அழைத்தார். கேரி, கிரேக்கு, எபிரேயு, லத்தீன் மொழிகளைக் கற்றுக் கொண்டார். புதிய ஏற்பாட்டை முதன்முறையாக பெங்காலியில் மொழிபெயர்த்தார். இப்பொழுது அவர், “நவீன சுவிசேஷப் பணியின் தந்தை” என்று கெளரவிக்கப் படுகின்றார். அவர் தன்னுடைய உறவினர் ஒருவருக்கு எழுதிய கடிதத்தில், தன்னுடைய திறமைகளைக் குறித்து, “நான் மெதுவாகத் தொடர்கின்றேன், நான் தொடர்ந்து செய்வேன்” என்று பணிவோடு தெரிவித்தார்.
தேவன் ஒரு வேலையைச் செய்யும்படி நம்மை அழைக்கும் போது, அந்த வேலையை முடிப்பதற்குத் தேவையான பெலனையும் தருகின்றார், நம்முடைய குறைகளை அவர் பார்ப்பதில்லை. கர்த்தருடைய தூதனானவர் கிதியோனுக்கு தரிசனமாகி, “பராக்கிரமசாலியே கர்த்தர் உன்னோடே இருக்கிறார்” (நியா.6:12) என்றார், மேலும் அந்த தூதனானவர் அவனிடம், அவர்களின் பட்டணத்தையும், பயிர்களையும் கொள்ளையிடுகின்ற மீதியானியரிடமிருந்து இஸ்ரவேலரை மீட்கும்படியும் கூறுகின்றார். ஆனால் கிதியோன் “பராக்கிரமசாலி” என்ற பட்டத்தைப் பெற்றிருக்கவில்லை. அவன் தன்னைத் தாழ்த்தி, “ நான் இஸ்ரவேலை எதினாலே ரட்சிப்பேன்…என் தகப்பன் வீட்டில் நான் எல்லாரிலும் சிறியவன்” (வ.15) என்கின்றான். ஆயினும் தேவன், தன்னுடைய ஜனங்களை ரட்சிக்க கிதியோனைப் பயன்படுத்தினார்.
கிதியோனின் வெற்றிக்கு அடிப்படையாக இருந்த வார்த்தைகள் “கர்த்தர் உன்னோடே இருக்கிறார்” (வ.12) என்பன. நாமும் தாழ்மையுடன் நமது இரட்சகரோடு நடந்து, அவருடைய பெலனைச் சார்ந்து கொள்வோமாகில், அவர் நம்மை பெலப் படுத்தி, அவர் மூலமாக மட்டும் நடத்தக் கூடிய காரியங்களை நிறைவேற்றித்தருவார்.
தேவனுடைய தழும்புகள்
நான் கெளரவ் என்பவரோடு உறவாடிய பின்னர், அவர் வாழ்த்து தெரிவிக்க, ஏன் கைகளைக் குலுக்கிக் கொள்வதைவிட “மூடிய விரல்களை மோதிக்கொள்வதை” தெரிந்துகொண்டார் என்பதை நினைத்துப் பார்த்தேன். அவன் தன்னைத் தானே காயப்படுத்திக் கொண்டதால், உள்ளங்கையில் ஏற்பட்ட காயத்தைக் காட்ட விரும்பாததால், அவன் கைகளைக் குலுக்குவதில்லை. மற்றவர்களால் அல்லது தானே தனக்குள்ளாக ஏற்படுத்திக் கொண்ட உட்காயங்கள் அல்லது வெளிக்காயங்களை, யாருமே காட்டிக் கொள்ள விரும்புவதில்லை என்பது உண்மைதான்.
கெளரவோடு பேசிக் கொண்டபின்பு, இயேசு கிறிஸ்துவின் சரீரத்திலுள்ள காயங்களை- அவருடைய கரங்களிலும், கால்களிலும் ஆணிகள் துளைத்ததால் ஏற்பட்ட காயங்களும், விலாவில் ஈட்டி பாய்ந்ததால் ஏற்பட்ட காயத்தையும் குறித்து நினைத்துப் பார்த்தேன். தன்னுடைய காயங்களை மறைப்பதை அல்ல, அதனை கவனிக்கும்படி கிறிஸ்து விரும்புகின்றார்.
இயேசு மரித்தோரிலிருந்து எழுந்தார் என்பதைச் சந்தேகித்த தோமாவிடம் அவர், “நீ உன் விரலை இங்கே நீட்டி, என் கைகளைப் பார், உன் கையை நீட்டி, என் விலாவிலே போடு, அவிசுவாசியாயிராமல், விசுவாசியாயிரு” (யோவா.20:27) என்றார். தோமா அந்தக் காயங்களைப் பார்த்தபோது, அவன் கிறிஸ்துவின் அற்புதமான வார்த்தைகளைக் கேட்கின்றான், அவர் இயேசு என்பதை உறுதிபண்ணிக் கொண்டான். அவனுக்குள் நம்பிக்கை வந்தபோது, “என் ஆண்டவரே! என் தேவனே!” (வ. 28) என்றான். அப்பொழுது இயேசு, அவரைக் காணாதிருந்தும் அல்லது அவருடைய சரீரத்தின் காயங்களைக் காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்களுக்கு ஒரு சிறப்பான ஆசிர்வாதத்தைக் கூறுகின்றார். “காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள்’ (வ.29) என்கின்றார்.
