ஸ்டெல்லா, ஒரு நாள், ஒரு பெட்ரோல் நிரப்பும் மையத்தில் ஒரு பெண்ணைச் சந்திக்கின்றாள், அவள் தன்னுடைய வீட்டில் வங்கி அட்டையை விட்டு விட்டு வந்திருந்தாள். தன்னுடைய குழந்தையோடு, தனித்து விடப்பட்டவளாய், அங்கு வருபவர்களிடம் உதவி கேட்டாள். அந்நேரத்தில் வேலையில் இல்லாதிருந்தும், ஸ்டெல்லா அவளுக்கு ரூபாய் 500 செலவளித்தாள், அறிமுகமில்லாத அப்பெண்ணுடைய வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்ப உதவினாள். அநேக நாட்களுக்குப் பின், அவள் வீட்டிற்குத் திரும்பிய போது, ஒரு பரிசுக் கூடையில் சிறுவருக்கான விளையாட்டுப் பொருட்களும், மற்றும் சில பொருட்களும் அவளுடைய வீட்டின் தாள்வாரத்தில் காத்திருந்தது. அந்த அறியாத நபரின் நண்பர்கள், ஸ்டெல்லாவின் இரக்கத்தை, மறக்கமுடியாத கிறிஸ்மஸ் பரிசுகளின் மூலம், அவளுடைய 500 ரூபாயை ஆசிர்வாதமாக மாற்றியுள்ளனர்.

இருதயத்தை மகிழ்விக்கும் இந்த கதை, இயேசு கூறிய, “கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து, உங்கள் மடியிலே போடுவார்கள்; நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப் படும்” (லூக். 6:38) என்ற வார்த்தைகளை நினைவு படுத்துகின்றது.

இதைக் கேட்கும் போது, நமக்கும் கொடுக்கும் போது என்ன கிடைக்கும் என்பதில் கவனம் செலுத்த தோன்றும், ஆனால் அப்படிச் செய்யும் போது, நாம் கொடுத்தலின் உண்மையை இழந்து விடுவோம். இயேசு இந்த வார்த்தைகளைக் கூறுவதற்கு முன்பு, “உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள், நன்மை செய்யுங்கள், கைம்மாறு கருதாமல் கடன் கொடுங்கள்; அப்பொழுது உங்கள் பலன் மிகுதியாயிருக்கும், உன்னதமானவருக்கு நீங்கள் பிள்ளைகளாய் இருப்பீர்கள்; அவர் நன்றியறியாதவர்களுக்கும் துரோகிகளுக்கும் நன்மை செய்கிறாரே” (வ.35) என்று கூறியுள்ளார்.

நாம் பொருட்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக கொடுப்பதில்லை; நாம் கொடுக்கின்றோம், ஏனெனில், தேவன் நம்முடைய தாராள ஈகையில் பிரியமாயிருக்கின்றார். நாம் பிறர்மேல் செலுத்தும் அன்பு, தேவன் நம்மீது வைத்திருக்கும் அன்பைக் காட்டுகின்றது.