ஒலி வாயிலாக கட்டுப்படுத்தப்படும் அமெசான் சாதனமான அலெக்சா, ஆர்வமளிக்கக் கூடிய ஓர் அம்சத்தைக் கொண்டுள்ளது.  அதாவது, அதில் கூறியுள்ள அனைத்து செய்திகளையும் அழித்துவிடலாம். அலெக்சாவைச் செய்யும்படி கூறியுள்ள அனைத்தையும், அதனிடமிருந்து கேட்டுப் பெற்றுக் கொண்ட அனைத்துச் செய்திகளையும் அழித்து விடலாம். ஓர் எளிய வாக்கியத்தால் (“நான் இன்று கூறிய அனைத்தையும் அழித்துவிடு”) அனைத்தையும் சுத்தமாக அழித்துவிடலாம், அது அங்கு இருந்தது என்பதற்கான அடையாளமேயில்லாமல் அழிக்கமுடியும். ஆனால்  நாம் தவறாகப் பேசிய வார்த்தைகளும்,  நம்முடைய ஒவ்வொரு கருணையற்ற செயலும், நாம் மறந்து விட நினைக்கும் நிகழ்வுகள் அனைத்தும், நாம் கூறும் ஒரே கட்டளையின் மூலம் அழித்து விட முடியும் என்ற வசதி நம்முடைய வாழ்க்கையில் இல்லை என்பது எத்தனை மோசமானது!

ஆனால் நமக்கு ஒரு நற்செய்தி உள்ளது. நாம் அனைவரும் ஒரு புதிய, தூய்மையான துவக்கத்தை ஆரம்பிக்க தேவன் நம்மை அழைக்கின்றார். அவர் நம்முடைய தவறுகளையும், கெட்ட பழக்கங்களையும் வெறுமனே நீக்குகிறவர் மட்டுமல்ல, அவர் இன்னும் ஆழமாகச் செல்கின்றார். அவர் நம்மை மீட்டு, முழுவதும் மாற்றும்படி ஆழமாக கழுவுகின்றார், நம்மை முற்றிலும் மாற்றி புதியதாக்குகின்றார். “என்னிடத்தில் திரும்பு; உன்னை நான் மீட்டுக்கொண்டேன்” (ஏசா.44:22) என்கின்றார். இஸ்ரவேலர் கலகம் பண்ணி, கீழ்படியாமல் போனபோதும், தேவன்  மிகுந்த இரக்கத்துடன் அவர்களுக்கு இரங்கினார். அவர்களின் “மீறுதல்களை மேகத்தைப் போலவும், (அவர்களின்) பாவங்களை கார்மேகத்தைப் போலவும்” (வ.22) அகற்றிவிட்டார். அவர்களுடைய அவமானங்களையும், தோல்விகளையும் சேர்த்து, அவற்றை  அவருடைய ஆழ்ந்த கிருபையினால் துடைத்து விட்டார்.

தேவன் நம்முடைய பாவங்களையும், தவறுகளையும் அவ்வாறே செய்கின்றார். அவரால் சரி செய்யக்கூடாத தவறு ஒன்றுமேயில்லை, அவரால் குணமாக்க முடியாத காயமுமில்லை. நம்முடைய ஆத்துமாவின் வேதனை நிறைந்த பகுதிகளை தேவனுடைய இரக்கம் சுகப்படுத்துகின்றது, நாம் இதுவரை மறைத்து வைத்திருந்த காரியங்களையும், நம்முடைய குற்ற உணர்வுகளையும், நாம் மனம் வருந்தும் அனைத்து காரியங்களையும் அவருடைய இரக்கம் முற்றிலும் கழுவி சுத்தப் படுத்துகின்றது.