உபத்திரவத்தில் பெலன்
1948 ஆம் ஆண்டு, ரஷ்யாவிலுள்ள ஓர் இரகசிய ஆலயத்தின் போதகராக இருந்த, பல்கேரியா நாட்டைச் சேர்ந்த கார்லன் பாப்பவ் என்பவரை “விசாரணைக்காக,” அவருடைய வீட்டிலிருந்து அழைத்துச் சென்றனர். இரண்டு வாரங்கள் கழித்து, அவர் ஒரு நாள் முழுவதும் விசாரணை செய்யப் பட்டார், பத்து நாட்கள் அவருக்கு எந்த உணவும் வழங்கப் படவில்லை. ஒவ்வொரு முறையும், தான் ஒரு ஒற்றன் அல்ல என்பதையே தெரிவித்த போது அவரை அதிகமாக அடித்தனர், பாப்பவ் இந்த கடினமான நடத்துதலை தாங்கிக் கொண்டதோடு, தன்னோடுள்ள மற்ற கைதிகளையும் இயேசுவுக்குள் நடத்தினார். கடைசியாக பதினோரு ஆண்டுகள் கழித்து, அவர் விடுதலை பெற்றார். அவர் தொடர்ந்து தன்னுடைய விசுவாசத்தை மற்றவர்களோடு பகிர்ந்து கொண்டார். கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் அந்த நாட்டை விட்டு வெளியேறி, தன்னுடைய குடும்பத்தோடு சேர்ந்தார். அவர் தொடர்ந்து போதனை செய்வதிலும், அடைபட்ட நாடுகளுக்கு வேதாகமத்தைக் கொடுப்பதற்காக பணம் திரட்டுவதிலும் தன் நாட்களைச் செலவிட்டு வருகின்றார்.
கடந்த காலங்களில் கொலைசெய்யப்பட்ட அநேக இயேசுவின் விசுவாசிகளைப் போன்று, பாப்பவும் அவருடைய விசுவாசத்தின் நிமித்தம் உபத்திரவப்பட்டார். சிறையிலிரு ந்து விடுவிக்கப்பட்ட அவர் தன்னுடைய தேசத்திற்கு அனுப்பபட்டார், ஒரு மாதம் கழித்து அவர் மரித்துப் போனார். கிறிஸ்து பாடு பட்டு, மரணம் அடைந்த பின், அதனைத் தொடர்ந்து, அவரைப் பின்பற்றிய அநேகர் கொலைசெய்யப் பட்டனர். இவை நடைபெறுவதற்கு, அநேக நாட்களுக்கு முன்பே, “நீதியின் நிமித்தம் துன்பப் படுகிறவர்கள் பாக்கியவான்கள்; பரலோக ராஜ்யம் அவர்களுடையது” (மத்.5:10) என்று இயேசு கூறினார். இன்னும், “என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவிதமான தீமையான மொழிகளையும் உங்கள் பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள்” (வ.11) என்றும் கூறினார்.
“பாக்கியவான்கள்” என்பதன் மூலம் இயேசு கருதியதென்ன? அவரோடு நாம் கொண்டுள்ள உறவின் முழுமையையும், மகிழ்ச்சியையும், ஆறுதலையும் குறிப்பிடுகின்றார் (வ.4, 8-10). துயரத்தின் மத்தியிலும் தேவனுடைய பிரசன்னம் அவரோடிருந்து அவரை பெலப் படுத்தியதால், பாப்பவ் உறுதியாயிருக்க முடிந்தது. நாம் எத்தகைய சூழலில் இருந்தாலும், நாம் தேவனோடு நடக்கும் போது அவருடைய சமாதானத்தை அநுபவிக்க முடியும். அவர் நம்மோடிருக்கின்றார்.
இரட்சிப்பவர்
“உயிரோடு இருப்பவர்களில் மிகவும் தைரியமானவர்” என்று டெஸ்மாண்ட் அழைக்கப் பட்டார். ஆனால் மற்றவர்கள் எதிர்பார்ப்பதைப் போன்று அவர் இருந்ததில்லை. அவர் துப்பாக்கியை கையில் ஏந்த மறுத்த ஓர் இராணுவ வீரர். மருத்துவத் துறையைச் சார்ந்த அவர், தனிமனிதனாக, ஒரு யுத்தத்தின் போது, எழுபத்தைந்து காயமடைந்த வீரர்களை பதுகாப்பாக மீட்டார், அதில், அவரைக் கோழை என அழைத்தவர்களும், அவருடைய நம்பிக்கையை ஏளனம் செய்தவர்களும் அடங்குவர். இந்த வீரர், அதிகமான துப்பாக்கிச் சூடு நடைபெறும் பகுதியினுள் தொடர்ந்து ஜெபித்துக் கொண்டே ஓடி, “தேவனே, இன்னும் ஒருவரைக் காப்பாற்ற உதவியருளும்” என்றார். அவருடைய வீரத்தைப் பாராட்டி, அவருக்கு கெளரவ பதக்கம் வழங்கப்பட்டது.
