உடல், மனம், உணர்வு அத்தனையிலும் சோர்வடைந்தவனாய் என்னுடைய சாய்வு நாற்காலியில் சுருண்டு கிடந்தேன். தேவனுடைய வழிநடத்துதலைத் தொடர்ந்து, எங்களுடைய குடும்பத்தோடு கலிபோர்னியாவிலிருந்து விஸ்கான்சின்னுக்கு குடிபெயர்ந்தோம். நாங்கள் அங்கு வந்து சேர்ந்த போது, எங்களுடைய கார் பழுதடைந்ததால், இரண்டு மாதங்கள் கார் இல்லாமல் கஷ்டப்பட்டோம். இதனிடையே, என்னுடைய கணவனுக்கு முதுகில் நடந்த அறுவைசிகிச்சைக்குப் பின்னர், அவரால் சிறிதளவே நடமாட முடிந்தது. எனக்குள்ள வலியும் அதிகமானதால், எங்களுடைய சாமான்களை அடுக்குவதிலும் சிரமம் ஏற்பட்டது. எங்களுடைய பழைய வீட்டை விட்டு, இங்கு வந்த பின்பு அதிகமான பிரச்சனைகளை எதிர் நோக்கினோம். எங்களுடைய மூத்த நாயும் சுகவீனமானது. எங்களுடைய புதிய நாய் குட்டி, எங்களுக்கு அதிக மகிழ்ச்சியைக் கொடுத்த போதிலும், அதிக ரோமமுள்ள நாய்க் குட்டியை வளர்ப்பதிலும், எதிர்பார்த்ததைவிட அதிக வேலையினால் கஷ்டப்பட்டோம். எனக்குள் கசப்பு ஏற்பட்டது. என்னுடைய வாழ்வு கரடுமுரடான பாதை வழியே செல்லும்போது, எப்படி என்னுடைய நம்பிக்கை அசைக்கப்படாமல் இருக்க முடியும்?

நான் ஜெபிக்க அமர்ந்த போது, சங்கீதக்காரன், தன்னுடைய சூழ்நிலை எப்படியிருந்த போதிலும், தேவனைத் துதிப்பதை எனக்குக் காட்டினார். தாவீது பாதிக்கப்பட்ட போதெல்லாம், தன்னுடைய உணர்வுகளை தேவனிடம் ஊற்றுகிறார், அவருடைய சமுகத்தில் அடைக்கலம் தேடுகிறார் (சங். 16:1). தேவனே அவருடைய தேவைகளெல்லாவற்றையும் தருபவர், பாதுகாப்பவர் (வச. 5-6) என்கின்றார். அவருக்கு ஆலோசனைத் தந்த கர்த்தரைத் துதிக்கிறார் (வச. 7). “நான் அசைக்கப்படுவதில்லை” என்று உறுதியாகக் கூறுகின்றார், ஏனெனில் அவருடைய கண்கள் எப்பொழுதும் கர்த்தரையே நோக்கியிருக்கிறது (வச. 8). ஆகையால் அவருடைய இருதயம் பூரித்தது, தேவனுடைய சமுகத்தின் பரிபூரண ஆனந்தத்தைப் பெற்றுக்கொள்கிறார், அவருடைய மாம்சம் தேவனுடைய சமுகத்தில் நம்பிக்கையோடு தங்கியிருக்கும் (வச. 9-11).நாம் பெற்றுள்ள சமாதானம், தற்சமயம் எப்படி இருக்கிறோம் என்பதைப் பொறுத்ததல்ல என்பதால் மகிழ்ச்சியடைவோம், நேற்றும் இன்றும் என்றும் மாறாத தேவனுக்கு நாம் நன்றிகூறுவோம், அவருடைய பிரசன்னம் நம்முடைய உறுதியான நம்பிக்கைக்கு வழிவகுக்கின்றது.