தேவன் நம்மைக் காக்கிறார்
எங்களுடைய சிறிய பேரன் கரமசைத்து விடை பெற்றான், பின்னர் அவன் திரும்பிப் பார்த்து ஒரு கேள்வி கேட்டான். “பாட்டியம்மா, நாங்கள் போகும் வரை நீங்கள் ஏன் முற்றத்தில் நின்று பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்? என்று கேட்டான். நான் அவனைப் பார்த்துச் சிரித்தேன், அவன் மிகவும் சிறியவனாகையால், அவனுடைய கேள்வியை மிகவும் ரசித்தேன். அவன் எங்கள் மீது கொண்டுள்ள அக்கறையை எண்ணிப் பார்த்து, அவனுக்கு ஒரு நல்ல பதிலைக் கொடுக்க விரும்பினேன், “அது ஒரு வகை மரியாதை” என்றேன். “நீ எனக்கு விருந்தாளியாக வந்திருக்கும் போது, நீ போகும் வரை உன்னை கவனித்துக் கொண்டிருப்பது, நான் உன் மீது கரிசனைக் கொண்டுள்ளேன் என்பதைக் காட்டுகின்றது” என்றேன். அவன் என்னுடைய பதிலை ஏற்றுக் கொண்ட போதும் சற்று கலக்க மடைந்தவனாய் காணப்பட்டான். எனவே நான் ஒரு எளிய உண்மையை அவனுக்கு எடுத்துக் கூறினேன். “நான் உன்னை நேசிப்பதால் உன்னைக் கவனிக்கிறேன், உங்களுடைய கார் சென்று கொண்டிருப்பதைப் பார்க்கும் போது, நீங்கள் பாதுகாப்பாக உங்கள் வீட்டிற்குச் செல்கிறீர்கள் என்பதை உறுதி செய்து கொள்வேன்” என்றேன். அவன் சிரித்தான், என்னை அன்போடு அணைத்துக்கொண்டான். கடைசியாக, அவன் புரிந்துகொண்டான்.
அவனுடைய குழந்தைத்தனமான புரிந்து கொள்ளல், நாம் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டிய ஒன்றை எனக்கு அறிவுறுத்தியது, நம்முடைய பரலோகத் தந்தை, அவருடைய விலையேறப் பெற்ற பிள்ளைகளாகிய நம் அனைவரையும் தொடர்ந்து பாதுகாத்து வருகின்றார், சங்கீதம் 121ல் கூறப்பட்டுள்ளபடி, “கர்த்தர் உன்னைக் காக்கிறவர்; கர்த்தர் உன் வலது பக்கத்திலே உனக்கு நிழலாயிருக்கிறார்” (வச. 5). தேவனை ஆராதிக்கும்படி எருசலேம் நோக்கிப் பயணம் செய்த இஸ்ரவேலர், ஆபத்தான பாதை வழியே பயணித்த போது, தேவன் அவர்களுக்குப் பாதுகாப்பாக இருந்தார், “பகலிலே வெயிலாகிலும், இரவிலே நிலவாகிலும் உன்னைச் சேதப்படுத்துவதில்லை. கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்; அவர் உன் ஆத்துமாவைக் காப்பார் (வச. 6-7). என்று உறுதியளித்தார். இதேப் போன்று, நம்முடைய வாழ்க்கையாகிய பயணத்தின் போதும், நாம் ஆவிக்குரிய அச்சுறுத்தல்களையும், தீமைகளையும் சந்திக்க நேரிடும், “கர்த்தர் உன் போக்கையும், உன் வரத்தையும்” காப்பார், ஏன்? அவர் நம்மீது கொண்டுள்ள அன்பு. எப்பொழுது? “இதுமுதற்கொண்டு என்றைக்கும் காப்பார்” (வ.8).
தூய ஆராதனை
ஜோசப் போதகராக இருந்த ஆலயம், அதன் நிகழ்ச்சிகளான மேடை நாடகங்கள், இசைநிகழ்ச்சிகள், கலைநிகழ்ச்சிகள் போன்றவற்றிற்குப் பேர் பெற்றது. அவை மிகவும் சிறப்பாகச் செய்யப் படும், ஆயினும் அந்த ஆலயத்தின் சுறுசுறுப்பான காரியங்கள் தொழில் ரீதியாக மாறிக்கொண்டிருப்பதாக அவர் கவலையுற்றார். சரியான காரணத்தோடுதான் சபை வளருகின்றதா? அல்லது அதன் செயல்பாடுகளுக்காக வளருகிறதா? ஜோசப் அதனை அறிய விரும்பினார். எனவே அவர் ஆலயத்தின் ஆராதனையைத் தவிர அனைத்து நிகழ்வுகளையும் ஓர் ஆண்டிற்கு நிறுத்தி வைத்தார், இதன் மூலம் சபையினர் தங்களை தேவனுடைய ஆலயமாக மாற்றி, தேவனை ஆராதிக்கச் செய்தார்.