இயேசுவை அநேகர் புரிந்து கொள்ளவில்லை என வேதாகமம் கூறுகின்றது. சகரியா முன்னுரைத்தபடி (9:9) ஒரு நாளில், இயேசு எருசலேம் நகரத்திற்கு கழுதையின் மீது ஏறி, செல்கின்றார், மக்கள் கூட்டம் மரக் கிளைகளை அசைத்து, “ஓசன்னா!” (“இரட்சிப்பு” என்று அர்த்தம் கொள்ளும் ஆராதிக்கும் ஒரு வார்த்தை) என்று ஆர்ப்பரிக்கின்றது. சங்கீதம் 118:26ல் கூறப்பட்டுள்ள படி, அவர்கள், “கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்!” என்று ஆர்ப்பரித்தார்கள் (யோவா.12:13). இந்தச் சங்கீதத்தின் அடுத்த வசனம் பலியைக் கொண்டுவருதலைக் குறிக்கின்றது (சங். 118:27). யோவான் 12ல் குறிப்பிட்டிருந்த கூட்டம், அவர்களை ரோமர்களிடமிருந்து விடுவிக்கும் ஒரு புவியாளும் மன்னனை எதிர்பார்த்தது, ஆனால் இயேசுவோ அதற்கும் மேலானவர், அவர் ராஜாதி ராஜா, நமக்காக பலியாக வந்தவர், தேவன் மாம்சத்தில் வந்தார், நம்முடைய பாவங்களிலிருந்து நம்மை மீட்பதற்காக, மனப்பூர்வமாக சிலுவையை ஏற்றுக் கொண்டார், அநேக நூற்றாண்டுகளுக்கு முன்பாக தீர்க்க தரிசனமாக உரைக்கப்பட்டதை நிறைவேற்றினார்.
“இவைகளை அவருடைய சீஷர்கள் துவக்கத்திலே அறியவில்லை” என யோவான் எழுதுகின்றார். ஆனால் பின்பு, “இப்படி அவரைக் குறித்து எழுதியிருக்கிறதையும்……நினைவுகூர் ந்தார்கள்” (யோவா.12:16). அவருடைய வார்த்தையின் வெளிச்சத்திலே தேவனுடைய நித்திய நோக்கம் அவர்களுக்குத் தெளிவானது. நமக்கு ஒரு வல்லமையுள்ள இரட்சகரை அனுப்பும் அளவுக்கு, அவர் நம்மை நேசிக்கின்றார்!
நம்முடைய ஆழ்ந்த ஏக்கங்கள்
ஒரு வாலிபனான டேனியல், தனக்குப் போதிய பணம் இல்லை என்ற பயத்தோடு, தன்னுடைய இளம்வயதிலேயே தனக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை அமைத்துக் கொள்வதில் குறியாக இருந்தான். ஒரு பிரசித்திப் பெற்ற கணினி தொழிற்சாலையில் பணியைத்துவக்கி, அதில் படிப் படியாக உயர்ந்தான், மிகப் பெரிய செல்வத்தைச் சேர்த்தான். மிகப் பெரிய வங்கிக் கணக்கு, உயர் ரக கார், கோடிக் கணக்கான பெருமதியுள்ள வீடு என அவன் விரும்பியதையெல்லாம் வாங்கினான். ஆயினும் அவன் மிகவும் மகிழ்ச்சியற்றவனாக காணப்பட்டான். “நான் மிகவும் ஆவலோடும் திருப்தியற்றவனாகவும் காணப்படுகிறேன்” என்றான் டேனியல். “உண்மையில் செல்வம் வாழ்வை மிகவும் மோசமானதாக மாற்றிவிட்டது” என்றான். குவித்து வைக்கப் பட்டுள்ள பணத்தினால் நட்பையும், சமுதாய உறவையும், மகிழ்ச்சியையும் தரமுடியவில்லை, அதிக இருதய வேதனையைத் தான் கொண்டு வருகின்றது என்றான்.
