“பழைய மதுபானத்தாலும், விரக்தியாலும் நிறைந்தவனாய் நான் படுக்கையில் படுத்திருக்கின்றேன், இந்த அண்டத்தில், நீண்ட நாட்களாக ஒரு துளி வெளிச்சத்தையும் காணாமல், தனிமையில் இருக்கின்றேன்” என்று ஓர் அரசாங்கத்தின் ரகசிய ஏஜென்டாகப் பணிபுரியும் ஒரு பிரசித்தி பெற்ற நபர், தன்னுடைய வேலையில்,   ஒரு சோகமான மாலைப் பொழுதைக் குறித்து எழுதுகின்றார்.

இந்த நிலையில், அவரது மனதுக்கு எது சரியென்று தோன்றியதோ அதைச் செய்ய முற்பட்டார். அவர், தன்னை மூழ்கடிக்க நினைத்தார். அருகிலுள்ள கடற்கரைக்கு காரை ஓட்டிச் சென்றார், தன்னுடைய ஆற்றல் முழுவதையும் இழக்கும் வரை நீண்ட தூரம் நீந்திக் கொண்டிருந்தார், திடீரென பின்னால் திரும்பிப் பார்த்தார், தூரத்தில் தெரிந்த கடற்கரையில் வெளிச்சத்தைக் கண்டார். அந்த வேளையில் என்ன காரணத்திற்காக என்பதை அறியாமலேயே, அந்த ஒளியை நோக்கி நீந்த ஆரம்பித்தார். அவருடைய சோர்வின் மத்தியில் “ஓர் அடக்க முடியாத மகிழ்ச்சியை” அவர் உணர்ந்தார்.

முகெரிட்ஜ்(Muggeridge) என்ற அவர், அது எப்படி நடந்தது என்பதை அறியாவிட்டாலும், அந்த இருண்ட வேளையில், தேவன் அவரைச் சந்தித்தார் என்பதை மட்டும் நன்கு உணர்ந்தார், அவருக்குள், இயற்கைக்கும் அப்பாற்பட்ட ஒரு நம்பிக்கையை உணர்ந்தார். அப்போஸ்தலனாகிய பவுல் இத்தகைய ஒரு நம்பிக்கையைக் குறித்து அடிக்கடி எழுதுகின்றார். கிறிஸ்துவை அறிந்து கொள்ளும் முன்பு நாம் அனைவரும்  “(நம்முடைய) அக்கிரமங்களினாலும், பாவங்களினாலும் மரித்தவர்களாய், நம்பிக்கையில்லாதவர்களும், இவ்வுலகத்தில் தேவனற்றவர்களுமாய்” இருந்தோம் (எபே.2:1,12), ஆனால், “தேவனோ இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய் நம்மில் அன்புகூர்ந்த தம்முடைய மிகுந்த அன்பினாலே, அக்கிரமங்களில் மரித்தவர்களாய் இருந்த நம்மைக் கிறிஸ்துவுடனே கூட உயிர்ப்பித்தார்” (வ.4-5).

இந்த உலகம் நம்மை ஆழத்தினுள் இழுத்துச் செல்கின்றது, ஆனாலும், நாம் விரக்திக்குள் அமிழ்ந்து போகத் தேவையில்லை. முகெரிட்ஜ், தான் கடலில் நீந்திய அநுபவத்தைக் கூறும் போது,   “இருள் என்பதேயில்லை என்பதை நான் நன்கு தெளிவாகப் புரிந்து கொண்டேன், நித்தியமாக வீசிக்கொண்டிருக்கும் ஒளியை நாம் காணத்தவறுவதே அதற்குக் காரணம்” என்றார்.