இதில் மிகச் சிறப்பான செய்தி என்னவெனில், நம்முடைய பாவங்களின் நிமித்தம், அவர் காயப்பட்டார், நமக்கு விரோதமாகவும், பிறருக்கு விரோதமாகவும் செய்த பாவங்களுக்காக அவர் காயங்களை ஏற்றுக் கொண்டார். இயேசு கிறிஸ்துவின் மரணத்தின் மூலம், நம்முடைய பாவங்களும், அவரை விசுவாசித்து, தோமாவைப் போன்று இயேசுவை, “என் ஆண்டவரே! என் தேவனே!” என்று அறிக்கை செய்கின்றவர்களின் பாவங்களும் மன்னிக்கப் பட்டது.
கடலில் தோன்றிய மெல்லிய பிரகாசம்
“பழைய மதுபானத்தாலும், விரக்தியாலும் நிறைந்தவனாய் நான் படுக்கையில் படுத்திருக்கின்றேன், இந்த அண்டத்தில், நீண்ட நாட்களாக ஒரு துளி வெளிச்சத்தையும் காணாமல், தனிமையில் இருக்கின்றேன்” என்று ஓர் அரசாங்கத்தின் ரகசிய ஏஜென்டாகப் பணிபுரியும் ஒரு பிரசித்தி பெற்ற நபர், தன்னுடைய வேலையில், ஒரு சோகமான மாலைப் பொழுதைக் குறித்து எழுதுகின்றார்.
இந்த நிலையில், அவரது மனதுக்கு எது சரியென்று தோன்றியதோ அதைச் செய்ய முற்பட்டார். அவர், தன்னை மூழ்கடிக்க நினைத்தார். அருகிலுள்ள கடற்கரைக்கு காரை ஓட்டிச் சென்றார், தன்னுடைய ஆற்றல் முழுவதையும் இழக்கும் வரை நீண்ட தூரம் நீந்திக் கொண்டிருந்தார், திடீரென பின்னால் திரும்பிப் பார்த்தார், தூரத்தில் தெரிந்த கடற்கரையில் வெளிச்சத்தைக் கண்டார். அந்த வேளையில் என்ன காரணத்திற்காக என்பதை அறியாமலேயே, அந்த ஒளியை நோக்கி நீந்த ஆரம்பித்தார். அவருடைய சோர்வின் மத்தியில் “ஓர் அடக்க முடியாத மகிழ்ச்சியை” அவர் உணர்ந்தார்.
முகெரிட்ஜ்(Muggeridge) என்ற அவர், அது எப்படி நடந்தது என்பதை அறியாவிட்டாலும், அந்த இருண்ட வேளையில், தேவன் அவரைச் சந்தித்தார் என்பதை மட்டும் நன்கு உணர்ந்தார், அவருக்குள், இயற்கைக்கும் அப்பாற்பட்ட ஒரு நம்பிக்கையை உணர்ந்தார். அப்போஸ்தலனாகிய பவுல் இத்தகைய ஒரு நம்பிக்கையைக் குறித்து அடிக்கடி எழுதுகின்றார். கிறிஸ்துவை அறிந்து கொள்ளும் முன்பு நாம் அனைவரும் “(நம்முடைய) அக்கிரமங்களினாலும், பாவங்களினாலும் மரித்தவர்களாய், நம்பிக்கையில்லாதவர்களும், இவ்வுலகத்தில் தேவனற்றவர்களுமாய்” இருந்தோம் (எபே.2:1,12), ஆனால், “தேவனோ இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய் நம்மில் அன்புகூர்ந்த தம்முடைய மிகுந்த அன்பினாலே, அக்கிரமங்களில் மரித்தவர்களாய் இருந்த நம்மைக் கிறிஸ்துவுடனே கூட உயிர்ப்பித்தார்” (வ.4-5).
இந்த உலகம் நம்மை ஆழத்தினுள் இழுத்துச் செல்கின்றது, ஆனாலும், நாம் விரக்திக்குள் அமிழ்ந்து போகத் தேவையில்லை. முகெரிட்ஜ், தான் கடலில் நீந்திய அநுபவத்தைக் கூறும் போது, “இருள் என்பதேயில்லை என்பதை நான் நன்கு தெளிவாகப் புரிந்து கொண்டேன், நித்தியமாக வீசிக்கொண்டிருக்கும் ஒளியை நாம் காணத்தவறுவதே அதற்குக் காரணம்” என்றார்.