ஒருவருக்காக ஒருவர் உண்டாக்கப்பட்டனர்
“நான் அவரைப் பாதுகாக்கின்றேன், அவர் மகிழ்ச்சியாக இருக்கும் போது நானும் மகிழ்ச்சியாக இருக்கின்றேன்” என்றாள் ஸ்டெல்லா. “அவள் என்னருகில் இருக்கும் போது நான் மகிழ்ச்சியாக இருக்கின்றேன்” என்றார் பிரதீப். ஸ்டெல்லாவும் பிரதீப்பும் திருமணமாகி 79 ஆண்டுகள் ஆகின்றது. சமீபத்தில் பிரதீப் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டபோது, அவரது நிலை மிகவும் மோசமாக இருந்தது, எனவே, ஸ்டெல்லா அவரை மீண்டும் வீட்டிற்கு கொண்டு வந்தாள். அவருக்கு வயது 101, அவளுக்கு 95. அவள் ஒரு நடைகருவியை பயன்படுத்தி நடந்தாலும், அவருக்குப் பிடித்தமான உணவு தயாரித்தல் போன்ற, தன்னால் இயன்ற உதவியை, தன்னுடைய கணவனுக்குச் செய்து வந்தாள், அதையும் அவளால் தனிமையாகச் செய்யமுடியவில்லை. பேரப்பிள்ளைகளும், அருகில் இருப்போரும் அவளுக்கு உதவி செய்தனர்.
ஸ்டெல்லா, பிரதீப் ஆகியோரின் இணைந்த வாழ்க்கை, ஆதியாகமம் 2 ல் கூறப்பட்டுள்ள “மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன்” (வ.18) என்று தேவன் கூறியதற்கு ஏற்ப அமைந்துள்ளது. ஆதாமுக்கு முன்பாக தேவன் கொண்டு வந்த அவருடைய படைப்புகளில் எந்த உயிரினமும் இந்த வார்த்தைக்கு ஏற்ப அமையவில்லை. ஆனால், அவனுடைய விலா எலும்பிலிருந்து உண்டாக்கப்பட்ட ஏவாளைத் தனக்கு ஏற்ற துணையாகவும் உதவியாளருமாகக் கண்டான் (வ.19-24).
ஆதாமுக்கு ஏற்ற துணையாக ஏவாள் அமைந்தாள், இவர்கள் மூலமாக தேவன் திருமணத்தை ஏற்படுத்தினார். இது, ஒருவருக்கொருவர் உதவியாக இருப்பதற்காக மட்டுமல்ல, ஒரு குடும்பத்தை தொடங்கவும், அவருடைய படைப்புகளைப் பாதுகாக்கவும் ஏற்படுத்தப்பட்டது. இதில், மற்ற மக்களும் அடங்குவர் (1:28). அந்த முதல் குடும்பத்திலிருந்து சமுதாயம் உருவானது, திருமணம் ஆனவர்கள், தனியாக இருப்பவர், வயதானவர், இளைஞர் யாருமே தனியாக இல்லை. நாம் அனைவரும் ஒரு சமுதாயத்தினர், “ஒருவருடைய பாரத்தை ஒருவர் சுமக்கத்தக்க” வாய்ப்பை தேவன் நமக்குத் தந்துள்ளார் (கலா. 6:2).
அவன் என்னை மாற்றினான்
லண்டன் பட்டணத்தில், மிகப்பெரிய விபச்சார விடுதி நடத்தி வந்த ஜாண், சிறைச்சாலைக்கு அனுப்பப் பட்டபோது, தன்னை நல்லவன் என்று தவறாக நம்பினான். அங்கு சிறைச்சாலையில் நடைபெற்று வந்த வேதாகம வகுப்பில் தரப்படும் கேக் மற்றும் காப்பிக்காக அங்கு சென்றான். ஆனால், அங்கு வருபவர்களிடம் காணப்படும் மகிழ்ச்சி, அவனைச் சிந்திக்க வைத்தது. முதல் பாடல் வேளையில் அவன் அழ ஆரம்பித்தான், பின்னர் ஒரு வேதாகமத்தைப் பெற்று வாசிக்க ஆரம்பித்தான். எசேக்கியேல் தீர்க்கதரிசியின் புத்தகம் அவனை மாற்றியது. எதிர்பாராத விதமாக அவன் “துன்மார்க்கன் தான் செய்த துன்மார்க்கத்தை விட்டு விலகி, நியாயத்தையும் நீதியையும் செய்வானேயாகில்…………….. அவன் பிழைக்கவே பிழைப்பான், அவன் சாவதில்லை” (எசே.18:27-28) என்ற வார்த்தையைப் படித்தான். தேவனுடைய வார்த்தைகள் அவனுக்குள் ஜீவன் பெற்றது, அவன் உணர்வடைந்தான், “நான் நல்லவனல்ல,………..நான் தீமை செய்தேன், நான் மாற வேண்டும்” என்றான், அவன் போதகரோடு சேர்ந்து ஜெபித்த போது, “நான் இயேசுவைக் கண்டேன், அவர் என்னை மாற்றினார்” என்றான்.
