நான் கல்லூரியில் இருந்த போது, ஓர் ஆண்டு விறகு கட்டைகளை வெட்டி, சேர்த்து வைத்து, விற்று, விநியோகித்து வந்தேன். அது ஒரு கடினமான வேலை. எனவே 2 இராஜாக்கள் 6ஆம் அதிகாரத்தில் குறிப்பிட்டுள்ள துரதிஷ்டவசமான மரம் வெட்டியைக் குறித்துப் பரிதாபப் படுவேன்.

எலிசாவோடிருந்த தீர்க்கதரிசிகளின் எண்ணிக்கை அதிகரித்ததால், அவர்கள் தங்கும் இடம் அவர்களுக்குப் போதுமானதாக இல்லை. எனவே அவர்கள் யோர்தான் நதியண்டை சென்று மரம் வெட்டி வந்து, தங்களுக்கு ஒரு இடத்தை ஆயத்தப் படுத்த திட்டமிட்டனர். இதற்கு எலிசாவும் சம்மதித்து அவர்களோடு சென்றார். வேலை நன்றாகச் சென்று கொண்டிருந்த போது, ஒருவரின் கோடாரி தண்ணீரில் விழுந்தது (வச. 5).

எலிசா தன்னுடைய குச்சியால் தண்ணீருக்கு அடியில் தேடிப் பார்த்து, அதன் இருப்பிடத்தைக் கண்டு பிடித்து, அதனை வெளியே எடுத்திருக்கலாம் என ஒருவர் சொல்லக் கூடும். அப்படியும் செய்திருக்கலாம், ஆனால் அப்படியல்ல, அங்கு ஒரு அற்புதம் நடைபெற்றது. அந்தக் கோடாரியின் தலைப் பகுதியை தேவனுடைய கரம் அசைத்தது, அதனை நீரின் மேல் மிதக்கும்படி செய்தார், எனவே அந்த மனிதனால் அதனை மீண்டும் எடுத்துக் கொள்ள முடிந்தது (வச. 6-7).

இந்த அற்புதம் நாம் மனதில் வைத்துக் கொள்ளக் வேண்டிய ஓர் ஆழ்ந்த உண்மையை நமக்கு வெளிப்படுத்துகின்றது. நம் வாழ்வின் சிறிய காரியங்களில் கூட தேவன் கரிசனையுள்ளவராய் இருக்கிறார் – சிறிய காரியங்களான, கோடாரி, சாவி, மூக்குக் கண்ணாடி, அலைபேசி போன்றவை தொலைந்து போனால் கூட, அது நம்மைப் பதறச் செய்யும் என்பதை தேவன் புரிந்து கொள்கின்றார். அவர் எப்பொழுதும் தொலைந்தவற்றை மீட்டுத் தருபவர் அல்ல, மாறாக அவர் நம்முடைய கவலையைப் புரிந்து கொண்டு, நம்மைத் தேற்றுபவராக இருக்கின்றார்.

தேவன் நம்மை இரட்சித்தார் என்ற உறுதியைப் பெற்றுக் கொண்டதோடு, தேவன் நம்மைப் பாதுகாக்கிறார் என்ற உறுதியையும் பெற்றுக் கொள்ள வேண்டும். அந்த உறுதி இல்லையென்றால், நாம் இவ்வுலகில் தனிமையை உணர்வோம், அநேகக் கவலைகளுக்குள்ளாவோம். தேவன் நம்மைப் பாதுகாக்கிறார், நம்முடைய இழப்புகளில், அவை சிறியதாக இருப்பினும் அவற்றில் பங்கு பெறுகின்றார், நம்மீது அவர் அக்கறை கொண்டுள்ளார் என்பதைத் தெரிந்து கொள்வது மிகவும் நல்லது.