எழுத்தாளரான மார்டின் லேய்ர்ட் வெளியில் நடை பயிற்சி செய்யும் போது, ஒரு மனிதன் நான்கு கெரி நீல டெரியர் வகை நாய்களைக் கொண்டு வருவதை அடிக்கடி பார்ப்பார். அவற்றில் மூன்று நாய்கள் திறந்த வெளியில் ஓடிவிடும். ஆனால் ஒன்று மட்டும் அதன் எஜமானனைச் சுற்றி சுற்றியே வருவதையும் கண்டார். ஒரு நாள் லேய்ர்ட் அதன் எஜமானனிடம், அந்த நாயின் வினோத நடத்தையின் காரணத்தைக் கேட்டார். அவர், அது பாதுகாப்பிற்காக பயிற்றுவிக்கப்பட்ட நாய், அது தன்னுடைய வாழ் நாளில் அநேக நாட்களை கூண்டிற்குள்ளேயே கழித்தது. இப்பொழுது டெரியர் கூண்டிற்குள் இருப்பதைப் போன்று எண்ணிக்கொண்டு தொடர்ந்து சுற்றி சுற்றியே வருகிறது என்றார்.
தேவன் நம்மை மீட்டுக்கொள்ளும் மட்டும் நாம் நம்பிக்கையற்றவர்களாய், பாவத்தில் சிக்கிக் கிடந்தோம் என வேதாகமம் குறிப்பிடுகிறது. சங்கீதக்காரன் எதிரிகளால் சூழப்பட்டப்போது, “மரணக் கண்ணிகள்” என்மேல் விழுந்தது, “மரணக் கட்டுகள் என்னைச் சுற்றிக்கொண்டது” என்கிறார் (சங். 18:4-5). எதிரிகளால் சூழப்பட்டவராக, நெருக்கப்பட்டவராக, உதவிக்கேட்டு கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகின்றார் (வச. 6). பூமியை அதிரச் செய்யும் வல்லமையோடு, “உயரத்திலிருந்து அவர் கைநீட்டி, என்னைப் பிடித்து, ஜலப்பிரவாகத்திலிருக்கிற என்னைத் தூக்கி விட்டார் (வச. 16).
இக்காரியங்களை தேவன் நமக்கும் செய்கிறார். அவர் சங்கிலிகளை உடைத்து நம்மை அடைத்து வைத்திருக்கும் கூண்டிலிருந்து விடுவிக்கிறார். அவர் விடுவித்து, சுமந்து, “விசாலமான இடத்திலே என்னைக்கொண்டு வந்து” (வச. 19) நிறுத்துகிறார். அப்படியானால், நாம் இன்னமும் சிறைக்குள் அடைபட்டுள்ளோம் என்ற எண்ணத்தோடு, சிறிய வட்டத்திற்குள்ளாகவே ஓடிக்கொண்டிருப்பது எத்தனை வருந்தக்கூடியது. அவருடைய வல்லமை நம்முடைய பயம், அவமானம், அடிமைத்தனத்தின் கட்டுகளை முறிக்கிறது. அந்த மரணக் கட்டுகளிலிருந்து தேவன் நம்மை விடுவித்தார், நாம் விடுதலையோடு ஓடுவோம்.
உன்னை அடைத்து வைத்திருந்த சிறைக் கூண்டுகள் எவை? இன்னமும் ஒரு பழைய கூண்டு உன்னை சிறைப்படுத்தி அடைத்து வைத்திருப்பதாக எண்ணுகின்றாயா?
தேவனே, அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்டீர்கள் என்று நீர் கூறும் வார்த்தையை நம்பும்படி எனக்கு உதவியருளும். விடுதலையோடு வாழ எனக்கு உதவியருளும். நான் விடுதலை பெற்றவனாக நீர் காட்டும் விசாலத்திலே வாழ விரும்புகிறேன்.