ஜோசப்பின் தீர்மானம் சற்று அதிகமாகத் தோன்றினாலும், எருசலேம் தேவாலயத்தின் வெளிப்பிரகாரத்தினுள் இயேசு நுழைந்த போது, அவர் செய்ததைக் கவனித்தால் இது புரியும். அந்த பரிசுத்த ஸ்தலம் முழுவதும் எளிமையான ஜெபம் நிறைந்திருப்பதற்குப் பதிலாக, ஆராதனை என்ற பெயரில் குழப்பமான வியாபாரம் நடைபெற்றுக் கொண்டிருந்தது, “புறாக்களை இங்கே வாங்குங்கள்! லில்லி மலரின் வெண்மை நிறமுடைய புறாக்களே, தேவன் விரும்பும் நிறம்!” இயேசு அந்த வியாபாரிகளின் பலகைகளைக் கவிழ்த்துப் போட்டார், அங்கு வாங்க வந்தவர்களைத் தடுத்து விட்டார், அவர்கள் செய்த காரியங்களின் நிமித்தம் கோபமடைந்தவராய், “என்னுடைய வீடு சகல ஜனங்களுக்கும் ஜெப வீடு என்னப்படும்” (ஏசா. 56:7, எரே. 7), “நீங்களோ அதைக் கள்ளர் குகையாக்கினீர்கள்” (மாற். 11:17) என்றார். புறஜாதியாருக்கென்று கொடுக்கப்பட்ட முற்றம், பிறசமயத்தினர் தேவனை ஆராதிக்கும்படி கொடுக்கப்பட்ட இடம், அனுதின தேவைக்கான பொருட்களை வாங்கும் சந்தையாக, பணம் சம்பாதிக்கும் இடமாக மாற்றப்பட்டிருந்தது.
நாம் வியாபாரம் செய்வதிலும் அல்லது நம்மைச் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்வதிலும் தவறொன்றுமில்லை, ஆனால் அதற்கான இடம் தேவாலயமாக இருக்க வேண்டாம், நாம் தேவனுடைய ஆலயமாய் இருக்கிறோம். நம்முடைய பிரதாமான வேலை இயேசுவை ஆராதிப்பது தான். இயேசு செய்ததைப் போன்று நாமும் காசுக்காரரின் மேசைகளை கவிழ்க்கத் தேவையில்லை. ஆனால் இத்தகைய தீவிர திருத்தங்களைக் கொண்டு வரும்படி, தேவன் நம்மையும் அழைக்கிறார்.
கண்களால் காண்பதையும் விட அதிகம்
இயந்திரங்களை இயக்குபவர்கள், மிகவும் ஆபத்தான விபத்துக்களைச் சந்திக்க நேரிடும். தங்களின் விரல்கள் கனரக இயந்திரங்களின் சுழல் சக்கரங்களில் சிக்கிக் கொள்ளும் போது, விரல்களை இழக்க நேரிடும். அதிலும் பெரு விரலை இழந்தால், அது பெரிய துயரத்தைக் கொண்டுவரும். இவ்வாறு பெருவிரலை இழந்தவர்கள் தங்கள் எதிர்காலத்தை இழந்து விடவில்லை, மாறாக அவர்கள் தங்கள் வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்கின்றனர். பெருவிரலை பயன் படுத்தாமல் பல் துலக்குதல், சட்டையின் பொத்தான் மாட்டுதல், தலை வாருதல், ஷூ அணிதல், சாப்பிடல் போன்றவற்றை முயற்சித்துப் பார், அந்தப் பெருவிரல் எத்தனை முக்கித்துவம் வாய்ந்தது என்பது புரியும்.
அப்போஸ்தலனாகிய பவுல் சபையில் இத்தகைய ஒரு காட்சியைப் பற்றி விளக்குகின்றார். அதிகமாக கண்களுக்குத் தென்படாதவர்கள், அதிகம் பேசாதவர்கள், “நீங்கள் எங்களுக்குத் தேவையில்லை” என்பதாக, மற்றவர்கள் அவர்களைக் குறித்துக் கருதுவதாக உணர்வர் (1 கொரி. 12:21). இது பேசப்படாத, உணர்வு சார்ந்த கருத்து, சில வேளைகளில் அது சத்தமாகவும் தெரிவிக்கப் படலாம்.
