Archives: ஏப்ரல் 2020

பரிதாபத்திலிருந்து துதிக்குள்

ஆதரவற்ற குழந்தைகளுக்கு உடைகள் வழங்கும் நிகழ்வில், குழந்தைகள், ஆர்வத்தோடும், நன்றியோடும், தங்களுக்குப் பிடித்தமான நிறமும், அளவுமுள்ள உடைகளைத் தேடியெடுத்தனர், இது, அவர்களுக்குத் தன்நம்பிக்கையைக் கொடுத்தது. இந்த முயற்சியை எடுத்த ஒருவர் கூறும் போது, புதிய உடைகளை அணிந்த குழந்தைகள், தாங்கள் சுற்றத்தாரால் ஏற்றுக் கொள்ளப் படுகின்றனர் என்பதை உணர்ந்தனர், அந்தக் குளிர்ந்த கால சூழலில், அது அவர்களுக்கு வெப்பத்தைக் கொடுத்தது.

அப்போஸ்தலனாகிய பவுலுக்கும் ஒரு அங்கி தேவைப்பட்டது. அவர், தீமோத்தேயுவுக்கு எழுதும் போது, “துரோவா பட்டணத்திலிருக்கிற கார்ப்பு என்பவன் வசத்தில் நான் வைத்துவந்த மேலங்கியையும்… எடுத்துக் கொண்டு வா” (2 தீமோ. 4:13) என்கின்றார். ரோமர்களின் சிறைச்சாலையில் அகப்பட்டு, குளிரினால் கஷ்டப்பட்ட பவுலுக்கு வெப்பமும், ஒரு துணையாளரும் தேவைப் பட்டது. அவர் ஒரு ரோம நியாயாதிபதி முன் நின்ற போது “நான் முதல்விசை உத்தரவு சொல்ல நிற்கையில் ஒருவனும் என்னோடே கூட இருக்கவில்லை, எல்லாரும் என்னைக் கைவிட்டார்கள்” என்பதாகப் புலம்புகின்றார் (வச. 16). இந்த ஊழியக்காரனின் உண்மையான, வேதனை தரும் வார்த்தைகள் நம் இருதயத்தை குத்துகின்றது.

ஆயினும், பவுல் தன்னுடைய வியத்தகு ஊழியத்தை முடித்தபின்னர், தன்னுடைய கடைசிக் கடிதத்தை முடிக்கும் போது, அவருடைய எண்ணங்கள் சுய பரிதாபத்திலிருந்து துதியாக மாறுகின்றதைக் காண்கின்றோம், “கர்த்தரோ எனக்குத் துணையாக நின்று, என்னாலே பிரசங்கம் நிறைவேறுகிறதற்காகவும், புறஜாதியாரெல்லாரும் கேட்கிறதற்காகவும், என்னைப் பலப் படுத்தினார்; சிங்கத்தின் வாயிலிருந்தும் நான் இரட்சிக்கப்பட்டேன்” (வச. 17) என்கின்ற வார்த்தைகள் நம்முடைய இருதயத்தைத் தேற்றுகின்றன.

நீயும் பிரச்சனைகளின் மத்தியில் இருக்கின்றாயா? வெப்பத்தைக் கொடுக்க சரியான உடையின்றி இருக்கின்றாயா? உன்னைத் தேற்றக் கூடிய நண்பர்களின்றி தவிக்கின்றாயா? தேவனை நோக்கிப் பார், அவர் உனக்கு வாழ்வளிக்கவும், உனக்குத் தேவையானவற்றைக் கொடுக்கவும், உன்னை மீட்டுக் கொள்ளவும் உண்மையுள்ளவராய் இருக்கின்றார். ஏன்? அவருடைய மகிமைக்காகவும் அவருடைய ராஜ்ஜியத்தில் அவருடைய சித்தத்தை நிறைவேற்றவும், நமக்குத் துணையாக இருக்கின்றார்.

