சாய்ந்த கோபுரம்
இத்தாலி தேசத்தில், பைசா என்ற இடத்திலுள்ள, மிகவும் பிரசித்திப் பெற்ற சாய்ந்த கோபுரத்தைப் பற்றி கேள்விப் பட்டிருப்பாய், ஆனால் சான் பிரான்ஸிஸ்கோ பட்டணத்திலுள்ள சாய்ந்த கோபுரத்தைப் பற்றி கேள்விப் பட்டிருக்கின்றாயா? அது, மில்லேனியம் கோபுரம் என்றழைக்கப்படுகிறது. 2008 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. ஐம்பத்திஎட்டு தளங்களைக் கொண்ட, வானளாவிய இக்கட்டிடம், பெருமையோடு நிற்கின்றது, ஆனால் சற்று வளைந்து, சான் பிரான்ஸிஸ்கோ நகரின் மையப்பகுதியில் உள்ளது.
அதன் பிரச்சனை என்ன? அதனை வடிவமைத்த பொறியாளர்கள் தேவையான ஆழத்திற்கு அஸ்திபாரம் தோண்டவில்லை. எனவே, இப்பொழுது அதன் அஸ்திபாரத்தில் இன்னும் சில வேலை செய்யும்படி, அவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். அதற்காகும் செலவுத் தொகை, கட்டிடத்தைக் கட்டும் போது ஆன செலவையும் விட அதிகமாகும் என கணக்கிடப்பட்டுள்ளது. ஒரு பூமியதிர்ச்சி வந்தால், இக்கட்டிடம் தகர்ந்து போகாமல் காக்கப்பட, அதைச் சரிசெய்வது அவசியமென கருதுகின்றனர்.
இங்குள்ள, வேதனை தரும் பாடம் என்ன? அஸ்திபாரம் மிக முக்கியமானது ! உன்னுடைய அஸ்திபாரம் உறுதியாக இல்லையென்றால், பேராபத்து ஏற்படலாம். மலைப் பிரசங்கத்தின் முடிவில், இயேசுவும் இதைக் கற்பிக்கின்றார். மத்தேயு 7:24-27 ல், அவர் இரண்டு கட்டுமானர்களைப் பற்றி குறிப்பிடுகின்றார். ஒருவன் கற்பாறையின் மீது கட்டுகிறான், மற்றவன் மணலின் மீது கட்டுகின்றான். தவிர்க்கமுடியாத ஒரு புயலின் போது, கற்பாறையின் மீது கட்டப்பட்ட வீடு மட்டும் உறுதியாக நின்றது.
இது நமக்கு கற்றுத் தருவது என்ன? நம்முடைய வாழ்வு, கீழ்ப்படிதல் மற்றும் தேவன் மீதுள்ள நம்பிக்கையின் மேல் கட்டப்பட வேண்டுமென இயேசு திட்டவட்டமாகச் சொல்கின்றார் (வ.24). நாம் அவரைச் சார்ந்திருந்தால், அவருடைய வல்லமையும், அளவற்ற கிருபையும், நம் வாழ்வின் உறுதியான அஸ்திபாரமாக இருக்கும்.
நம் வாழ்வில் நாம் ஒருபோதும் புயலைச் சந்திப்பதில்லை என தேவன் நமக்கு வாக்களிக்க வில்லை, மாறாக, கற்பாறையான அவர் மீது நம் வாழ்வு கட்டப்படும் போது, எந்த புயல் வீசினாலும், அவர் மீதுள்ள விசுவாசமாகிய அஸ்திபாரம் அசைக்கப்படுவதில்லை.
இன்னும் நூறு ஆண்டுகளுக்குப் பின்
1975 ஆம் ஆண்டு, திரைக் கதை வசனம் எழுதும் ரோட் செர்லிங்க் என்பவர், “இன்னும் நூறு ஆண்டுகளுக்கு மக்கள் என்னை நினைவில் வைத்திருக்க வேண்டுமென விரும்புகிறேன்” என்றார். த ட்விலைட் சோன், (The Twilight Zone) என்ற அமெரிக்க டெலிவிஷன் தொடர் கதையை உருவாக்கிய செர்லிங்க், தன்னைக் குறித்து மக்கள், “அவர் ஒரு எழுத்தாளர்,” என நினைவுகூற வேண்டும் என்று விரும்பினார். செர்லிங்கைப் போன்று, நம்மில் அநேகர் விரும்புவதுண்டு, நம்முடைய வாழ்வும், அர்த்தமுள்ளதாகவும், நிரந்தரமாக ஒரு பாரம்பரியத்தை விட்டுச் செல்வதாகவும் இருக்க வேண்டுமென நினைக்கலாம்.