சிலர் தங்களுடைய ஆற்றலையெல்லாம் செலவிட்டு, அதிகமான செல்வத்தைச் சேர்த்து வைப்பதன் மூலம் தங்களின் வாழ்வை பாதுகாத்துக் கொள்ள நினைக்கின்றனர். ஆனால் அது ஒரு முட்டாள் தனமான செயல். “பணப்பிரியன் பணத்தினால் திருப்தியடைவதில்லை” என வேதாகமம் கூறுகின்றது (பிர.5:10). சிலர் தங்கள் எலும்புகள் தேயும் வரை வேலை செய்கின்றார்கள். அவர்கள் போராடி, தள்ளி, மற்றவர்களின் உடைமைகளோடு ஒப்பிட்டு, ஒரு பொருளாதார அந்தஸ்தை அடைய தங்களை வருத்திக் கொள்கின்றார்கள். அவர்கள் தாங்கள் விரும்பிய பொருளாதார நிலையை அடை ந்தும் அவர்களுக்கு திருப்தி ஏற்படுவதில்லை, அது அவர்களுக்குப் போதுமானதாக இல்லை. பிரசங்கி கூறுவதைப் போன்று, “இதுவும் மாயையே” (வச. 10).
உண்மை என்னவெனின், தேவனைத் தவிர வேறெந்த காரியத்தையும் நிறைவேற்றும்படி நாம் உழைப்பதெல்லாம் வீண். நம்முடைய திறமைகளையெல்லாம் பயன் படுத்தி, கடினமாக உழைத்து, இவ்வுலகிற்கு ஏதேனும் நல்லது செய்யும்படி வேதாகமம் நம்மை அறிவுறுத்துகின்றது. நாம் எவ்வளவு தான் பொருட்களைச் சேர்த்தாலும், அது ஒரு போதும் நம்முடைய ஆழ்ந்த ஏக்கங்களை நிறைவு செய்ய மாட்டாது. இயேசு ஒருவராலேயே உண்மையான பரிபூரண வாழ்வைத் தரமுடியும் (யோவா. 10:10) – அது அன்பின் உறவுகளினால் ஏற்படும் உண்மையான நிறைவு!
அடுத்து வருவது என்ன?
1968 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 3ஆம் நாள் இரவில், முனைவர். மார்டின் லுத்தர் கிங் கடைசி உரையை ஆற்றிய போது, “நான் மலையின் உச்சிக்கு சென்று விட்டேன்” என்றார். அதன் மூலம் அவர் தான் அதிக நாட்கள் வாழப்போவதில்லை என்பதைத் தெரிவித்தார். மேலும் அவர், “நாம் இன்னமும் கடினமான நாட்களைச் சந்திக்க நேரிடும், ஆயினும் அது என்னை எந்த வகையிலும் பாதிக்கப் போவதில்லை. ஏனெனில் நான் மலையின் உச்சியில் இருக்கிறேன், நான் மேலே வாக்களிக்கப்பட்ட தேசத்தைக் காண்கின்றேன். நான் உங்களோடு அங்கு செல்வதில்லை……ஆனால் நான் இந்த இரவில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றேன். நான் எதைக் குறித்தும் கவலைப் படவில்லை, எந்த மனிதனைக் குறித்தும் பயப்படவில்லை, என்னுடைய கண்கள் தேவனுடைய வருகையின் மகிமையைக் கண்டது” என்றார். மறு நாளில் அவர் கொலை செய்யப்பட்டார்.
அப்போஸ்தலனாகிய பவுலும் தன்னுடைய மரணத்திற்கு முன்பாக தன்னுடைய சீஷனான தீமோத்தேயுவிற்கு எழுதும் போது, “நான் இப்பொழுதே பானபலியாக வார்க்கப் பட்டுப் போகிறேன்; நான் தேகத்தை விட்டுப் பிரியும் காலம் வந்தது… இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது, நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார்” (2 தீமோ. 4:6,8) என்கின்றார். இப்பூமியில் அவருடைய வாழ்நாள் நிறைவடையப் போகின்றது என்பதை முனைவர்.கிங் அறிந்திருந்ததைப் போல, பவுலும் அறிந்திருந்தார். இருவருமே வாழ்வில் நம்பமுடியாத அளவு முக்கியத்துவத்தை உணர்ந்த போதும் தங்களுக்கு முன்பாக வைக்கப் பட்டிருந்த நித்திய வாழ்வைக் குறித்த தரிசனத்தைப் பெற்றிருந்தனர். இருவருமே அடுத்தபடியாக தங்களுக்கு நடக்க இருந்ததை வரவேற்றனர்.
இவர்களைப் போன்று நாமும் நம்முடைய கண்களை, “காணப்படுகிறவைகளையல்ல, காணப்படாதவைகளை நோக்கி” திருப்புவோமாக, “ஏனெனில், காணப்படுகிறவைகள் அநித்தியமானவைகள், காணப்படாதவைகளோ நித்தியமானவைகள்” (2 கொரி. 4:18).