ஜோசப் போதகராக இருந்த ஆலயம், அதன் நிகழ்ச்சிகளான மேடை நாடகங்கள், இசைநிகழ்ச்சிகள், கலைநிகழ்ச்சிகள் போன்றவற்றிற்குப் பேர் பெற்றது. அவை மிகவும் சிறப்பாகச் செய்யப் படும், ஆயினும் அந்த ஆலயத்தின் சுறுசுறுப்பான காரியங்கள் தொழில் ரீதியாக மாறிக்கொண்டிருப்பதாக அவர் கவலையுற்றார். சரியான காரணத்தோடுதான் சபை வளருகின்றதா? அல்லது அதன் செயல்பாடுகளுக்காக வளருகிறதா? ஜோசப் அதனை அறிய விரும்பினார். எனவே அவர் ஆலயத்தின் ஆராதனையைத் தவிர அனைத்து நிகழ்வுகளையும் ஓர் ஆண்டிற்கு நிறுத்தி வைத்தார், இதன் மூலம் சபையினர் தங்களை தேவனுடைய ஆலயமாக மாற்றி, தேவனை ஆராதிக்கச் செய்தார்.

ஜோசப்பின் தீர்மானம் சற்று அதிகமாகத் தோன்றினாலும், எருசலேம் தேவாலயத்தின் வெளிப்பிரகாரத்தினுள் இயேசு நுழைந்த போது, அவர் செய்ததைக் கவனித்தால் இது புரியும். அந்த பரிசுத்த ஸ்தலம் முழுவதும் எளிமையான ஜெபம் நிறைந்திருப்பதற்குப் பதிலாக, ஆராதனை என்ற பெயரில் குழப்பமான வியாபாரம் நடைபெற்றுக் கொண்டிருந்தது,  “புறாக்களை இங்கே வாங்குங்கள்! லில்லி மலரின் வெண்மை நிறமுடைய புறாக்களே, தேவன் விரும்பும் நிறம்!” இயேசு அந்த வியாபாரிகளின் பலகைகளைக் கவிழ்த்துப் போட்டார், அங்கு வாங்க வந்தவர்களைத் தடுத்து விட்டார், அவர்கள் செய்த காரியங்களின் நிமித்தம் கோபமடைந்தவராய், “என்னுடைய வீடு சகல ஜனங்களுக்கும் ஜெப வீடு என்னப்படும்” (ஏசா. 56:7, எரே. 7), “நீங்களோ அதைக் கள்ளர் குகையாக்கினீர்கள்” (மாற். 11:17) என்றார். புறஜாதியாருக்கென்று கொடுக்கப்பட்ட முற்றம், பிறசமயத்தினர் தேவனை ஆராதிக்கும்படி கொடுக்கப்பட்ட இடம், அனுதின தேவைக்கான பொருட்களை வாங்கும் சந்தையாக, பணம் சம்பாதிக்கும் இடமாக மாற்றப்பட்டிருந்தது.

நாம் வியாபாரம் செய்வதிலும் அல்லது நம்மைச் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்வதிலும் தவறொன்றுமில்லை, ஆனால் அதற்கான இடம் தேவாலயமாக இருக்க வேண்டாம், நாம் தேவனுடைய ஆலயமாய் இருக்கிறோம். நம்முடைய பிரதாமான வேலை இயேசுவை ஆராதிப்பது தான். இயேசு செய்ததைப் போன்று நாமும் காசுக்காரரின் மேசைகளை கவிழ்க்கத் தேவையில்லை. ஆனால் இத்தகைய தீவிர திருத்தங்களைக் கொண்டு வரும்படி, தேவன் நம்மையும் அழைக்கிறார்.