சுகம் தரும் வார்த்தைகள்

சுகாதார பாதுகாப்பு வழங்குனர் தரும் உற்சாகமளிக்கும் வார்த்தைகள், நோயாளிகள் வேகமாக குணமடைய உதவியாயிருக்கின்றது என சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது. இது சம்பந்தமான ஆய்வு நடத்திய தன்னார்வ நபர்கள், தோல் அலர்ஜியினால் ஏற்படும் ஊரல் கொண்டிருந்த நோயாளிகளின் விளைவுகளைக் குறித்து கண்டறிந்தனர். தங்கள் மருத்துவரிடமிருந்து ஊக்கம் தரும் வார்த்தைகளைப் பெற்ற நோயாளிகள், மற்றவர்களைக் காட்டிலும் குறைவான அளவே ஊரலையும், வேதனையையும் பெற்றிருந்ததாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

நீதிமொழிகளை எழுதியவர், ஊக்கம் தரும் வார்த்தைகளின் முக்கியத்துவத்தை அறிந்திருந்தார். “இனிய சொற்கள் தேன் கூடு போல் ஆத்துமாவுக்கு மதுரமும், எலும்புகளுக்கு ஒளஷதமுமாகும்” (நீதி. 16:24) என எழுதுகின்றார். நேர் முகச்சிந்தனையுள்ள வார்த்தைகள் நமது உடல் நலத்திற்கு உதவுவது மட்டுமல்ல, ஞானமுள்ள வார்த்தைகளுக்கு நாம் செவிகொடுக்கும் போது, அது காரியங்களை வாய்க்கப்பண்ணும் (வச. 20) என்கின்றார். நம் வாழ்வின் சவால்களைச் சந்திக்க, அவை ஊக்கமளிப்பதோடு, நம் எதிர்காலத்தையும் சந்திக்க உதவியாயிருக்கும்.

ஏன், எப்படி ஞானமுள்ள வார்த்தைகள் நம் அனுதின வாழ்விற்கு பெலனையும், சுகத்தையும் கொண்டு வருகின்றது என்பதை நாம் முற்றிலும் அறியோம். ஆயினும், நம்முடைய பெற்றோர், பயிற்சியாளர்கள் மற்றும் நம்முடன் பணிபுரிபவர்கள் தரும் ஊக்கமும், வழிகாட்டலும் சோதனைகளைச் சகிக்க பெலன் தருவதோடு, நம்மையும் வெற்றிக்கு நேராக வழிநடத்தும். நாம் சோதனைகளைச் சந்திக்கும் போது, வேத வார்த்தைகள் நமக்கு ஊக்கம் அழிப்பதோடு, சோதனைகளைச் சகிக்கவும், நாம் நினைக்க முடியாத சூழல்களையும் கூட கடந்து செல்லவும் நமக்கு பெலனளிக்கின்றன. தேவனே, உம்முடைய ஞானத்தினால் எங்களைப் பெலப் படுத்தியருளும், எங்களுடைய இனிய வார்த்தையினால் சுகத்தையும், நம்பிக்கையையும், நாங்கள் சந்திக்கின்றவர்களுக்கு வழங்கவும் எங்களுக்கு உதவியருளும்.

கர்த்தரைத் தேடல்

மக்கள் தங்கள் கனவுகளை நிறைவேற்றும்படி, அர்ப்பணத்தோடு, தீவிரமாக செயல் படுவதைக் கவனிப்பது எனக்கு ஆர்வமான ஒன்று. எனக்குத் தெரிந்த ஒரு பெண் சமீபத்தில் ஓர் ஆண்டில் தனது முனைவர் படிப்பை முடித்தாள் – முழு அர்ப்பணத்தோடு உழைத்தாள். நண்பர் ஒருவர் ஒருவகை கார் வாங்க எண்ணினார், எனவே அவர் தன்னுடைய இலக்கை அடையும் மட்டும் கேக்குகளைச் செய்து விற்றார், மற்றொரு விற்பனை துறையில் பணிபுரியும் மனிதன், ஒவ்வொரு வாரமும் நூறு புதிய நபர்களைச் சந்திக்க வேண்டும் என்று தேடிக் கொண்டிருக்கின்றார்.

உலகக் காரியங்களை உண்மையாய் தேடுவது நல்லது தான், ஆனால் இதையும் விட முக்கியமாகத் தேட வேண்டியது ஒன்றுள்ளது என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.

