நடு இரவில், போதகர் சாமுவேல் என்பவருக்கு, அவருடைய சபை உறுப்பினர் ஒருவரின் வீட்டிற்கு வருமாறு அழைப்பு வந்தது. அவர் அங்குச் சென்ற போது அவருடைய வீடு  முழுவதும் பற்றி எரிவதைக் கண்டார். அந்த தந்தையின் மீது நெருப்பு பற்றிக் கொண்டபோதிலும், அதோடு தன்னுடைய குழந்தையைக் காப்பாற்றும்படி உள்ளே சென்று, மயங்கிய நிலையில் இருந்த தன் மகளை வெளியே கொண்டு வந்தார். அந்த கிராமப் பகுதியில், 10 கிலோமீட்டருக்கு அப்பால் தான் மருத்துவமனை இருந்தது. அவர்களுக்கு எந்த வாகன வசதியும் இல்லாதபடியால், அந்த போதகரும், தந்தையும் அக்குழந்தையோடு ஓடத்துவங்கினர், ஒருவர் அக்குழந்தையைச் சுமந்து களைத்துப் போனால், மற்றவர் அவளை சுமந்து கொண்டு ஓடுவார். இருவரும் சேர்ந்து அந்த பயணத்தைச் செய்தனர். தந்தையும் மகளும் சிகிச்சை பெற்று முழுவதும் குணமாயினர்.

யாத்திராகமம் 17:8-13ல், தேவன் யோசுவாவின் முயற்சியோடு, ஒரு திட்டமிட்ட வெற்றியை தருகின்றார். இங்கு யோசுவா யுத்தம் செய்யும் மனிதர்களை போர்களத்தில் வழி நடத்துகின்றான். மோசே தேவனுடைய கோலை உயர்த்திப் பிடித்துக் கொண்டிருக்கின்றான். அவனுடைய கரங்கள் தளர்ந்த போது, ஆரோனும், ஊரும் அவனுடைய கரங்களை, சூரியன் மறையும் வரையும் தாங்கிப்  பிடிக்கின்றனர், எதிரிகளைத் தோற்கடிக்கின்றனர்.

ஒருவரையொருவர் சார்ந்து வாழ்வதின் மதிப்பை நாம் குறைவாக நினைக்கக் கூடாது. இரக்கமுள்ள தேவன், ஒருவருக்கொருவர் நன்மை செய்யும்படி, அவருடைய ஜனங்களைத் தன் சார்பாகத்     தந்துள்ளார். நமக்கு செவிகொடுக்கும் காதுகளையும், உதவிசெய்யும் கரங்களையும், ஞானம், ஆறுதல் மற்றும் திருத்தும் வார்த்தைகளைத் தரக்கூடிய நபர்களை நம்மிடம் வரவும் நம்மூலமாக பிறருக்குக் கிடைக்கவும் செய்கின்றார். நாம் இணைந்து ஜெயிப்போம், தேவனுடைய நாமம் மகிமைப் படுவதாக.