தேவனுடைய ஜனங்கள் சிறைப்பிடிக்கப் பட்டிருந்த போது, எசேக்கியேல் தீர்க்கதரிசி, இந்த வார்த்தைகளைப் பேசினார். அவர்கள் தேவனை விட்டு, பின்வாங்கிப் போயிருந்தாலும், அவர்கள் தங்கள் பொல்லாத கிரியைகளை விட்டு மனந்திரும்பி, “புது இருதயத்தையும், புது ஆவியையும்” (வ.31) உண்டு பண்ணிக்கொள்ள வேண்டும் என விரும்புகின்றார். “மனந்திரும்புங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்” (வ.32) என்ற வார்த்தைகள் ஜாணுக்கு உதவியது. பாவிகளை மனந்திரும்புங்கள் (லூக்.5:32) என்று அழைத்த இயேசுவைப் பின்பற்றினான்.
நம்முடைய ஆவியில் உணர்த்தப் படுகின்ற பாவங்களைக் குறித்து மனம் வருந்துவோம். நாமும் மன்னிப்பைப் பெற்று விடுதலையோடு வாழ்வோம்.
நாம் இணைந்து வெற்றிபெறுவோம்
நடு இரவில், போதகர் சாமுவேல் என்பவருக்கு, அவருடைய சபை உறுப்பினர் ஒருவரின் வீட்டிற்கு வருமாறு அழைப்பு வந்தது. அவர் அங்குச் சென்ற போது அவருடைய வீடு முழுவதும் பற்றி எரிவதைக் கண்டார். அந்த தந்தையின் மீது நெருப்பு பற்றிக் கொண்டபோதிலும், அதோடு தன்னுடைய குழந்தையைக் காப்பாற்றும்படி உள்ளே சென்று, மயங்கிய நிலையில் இருந்த தன் மகளை வெளியே கொண்டு வந்தார். அந்த கிராமப் பகுதியில், 10 கிலோமீட்டருக்கு அப்பால் தான் மருத்துவமனை இருந்தது. அவர்களுக்கு எந்த வாகன வசதியும் இல்லாதபடியால், அந்த போதகரும், தந்தையும் அக்குழந்தையோடு ஓடத்துவங்கினர், ஒருவர் அக்குழந்தையைச் சுமந்து களைத்துப் போனால், மற்றவர் அவளை சுமந்து கொண்டு ஓடுவார். இருவரும் சேர்ந்து அந்த பயணத்தைச் செய்தனர். தந்தையும் மகளும் சிகிச்சை பெற்று முழுவதும் குணமாயினர்.
யாத்திராகமம் 17:8-13ல், தேவன் யோசுவாவின் முயற்சியோடு, ஒரு திட்டமிட்ட வெற்றியை தருகின்றார். இங்கு யோசுவா யுத்தம் செய்யும் மனிதர்களை போர்களத்தில் வழி நடத்துகின்றான். மோசே தேவனுடைய கோலை உயர்த்திப் பிடித்துக் கொண்டிருக்கின்றான். அவனுடைய கரங்கள் தளர்ந்த போது, ஆரோனும், ஊரும் அவனுடைய கரங்களை, சூரியன் மறையும் வரையும் தாங்கிப் பிடிக்கின்றனர், எதிரிகளைத் தோற்கடிக்கின்றனர்.