விரக்தியோடு, வனாந்திரத்தில் போராடிக் கொண்டிருந்த தாவீது அரசன், “தேவனே, நீர் என்னுடைய தேவன்; அதிகாலமே உம்மைத் தேடுகிறேன்” (சங். 63:1) என்கின்றார். தாவீது தேவனை நோக்கி கதறும் போது, தேவன் அந்த சோர்வடைந்த அரசனின் அருகில் இருக்கின்றார், தேவன் மீது, தாவீதிற்கு இருந்த ஆழ்ந்த ஆன்ம தாகத்தை அவருடைய பிரசன்னத்தால் மட்டுமே திருப்தியாக்க முடியும். தேவனுடைய பரிசுத்த ஸ்தலத்தில் அவரைப் பார்க்க ஆசையாயிருக்கின்றார் (வச. 2). அவரின் அன்பிற்காக ஆவலாய் காத்திருக்கின்றார் (வ.3), அவரில் உண்மையான ஆன்ம திருப்தியைக் கண்டு கொண்ட தாவீது, அவரை நாள் தோறும் போற்றுகின்றார், ஒரு திருப்தியான உணவை உண்பதைக் காட்டிலும் உண்மையான திருப்தியை அவரில் கண்டு கொண்டார் (வச. 4-5). அவர் இராச்சாமங்களிலும் தேவனுடைய வல்லமையை தியானிக்கின்றார், அவர் தரும் பாதுகாப்பையும் உதவியையும் நினைத்துப் பார்க்கின்றார் (வச. 6-7).

 நாம் தேவனை உண்மையாய் தேடும் படி, பரிசுத்த ஆவியானவர் நம்மைத் தூண்டுகின்றார். நாம் அவரின் வல்லமையையும், அன்பையும் பற்றிக் கொண்டால், அவரது உறுதியான வலது கரம் நம்மைத் தாங்கிக் கொள்ளும். ஆவியானவர் நம்மை வழிநடத்த, எல்லா நன்மைக்கும் காரணராகிய நம் தேவனை நெருங்கிப் பற்றிக் கொள்வோம்.

துக்கம் தலைகீழாக மாறியது

ஓர் ஆங்கில திரைப் படம், ஓநாய்களின் உணர்வுகளையும், செயல் பாடுகளையும் குறித்து காட்டுகின்றது. அவை மகிழ்ச்சியாக இருக்கும் போது தங்களின் வாலை ஆட்டும், முரட்டுத் தனமாக விளையாடும். ஆனால் அதன் கூட்டத்தில் ஓர் ஓநாய் மரித்தால் அவை தங்கள் வாலைத் தொங்கவிட்டுக் கொண்டு, கவலை தோய் ந்த குரலில் ஊளையிடும்.

துக்கம் என்பது ஒரு வலிமையான உணர்வு. அதை நம்முடைய உறவினரின் மரணத்தின் போதோ அல்லது நம்பிக்கையை இழந்த வேளைகளிலோ நாம் அனைவருமே அநுபவித்திருப்போம். மகதலேனா மரியாள் இதை அநுபவித்தாள். அவள் கிறிஸ்துவின் ஆதரவாளர்களின் கூட்டத்தில் இருந்தாள், அவள் இயேசுவோடும், அவருடைய சீஷர்களோடும் பிரயாணம் பண்ணினாள் (லூக்.8:1-3). ஆனால் அவருடைய கொடிய சிலுவை மரணம், அவர்களை இயேசுவிடமிருந்து பிரித்து விட்டது. இப்பொழுது மரியாள் இயேசுவிற்கு கடைசியாகச் செய்யக் கூடியது, அவருடைய உடலுக்கு சுகந்தவர்க்கங்கள் பூசுவது ஒன்றுதான், ஆனால் ஓய்வு நாள் குறுக்கிட்டது, வாரத்தின் முதல் நாளில் சுகந்த வர்க்கங்களோடு கல்லறையினிடத்தில் வந்த மரியாள், உயிரற்ற, நொறுக்கப் பட்ட உடலைப் பார்ப்பதற்குப் பதிலாக, உயிருள்ள இரட்சகரைப் பார்த்தாள் என்பது எப்படியிருந்திருக்கும் என்பதை கற்பனை செய்து பார்! அவள் தனக்கு முன்பாக நின்ற மனிதனை முதலில் அடையாளம் கண்டு கொள்ள முடிய வில்லை, ஆனால் அவர் அவளுடைய பெயரைச் சொல்லி அழைத்த போது, அவர் இயேசு என்று அறிந்துகொண்டாள். அந்த நிமிடமே அவளுடைய துக்கம் சந்தோஷமாக மாறியது. இப்பொழுது மரியாள் பகிர்ந்துகொள்ளும்படி மகிழ்ச்சியான செய்தியை வைத்திருக்கின்றாள், “நான் கர்த்தரைக் கண்டேன்!” (யோவா. 20:18) என்பதே அச்செய்தி.

