2018 ஆம் ஆண்டு, உலக கோப்பையின் போது, கொலம்பியாவின் முன்னோடி வீரரான ரடாமேல் ஃபால்கா, எழுபதாவது நிமிடத்தில் போலந்துக்கு எதிராக கோல் அடித்து, வெற்றியைப் பிடித்தார். சர்வ தேச விளையாட்டுப் போட்டிகளில், ஃபால்காவின் கோல், முப்பதாவது கோலாகும். சர்வ தேச  போட்டிகளில் பங்கு பெற்ற கொலம்பியா வீரர்களில், அதிக கோல் போட்டவர் என்ற பெயரையும் வாங்கித்தந்தது.

ஃபால்கா, கால் பந்து மைதானத்தில் இருக்கும் போது, தனது ஒவ்வொரு வெற்றியின் போதும் தன்னுடைய விசுவாசத்தை வெளிப்படுத்தினார். ஒவ்வொரு கோலுக்குப் பின்னரும் தன்னுடைய மேல் சட்டையை உயர்த்திக் காட்டுவார், உள்சட்டையில், “இயேசு உன்னோடு இருக்கும் போது, நீ தனியாயிருப்பதில்லை” என்ற வார்த்தை இருக்கும்.

ஃபால்காவின் வார்த்தைகள் நம்மையும் தேவன் தருகின்ற உறுதியளிக்கும் வாக்குத்தத்தத்திற்கு நேராக வழிநடத்துகிறது. “உலகத்தின் முடிவு பரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனே கூட இருக்கிறேன்” (மத். 28:20) என்றார். அவர் பரலோகத்திற்குச் செல்வதற்கு முன்பாக, தன்னுடைய சீஷர்களிடம், அவருடைய ஆவியின் மூலமாக, அவருடைய பிரசன்னம் எப்பொழுதும் அவர்களுடனே இருக்கும் என உறுதியளிக்கிறார்  (வ.20, யோவா.14:16-18). கிறிஸ்துவின் ஆவியானவர் அவர்களோடிருந்து, அவர்கள் இயேசு கிறிஸ்துவைக்குறித்த செய்தியை அருகிலும், தூரத்திலும் உள்ள பட்டணங்களுக்கு எடுத்துச் செல்லும் போது, அவர்களை வழிநடத்தி, பாதுகாத்து, பெலப்படுத்தினார். அவர்கள் அறியாத இடங்களுக்குச் செல்லும் போது, அவர்கள் தனிமையை உணர்ந்த போதும், கிறிஸ்துவின் வார்த்தைகள் அவர்களின் செவிகளில் எதிரொலித்தன, தேவன் அவர்களோடு இருக்கிறார் என்பதை நினைவு படுத்தியது.

நாம் எவ்விடத்திற்குச் சென்றாலும் சரி, வீட்டிற்கு அருகிலோ, வெகு தொலைவிற்கோ அல்லது இயேசுவை அறியாதவர்களின் மத்தியில் இருந்தாலும், இயேசுவைப் பின்பற்றுகிறவர்களாகிய நாம், இந்த வார்த்தையை உறுதியாகப் பற்றிக்கொள்வோம். நாம் தனிமையாயிருப்பது போல உணர்ந்தாலும், நாம் இயேசுவிடம் ஜெபிக்கும் போது, அவர் நம்மோடிருக்கிறார் என்ற ஆறுதலைப் பெற்றுக்கொள்வோம்.