ஜெஃப் என்பவர் வாலிபர்களுக்கான போதகர். அவர் எந்தப் பட்டணத்தில் போதைக்கு அடிமையாயிருந்தாரோ, அதே பட்டணத்திலேயே, இப்பொழுது போதகராயிருக்கிறார். தேவன் அவருடைய இருதயத்தையும், சூழல்களையும் பிரமிக்கத்தக்க வகையில் மாற்றினார். “சிறுவர்கள், நான் செய்த அதே தவற்றைச் செய்யாதபடியும், நான் பட்ட வேதனைகளின் வழியாக அவர்களும் செல்லாதபடியும் அவர்களைத் தடுக்க விரும்புகிறேன்” என்றார் ஜெஃப். “தேவன், அவர்களுக்கு உதவி செய்வார்” என்றார். சில நாட்களுக்கு முன்பு தேவன் அவரைப் போதையின் அடிமைத்தனத்திலிருந்து விடுவித்தார், அவருடைய கடந்த காலம் மோசமானதாயிருந்தாலும், தேவன் அவருக்கு ஒரு முக்கியமான ஊழியத்தைக் கொடுத்திருக்கிறார்.

நாம் நம்பிக்கை யிழந்த சூழல்களிலிருந்தும், எதிர்பாராத நன்மையைக்கொண்டு வர தேவனுக்குத் தெரியும். யோசேப்பு அடிமையாக விற்கப்பட்டு, எகிப்துக்கு கொண்டு போகப்பட்டான், அங்கு தவறாக குற்றம் சாட்டப் பட்டு, சிறையில் அடைக்கப்பட்டான், அநேக ஆண்டுகளாக அவனை யாரும் தேடவும் இல்லை. ஆனால் தேவன் அவனை மீட்டார், அவனைப் பார்வோனுக்கு அடுத்தபடியான உயர் அதிகாரியாக வைத்தார். அதன்  மூலம், அநேகருடைய ஜீவனைக் காத்தான், தன்னை கைவிட்ட சகோதரர்களின் ஜீவனையும் காத்தான். யோசேப்பு எகிப்திலேயே திருமணம் செய்தான், குழந்தைகளைப் பெற்றான். அவனுடைய இரண்டாவது மகனுக்கு எப்பிராயீம் என்று பேரிட்டான். (எபிரேய பாஷையிலே இரட்டிப்பான பலன் என அர்த்தம்) ஏனெனில், “நான் சிறுமைப் பட்டிருந்த தேசத்தில் தேவன் என்னைப் பலுகப் பண்ணினார்” (ஆதி. 41:52) என்றான்.

ஜெஃப் மற்றும் யோசேப்பின் கதைகள் நடைபெற்ற காலங்களுக்கிடையே ஏறத்தாள மூவாயிரம் முதல் நான்காயிரம் ஆண்டுகள் இடைவெளியிருந்த போதும், தேவனுடைய உண்மை மாறவில்லை. நம் வாழ்வின் கடினமான இடங்களையும் விளை நிலங்களாக மாற்றி, அநேகருக்குப் பயன்படும்படி செய்ய, தேவனாலே கூடும். நமது இரட்சகரின் அன்பும், வல்லமையும் ஒரு நாளும் மாறாது. அவர் மீது நம்பிக்கையாயிருக்கிறவர்களுக்கு அவர் எப்பொழுதும் உண்மையுள்ளவராகவே இருக்கிறார்.