ஒருவரையொருவர் சார்ந்து வாழ்வதின் மதிப்பை நாம் குறைவாக நினைக்கக் கூடாது. இரக்கமுள்ள தேவன், ஒருவருக்கொருவர் நன்மை செய்யும்படி, அவருடைய ஜனங்களைத் தன் சார்பாகத் தந்துள்ளார். நமக்கு செவிகொடுக்கும் காதுகளையும், உதவிசெய்யும் கரங்களையும், ஞானம், ஆறுதல் மற்றும் திருத்தும் வார்த்தைகளைத் தரக்கூடிய நபர்களை நம்மிடம் வரவும் நம்மூலமாக பிறருக்குக் கிடைக்கவும் செய்கின்றார். நாம் இணைந்து ஜெயிப்போம், தேவனுடைய நாமம் மகிமைப் படுவதாக.
பரத்திலிருந்து கொடுக்கப்படும் ஞானமுள்ள பார்வை
1970 ஆம் ஆண்டு, பீட்டர் வெல்ச் என்பவர் இளைஞனாக இருந்த போது, உலோகத்தைக் கண்டுபிடிக்கும் கருவி ஒன்றை பொழுது போக்காக பயன் படுத்தினார். 1990 ஆம் ஆண்டு முதல், உலோகங்களைக் கண்டிபிடிக்கும் நோக்கோடு, உலகெங்கிலும் இருந்து வரும் மக்களை அழைத்துச் செல்வார். அவர்கள்- வாள்கள், பழங்கால ஆபரணங்கள், நாணயங்கள் என ஆயிரக்கணக்கான கண்டுபிடிப்புகளைச் செய்தனர். “கூக்குள் எயர்த்” என்ற கணினி முறையின் மூலம் துணைக் கோள் படங்களை பயன் படுத்தி, ஐக்கிய அரசாட்சியில் இருந்த நிலப்பரப்பின் பண்ணை நிலங்களின் வரைபடங்களை கண்டிபிடித்தனர். அதன் மூலம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்த சாலைகள், கட்டடங்கள், பிற கட்டுமானங்களை கண்டறிந்தனர். “பரத்திலிருந்து தேவன், நம் கண்களைத் திறக்கும் போது, ஒரு புதிய உலகையும் திறந்து காண்பிக்கின்றார்” என்கின்றார் பேதுரு.
ஏசாயா காலத்தில் இருந்த ஜனங்களுக்கும் “பரத்திலிருந்து பார்க்கக் கூடிய ஒரு கண்ணோட்டம்” தேவை. அவர்கள் தேவனுடைய ஜனங்கள் என்பதால், அவர்கள் தங்களைக் குறித்த பெருமையைக் கொண்டிருந்தனர், ஆனாலும் கீழ்ப்படியாதவர்களாய், தங்களின் விக்கிரங்களைத் தங்களை விட்டு அகற்றவில்லை. தேவன் வேறொரு கண்ணோட்டத்துடன் அவர்களைப் பார்த்தார், அவர்கள் தனக்கு எதிராகச் செயல்பட்டாலும், தேவன் அவர்களை பாபிலோனியரின் சிறையிருப்பிலிருந்து மீட்டார். ஏன்? “என்னிமித்தம், என்னிமித்தமே……………….என் மகிமையை நான் வேறொருவருக்கும் கொடேன்” ஏசா.48:11) என்கின்றார். தேவன் நம்மைப் பார்க்கும் கண்ணோட்டம் என்னவெனின், நம்முடைய வாழ்வின் நோக்கம் நம்முடையதல்ல, நம்முடைய வாழ்வு அவருடைய மகிமைக்காகவே கொடுக்கப்பட்டுள்ளது. நம்முடைய கவனம் அவரையும், அவருடைய திட்டத்தையும் நோக்கி இருக்க வேண்டும், நம்முடைய வாழ்வு பிறரை தேவனைத் துதிக்கும் படித் திருப்ப வேண்டும்.
தேவனை மகிமைப் படுத்துவதே நம் வாழ்வின் முக்கிய கண்ணோட்டமாக இருப்பின், அது ஒரு புதிய உலகை நமக்குத் திறக்கின்றது, அவரைப் பற்றி நாம் கண்டுபிடிப்பதையும், அவர் நமக்கு வைத்திருக்கும் திட்டத்தையும் அவர் ஒருவரே அறிவார், நமக்கு எது நல்லது என்பதை அவர் கற்றுத் தருவார், நாம் போகவேண்டிய பாதையில் அவர் நம்மை நடத்துவார் (வ.17).