இருள் சூழ்ந்த இவ்வுலகினுள் இயேசு விடுதலையையும், வாழ்வையும் கொண்டு வந்தார், அவர் எதற்காக இவ்வுலகிற்கு வந்தாரோ, அதை உயிர்த்தெழுந்ததன் மூலம் நிறைவேற்றினார், இந்த உண்மை கொண்டாடத் தகுந்தது. மரியாளைப் போன்று, நாமும் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைக் கொண்டாடுவோம், அவர் உயிரோடிருக்கிறார் என்ற நற்செய்தியை அனைவரிடமும் பகிர்ந்து கொள்வோம்! அல்லேலூயா!

திரையிட்டு மறைக்கப்பட்டது

என்னுடைய ஆகாய விமானம் நிற்பதற்கு சற்று முன்பு, விமானப் பணியாளர் முதல் வகுப்பைப் பிரிக்கும் திரையை நீக்கினார், நான் விமானங்களின் வெவ்வேறு பிரிவுகளுக்கிடையே இருந்த மிகப் பெரிய வேறுபாட்டை ஆச்சரியத்துடன் பார்த்தேன். முதல் வகுப்பில் பிரயாணம் செய்யும் பிரயாணிகள், அதிக காப்பீட்டுத் தொகையோடு கூடிய வசதியான இருக்கைகளையும், சற்று அகலமான கால்களை வைத்துக் கொள்ளும் இடைவெளியையும், தனிப்பட்ட சேவை வசதியையும் அநுபவிக்கின்றனர். அந்த அதிகப்படியான வசதிகளிலிருந்து நான் பிரிக்கப் பட்டிருக்கின்றேன் என்பதை அந்த திரை காண்பித்தது. வெவ்வேறு கூட்ட மக்களிடையே பிரத்தியேக பாகுபாடு காண்பித்தலை சரித்திரத்தில் அநேக இடங்களில் காண்கின்றோம். எருசலேமின் தேவாலயத்திலும் அத்தகைய ஒரு பாகுபாட்டைக் காணமுடிகின்றது, அது ஒருவரின் கொடுக்கும் திறனைச் சார்ந்ததல்ல. யூதர்கள் அல்லாத ஜனங்கள், ஆலயத்தின் வெளிப் பிரகாரத்தில் தான் ஆராதிக்க அனுமதிக்கப் படுகின்றனர். இதற்கு அடுத்து வருவது பெண்களுக்கான பிரகாரம், அதில் மிக அருகில் இருப்பது ஆண்களுக்கான பகுதி. கடைசியாக மகா பரிசுத்த ஸ்தலம் என்றழைக்கப்படும் இடம், தேவன் தம்மை எப்பொழுதாகிலும் வெளிப்படுத்தும் இப்பகுதி ஒரு திரையினால் மறைக்கப்பட்டிருக்கும், இப்பகுதியினுள் அபிஷேகிக்கப் பட்ட ஆசாரியர்கள் மட்டும் ஆண்டிற்கு ஒரு முறை செல்வர் (எபி. 9:1-10).

ஆனால் இதில் ஆச்சரியம் என்னவெனில், இந்த பிரிவினைகள் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. தேவனைச் சேரும்படி தேடுபவர்களுக்கு இடையூறாக இருக்கும் எந்த தடையையும் இயேசு முற்றிலுமாக அகற்றினார் – நம்முடைய பாவங்களையும் நீக்கினார் (10:17). கிறிஸ்து மரித்தபோது தேவாலயத்தின் திரைச் சீலை இரண்டாகக் கிழிந்தது போல (மத். 27:50-51), சிலுவையில் அறையப்பட்ட அவருடைய சரீரத்தின் மூலம், தேவனுக்கும் நமக்கும் இடையேயுள்ள தடையை கிழித்தெரிந்தார். எந்த ஒரு தடையும் உயிரோடிருக்கும் நம்முடைய தேவனின் அன்பையும், மகிமையையும், விசுவாசிகள் அநுபவிக்கக் கூடாதபடிக்கு பிரிக்கவில்லை.