எங்களுடைய மூத்த மகள் பதின்மூன்றாம் வயதை எட்டிய போது, என்னுடைய மனைவியும், நானும் சேர்ந்து அவளுடைய சிறுபிராயத்திலிருந்து அவளுடைய வாழ்க்கையைப் பற்றி நாங்கள் எழுதிவைத்திருந்த தொகுப்புகள் அடங்கிய புத்தகத்தை, அவளுக்குப் பரிசாகக் கொடுத்தோம். அதில் அவளுடைய விருப்புகள், வெறுப்புகள், தனித்திறன்கள், மறக்க முடியாத சில பேச்சுகள், நகைப்பைத்தரும் சில நிகழ்வுகள் ஆகியவற்றைக் குறித்து வைத்திருந்தோம். தேவன் அவளில் செயல்படும் விதத்தை நாங்கள் கண்டதையும் நீண்ட கடிதமாக எழுதிவைத்திருந்தோம். அவளுடைய பதின்மூன்றாம் பிறந்த நாளில், நாங்கள் அதனை அவளுக்குக் கொடுத்த போது, அது அவளை மெய் மறக்கச் செய்தது. அவள் தன்னுடைய தனித்துவத்தை அறிந்துகொள்ள, அது ஒரு வாய்ப்பாக அமைந்தது.

ஒரு சாதாரண பொருளான அப்பத்தை ஆசீர்வதித்ததின் மூலம், இயேசு அதன் தனித்துவத்தை வெளிப்படுத்துகின்றார். அவர் படைத்த மற்ற படைப்புகளோடு, தேவன் அப்பத்தை அவருடைய மகிமையை வெளிப்படுத்துவதற்காகப் படைத்தார். இதன் மூலம், இவ்வுலகத்தின் எதிர் காலத்தைப் பற்றி குறிப்பிடுகின்றார் என நான் நம்புகின்றேன். ஒரு நாள், அவருடைய படைப்புகள் அனைத்தும் அவருடைய மகிமையால் நிரப்பப்படும். எனவே, இயேசு அப்பத்தை எடுத்து ஆசீர்வதிக்கும் போது (மத்.26:26), படைப்புகளின் துவக்கத்தையும், அவற்றின் முடிவையும் குறித்து சுட்டிக் காட்டுகின்றார் (ரோம. 8:20-21).

உன்னுடைய வாழ்க்கைக் கதையின் துவக்கம் குழப்பம் நிறைந்ததாக இருக்கலாம், உனக்கும் ஒரு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்பதை நீ உணராமல் இருக்கலாம். ஆனால் மிகப் பெரிய கதை ஒன்று உள்ளது. தேவன் உன்னை விருப்பத்தோடு, ஒரு நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக உருவாக்கினார், அவர் உன்னில் மகிழ்ச்சியடைகின்றார் என்பதே அந்தக் கதை. உன்னை மீட்பதற்பதற்காக தேவன் உன்னைத் தேடி வந்தார் என்பதைக் கூறும் கதை (மத். 26:28); தேவன் தம்முடைய பரிசுத்த ஆவியை உனக்குத் தந்து, உன்னை புதியதாக்கி, உன்னுடைய அடையாளத்தை மீட்டுக் கொடுத்தார், அவர் உன்னை ஆசீர்வதிக்க விரும்புகின்றார் என்பதைக் கூறும் கதை அது.