பேரம் பேசி, மிகச் சரியான விலைக்கு, அந்த விளக்கு வாங்கப்பட்டது. அது என் வீட்டு அலுவலகத்திற்கு மிகவும் பொருத்தமாக இருக்கும், அதன் நிறம், அளவு மற்றும் விலை மிகப்பொருத்தமாக அமைந்தது. வீட்டிற்கு வந்ததும் அந்த விளக்கிற்கு மின் இணைப்பு கொடுத்தபோது ஒன்றும் நடக்கவில்லை, விளக்கும் எரியவில்லை!

“பிரச்சனை ஒன்றுமில்லை, நான் அதனை எளிதில் சரிபார்த்து விடுவேன்” என்று உறுதியளித்தார் என்னுடைய கணவர். அவர் அந்த விளக்கைப் பிரித்துப் பார்த்தார், அதன் பிரச்சனையை எளிதில் கண்டுகொண்டார். அங்கு மின் இணைப்புக் கம்பி, எதனோடும் பொருத்தப்படவில்லை, மின் ஆற்றல் மூலத்தோடு இணைக்கப் படாவிட்டால் அந்த நேர்த்தியான அழகிய விளக்கு பயனற்றதாகிவிடும். 

இது நம்முடைய வாழ்விற்கும் பொருத்தமானது. இயேசு தன் சீஷர்களிடம், “நானே திராட்சச் செடி, நீங்கள் கொடிகள், ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக் கூடாது” (யோவா. 15:5) என்று கூறுகின்றார்.

இயேசு இந்தப் போதனையை, திராட்சை அதிகம் விளையும் பகுதியில் கொடுத்தார், எனவே அவருடைய சீஷர்கள் எளிதில் புரிந்து கொண்டனர். திராட்சைச் செடிகள் கடினமான சூழல்களையும் தாங்கக் கூடியன, அதன் கொடிகள் அதிகம் வெட்டப் பட்டாலும் வளரக் கூடியன. ஆனால் முக்கிய செடியிலிருந்து அவை வெட்டப்பட்டு, தனிமையாக்கப்பட்டால் அவை பயனற்றவையாகிவிடும், எரிக்கப் படும் விறகாகிவிடும். அதேப் போலத்தான் நம்முடைய வாழ்வும் இருக்கும்.

நாம் இயேசுவில் நிலைத்திரு க்கும் போது, அவருடைய வார்த்தைகள் நமக்கு ஜீவனைத்தரும், நாமும் நமக்கு ஜீவன் தரும் மூலமாகிய கிறிஸ்துவோடு இணைக்கப் பட்டிருப்போம். “நீங்கள் மிகுந்த கனிகளைக் கொடுப்பதினால் என் பிதா மகிமைப் படுவார், எனக்கும் சீஷராயிருப்பீர்கள்” (வச. 8) என்றார். மிகுந்த கனிகளைக் கொடுக்க வேண்டுமென்றால் அனுதினமும் சத்தான உணவு கொடுக்கப்பட வேண்டும். தேவன் நமது ஆத்துமாவிற்குத் தேவையான உணவை வேதாகமத்தின் மூலமாகவும், அவருடைய அன்பினாலும் இலவசமாகக் கொடுக்கின்றார். எனவே, தேவனோடு எப்பொழுதும் இணக்கப் பட்டிருங்கள், அவருடைய சாறு உங்களுக்குள்ளே பாயட்டும்!