தேவன் நம்மை, ஒருவர் மீது ஒருவர் சம கரிசனையும், சம மரியாதையும் கொடுக்கும்படி அழைக்கின்றார் (வச. 25). ஒவ்வொருவரும் கிறிஸ்துவின் சரீரத்தின் அங்கத்தினர்கள் (வ.27), இது நாம் பெற்றுள்ள வரங்களைச் சார்ந்து அல்ல, நம் அனைவருக்கும் மற்றவர் தேவை, நம்மில் சிலர் கண்களாயும், செவிகளாயும் உள்ளனர், அவர்கள் பேச வேண்டும், சிலர் பெருவிரலாயுள்ளனர். ஒவ்வொருவருக்கும் கிறிஸ்துவின் சரீரத்தில் ஒரு முக்கிய பங்கு உள்ளது. சில வேலைகளில் கண்களால் காண்பதையும் விட அதிக பங்கு உள்ளது.
இருவர் கூடியிருப்பது நல்லது
1997 ஆம் ஆண்டு, ஹவாயில் நடைபெற்ற அயர்ன் மன் டிரையத்லான் போட்டியில், (மிதிவண்டி ஓட்டுதல், நீந்துதல், ஓடுதல் ஆகிய மூன்றையும் உள்ளடக்கிய ஒரு விளையாட்டு) இரண்டு பெண்கள், தங்கள் பாதங்களால் நிற்கக் கூட பெலனற்றவர்களாய், தடுமாறியபடியே எல்லைக் கோட்டை நெருங்கினர். மிகவும் சோர்வடைந்த இந்த ஓட்ட வீரர்கள், தங்களின் நிலையற்ற கால்களோடு, விடாமுயற்சியோடு ஓடிக்கொண்டிருந்தபோது, சியான் வெல்ச் தடுமாறி வென்டி இன்கிரஹாம் மீது மோதிக் கொண்டாள், அவர்கள் இருவரும் கீழே விழுந்தனர். போராடி எழுந்திருந்த அவர்கள், இலக்கினை அடைய இன்னும் இருபது மீட்டர் தொலைவே இருந்த நிலையில், மீண்டும் முன்புறம் விழுந்தனர், வென்டி தவழ்ந்து செல்ல ஆரம்பித்த போது, பார்வையாளர்கள் கரகோஷம் எழுப்பினர். அவளுடைய போட்டியாளரும் அவளைப் பின் தொடர, பார்வையாளர்கள் சத்தமாக அவர்களை உற்சாகப்படுத்தினர். வென்டி நான்காவதாக எல்லைக் கோட்டைத் தாண்டி, அவளுடைய ஆதரவாளர்களின் கரங்களில் வீழ்ந்தாள், அப்பொழுது அவள் தன்னோடு தடுமாறிய சகோதரிக்கு கரத்தை நீட்டினாள், சியான் முன்னோக்கி வந்து தன்னுடைய தளர்ந்த கரங்களை நீட்டி, வென்டியின் கரங்களைப் பற்றியவாறே எல்லைக் கோட்டைத் தொட்டாள், அவள் ஐந்தாவதாக ஓட்டத்தை முடித்தபோது, கூட்டத்தினர் ஆரவாரத்தோடு தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்தனர்.
இந்த ஜோடி, 140 மைல் தூரத்தை கடந்து முடித்தக் காட்சி அநேகரைக் கவர்ந்தது. வலுவிழந்தபோதும் விடாமுயற்சியோடு இருவர் இணைந்து போராடிய அந்தக் காட்சி என் மனதை விட்டு அகலவேயில்லை, பிரசங்கி 4:9-11ல் கூறப்பட்டுள்ள வாழ்விற்கு புத்துணர்ச்சியூட்டும் உண்மையை இது உறுதிப் படுத்துகின்றது.
நம்முடைய வாழ்விலும் நமக்கு ஒரு உதவியாளர் தேவை என்பதை நாம் ஒத்துக் கொள்வதற்கு வெட்கப்படத் தேவையில்லை (வ.9). நம்முடைய தேவைகளை, எல்லாம் அறிந்த தேவனிடமிருந்து நாம் மறைத்துக் கொள்ள முடியாது. ஏதோ ஒரு வேளையில் நாம் அனைவருமே உடல் ரீதியாகவோ அல்லது மன ரீதியாகவோ கீழேவிழ நேரலாம். நாம் எழுந்திருக்க முயற்சிக்கும் போது, நாம் தனியாக இல்லை என்பது நமக்கு ஆறுதலைத் தரும். நம்முடைய அன்புத்தந்தை நமக்கு உதவிசெய்கின்றார், நாம் மற்றவர்களுக்கும் உதவும் படி நம்மை பெலப்படுத்துகின்றார், அவர்களும், தாங்களும் தனியாக இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவர்.