அமெரிக்கா தேசத்தைச் சேர்ந்த, டேவிட் பிரவுண், ஊனமுற்றோருக்கான ஒலிம்பிக் போட்டியில், கண்தெரியாதோரில், உலகிலேயே மிகச் சிறந்த ஓட்ட வீரர் என்ற பட்டத்தைப் பெற்றார். அவர் தனக்கு கிடைத்த இந்தப் பாராட்டுதலை தேவனுக்கும், தனக்கு ஆரம்ப நாட்களிலேயே ஆலோசனையளித்த தனது தாயாருக்கும் (“எங்கேயாகிலும் உட்கார்ந்தேயிருக்கக் கூடாது”), ஓட்டத்தில் ஆழ்ந்த அநுபவமுடைய தன்னுடைய பயிற்சியாளரான ஜெரோம் ஏவெரிக்கும் செலுத்தினார். பிரவுணின் விரல்களில் கட்டப்பட்ட கயிறுகளின் மூலம் ஏவெரி, அவனை ஓட்டப் பந்தயங்களில் வெற்றிப் பெறுவதற்கு வழிகாட்டினார், அவர் தனது வார்த்தைகளாலும், தொடுதலாலும் ஏவெரியை வழிநடத்தினார்.
“அவருடைய ஆலோசனைகளுக்கு செவிசாய்த்ததாலேயே” என்று பிரவுண் கூறினான். 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில், பாதை வளைந்து செல்லும் போது, “அகன்ற வளைவை எடுக்க வேண்டும்” என்பார். “ஒவ்வொரு நாளும் பொழுதும், ஓட்டத்தைப் பற்றிய நுணுக்கங்களை ஆராய்வோம்”, மேலும், “நாங்கள் வார்த்தைகளால் மட்டுமல்ல, தொடுதல் மூலமாகவும் எங்களுக்குள்ளே கருத்துபரிமாற்றம் செய்துகொண்டோம்” என்றான்.
நம்முடைய வாழ்க்கையாகிய ஓட்டத்திலும், நமக்கொரு பரம வழிகாட்டி இருக்கின்றார். நம்முடைய உதவியாளராகிய பரிசுத்த ஆவியானவர், அவருடைய வழியில் நாம் நடக்கும் படி, நமக்கு வழிகாட்டியாக இருக்கின்றார். “உங்களை வஞ்சிக்கிறவர்களைக் குறித்து இவைகளை உங்களுக்கு எழுதியிருக்கிறேன்” என்று யோவான் சொல்கின்றார் (1 யோவா. 2:26). “நீங்கள் அவராலே பெற்ற அபிஷேகம் உங்களில் நிலைத்திருக்கிறது, ஒருவரும் உங்களுக்குப் போதிக்கவேண்டுவதில்லை; அந்த அபிஷேகம் சகலத்தையும் குறித்து உங்களுக்குப் போதிக்கிறது” (வச. 27) என்கிறார்.
பிதாவையும், அவருடைய குமாரனாகிய மேசியாவையும் மறுதலிக்கிற “அந்திக்கிறிஸ்து” வை (வச. 22), அவருடைய காலத்திலிருந்த விசுவாசிகள் சந்தித்ததாலேயே, யோவான் இந்த ஞானம் நிறைந்த வார்த்தைகளை அவர்களுக்கு எழுதுகின்றார். இவ்வாறு கிறிஸ்துவை மறுதலிப்பவர்களை நாம் இப்பொழுதும் சந்திக்கின்றோம். ஆனால் பரிசுத்த ஆவியானவர் நமக்கு வழிகாட்டியாக இருந்து, நாம் இயேசுவைப் பின்பற்றுவதற்கு உதவிபுரிகிறார். அவருடைய சத்தியத்தின் பாதையை விட்டு விலகாதபடி, நம்மை வழிநடத்தும் பரிசுத்த ஆவியானவரை நாம் உறுதியாகப் பற்றிக்கொள்வோம்.
பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்தலுக்கு ஏற்றார் போல் நடக்கின்றாயா? அவர் உனக்கு வழிகாட்டியாக இருந்து, உன்னை எச்சரித்து, வழிநடத்தும் போது, நீ அவருக்குச் செவிகொடுக்கின்றாயா?
அன்புள்ள தேவனே, நாங்கள் பொய்யைத் தள்ளி விட்டு, உம்முடைய சத்தியத்தை விட்டு விலகாமல் ஓட, உம்முடைய பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்தலுக்கு ஏற்றார் போல எங்களுடைய இருதயத்தைச் சாயப்பண்ணியருளும்.