தங்களுடைய வாழ்க்கைத் துணையை இழந்த, சோகமான நிகழ்வுக்குச் சில ஆண்டுகளுக்குப் பின், ராபியும், சபரினாவும் ஒருவரையொருவர் நேசித்தனர். திருமணம் செய்துகொண்டதன் மூலம் இரு குடும்பத்தினரையும் ஒன்று சேர்த்தனர். அவர்கள் ஒரு புதிய வீட்டைக் கட்டி, அதற்கு ஹாவிலா என்று பெயரிட்டனர் (எபிரேய மொழியிலே வேதனையில் உழன்று இதனைப் பெற்றேன் என்று அர்த்தம்). அழகிய ஒன்றினை வேதனையின் வழியாக உருவாக்குவதை இது காட்டுகிறது. எங்களுடைய பழைய வாழ்வை மறப்பதற்காக இவ்வீட்டைக் கட்டவில்லை, மாறாக, “சாம்பலில் இருந்து வாழ்வைப் பெற்றோம் என்ற நம்பிக்கையை கொண்டாடவே” இதைக் கட்டினோம் என்றனர் அந்த தம்பதியினர். “இது சொந்தம் கொண்டாடும் ஒரு இடம், வாழ்க்கையைக் கொண்டாடும் ஒரு இடம், எதிர்காலத்தைக் குறித்த நம்பிக்கையை பற்றிக் கொள்ளும் ஒரு இடம்” என்று அவர்கள் கூறினர்.
இது இயேசு கிறிஸ்துவிற்குள் நம் வாழ்வை அழகாகச் சித்தரிக்கின்றது. அவர் நம்மை சாம்பலிலிருந்து தூக்கி எடுத்து, அவருக்குச் சொந்தமான இடமாக்குகின்றார். நாம் அவரை ஏற்றுக் கொள்ளும் போது, அவர் நம்முடைய இருதயங்களில் தங்குவார் (எபே. 3:17). இயேசு கிறிஸ்துவின் மூலம் நம்மை அவருடைய குடும்பத்தில் சேர்த்துக்கொள்கின்றார் (1:5-6), எனவே நாம் அவருக்குச் சொந்தமானவர்களாகிறோம். நாம் அனைவருமே வேதனைகளின் வழியாகக் கடந்து வந்துள்ளோம், தேவன் அவற்றை, நம் வாழ்வில் நன்மையாக மாற்றித் தருவார்.
ஒவ்வொரு நாளும் நாம் தேவனுடைய அன்பினை உணர்ந்து, அவர் நமக்குத் தந்துள்ளவற்றைக் கொண்டாடும் போது, தேவனை அறிந்துகொள்வதில் வளருவதற்கான சந்தர்ப்பங்களைப் பெறுகிறோம். அவர் நம்மோடு இருக்கும் போது தான் நான் வாழ்வின் முழுமையைப் பெற்றுக் கொள்கின்றோம், அவரின்றி நம் வாழ்வு பரிபூரணமடைய முடியாது (வச. 19). அவரோடு நாம் பெற்றுக் கொள்கின்ற இந்த உறவு என்றும் நிலைத்திருக்கும் உறவு என்று அவர் வாக்களிக்கின்றார். இயேசுவே நமக்குச் சொந்தமான இடம், நம் வாழ்வைக் கொண்டாட காரணமானவர் இயேசுவே, இப்பொழுதும், எப்பொழுதும் நம் நம்பிக்கையாக இருப்பவரும் இயேசுவே.
என்னென்ன வழிகளில் இயேசு உன் வாழ்வை மாற்றியுள்ளார்? நீ இயேசுவிற்குச் சொந்தம் என்பதன் அர்த்தம் என்ன?
இயேசுவே, நான் உமக்குச் சொந்தம் என்பதாலும், என் வாழ்வில் நம்பிக்கையை இப்பொழுதும், எப்பொழுதும் தந்தமைக்காக உமக்கு நன்றி கூறுகின்றேன்.