விரைவாகக் கடந்து செல்லும் இந்த வாழ்வில், ஓர் அர்த்தத்தோடு போராடிக் கொண்டிருந்த ஒரு மனிதனான யோபுவைக் குறித்து வேதாகமத்தில் காண்கிறோம். ஒரே கணத்தில், அவனுடைய உடமைகளையும், அவனுக்கு மிக அருமையான பிள்ளைகளையும் இழந்தான். அவனுடைய இந்த இழப்புக்கான காரணம், அவனுடைய பாவச்செயல் தான் என அவனுடைய நண்பர்களும் அவனைக் குற்றப்படுத்தினர். யோபு கதறுகின்றான், “ஆ, நான் இப்பொழுது சொல்லும் வார்த்தைகள் எழுதப்பட்டால் நலமாயிருக்கும்; அவைகள் ஒரு புஸ்தகத்தில் வரையப்பட்டு, அல்லது என்றைக்கும் நிலைக்க அவைகள் கருங்கல்லிலே உளிவெட்டாகவும், ஈய எழுத்தாகவும் பதிந்தால் நலமாயிருக்கும்,” (யோபு 19:23-24) என்றான்.
யோபுவின் வார்த்தைகள் “பாறையில் நிரந்தரமாகப் பதிக்கப்பட்டுவிட்டன,” நாம் இவற்றை இப்பொழுது வேதாகமத்தில் காண்கின்றோம், யோபு, தான் விட்டுச் செல்லும் பாரம்பரியத்தைக் காட்டிலும், அதிக அர்த்தம் அவன் வாழ்க்கைக்குத் தேவையாயிருந்தது. அவற்றை அவன் தேவனுடைய பண்புகளில் கண்டுகொண்டான். யோபு வெளிப்படுத்துகின்றான், “என் மீட்பர் உயிரோடிருக்கிறார், அவர், கடைசி நாளில் பூமியின் மேல் நிற்பார்,” (19:25) இந்த அறிவு அவனுக்குள் சரியான வாஞ்சையைக் கொடுத்தது. “அவரை நானே பார்ப்பேன்,” “இந்த வாஞ்சையால் என் உள்ளிந்திரியங்கள் எனக்குள் சோர்ந்துபோகிறது,” என்கின்றான். (வ.27)
முடிவில், யோபு தான் எதிர்பார்த்ததை கண்டுபிடிக்கவில்லை. அதையும் விட மேலானதைக் கண்டு பிடித்தான். அர்த்தமுள்ள யாவற்றிற்கும், நிலையான யாவற்றிற்கும் காரணமானவரைக் கண்டுபிடித்தான். (42:1-6)
ரகசிய விநியோகம்
அவளுடைய முன் கதவின் அருகில், ஒரு கண்ணாடி குவளையில் வைக்கப்பட்டிருந்த அழகிய சிவப்பு ரோஜாக்களும், வெண்மை நிற ரோஜாக்களும் கலாவை வரவேற்றன. கடந்த ஏழு மாதங்களாக, ஒரு பெயர் அறிவிக்காத இயேசுவின் விசுவாசி, அருகிலுள்ள பூக்கடையிலிருந்து கலாவுக்கு அழகிய மலர் கொத்துக்களை அனுப்பிக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு மாதமும், இந்த பரிசோடு, ஊக்கம் தரும் வேதவார்த்தைகளும் எழுதப்பட்டு, “அன்புடன், இயேசு” என்று கையெழுத்திடப்பட்டு வரும்.
கலா இந்த ரகசிய விநியோகத்தைக் குறித்த படங்களை முகநூலில் பகிர்ந்துகொண்டாள். ஒரு தனி மனிதனின் இரக்கத்தைக் கொண்டாடவும், தேவன் அவள் மீது கொண்டுள்ள அன்பினை, அவருடைய மக்களின் மூலமாக வெளிப்படுத்துவதை உணர்ந்து கொள்ளவும், இம்மலர்கள் ஒரு வாய்ப்பளித்தன. தீராத வியாதியோடுள்ள போராட்டத்தின் மத்தியிலும் தேவன் மீது நம்பிக்கையோடுள்ள அவளுக்கு, இந்த வண்ண மலர்களும், கைப்பட எழுதப்பட்ட செய்தியும், தேவன் அவள் மீது கொண்டுள்ள இரக்கத்தையும், அன்பையும் உறுதி செய்தன.
இம்மலர்களை அனுப்பியவர், தன்னை மறைத்துக் கொண்ட இச்செயல், பிறருக்கு கொடுக்கும் போது, எத்தகைய இருதயத்தை நாம் உருவாக்கிக் கொள்ள வேண்டுமென தேவன் நம்மிடம் எதிர்பார்கின்றார் என்பதைக் காட்டுகின்றது. “பிறர் காணும்படியாக” நீதியின் கிரியைகளைச் செய்யாதிருங்கள் (மத் 6:1), என தேவன் எச்சரிக்கின்றார். தேவன் நமக்குச் செய்துள்ள அநேக நன்மைகளுக்காக, நன்றி நிறைந்த உள்ளத்தோடு, அவரை ஆராதிக்கும் முறை தான், நாம் செய்யும் நற்கிரியைகளாகும். நம்முடைய தயாள குணத்தை மற்றவர்களுக்கு காண்பித்து, அவர்களின் நன்மதிப்பை பெற விரும்புகின்றவர்கள், எல்லா நன்மைக்கும் காரணராகிய இயேசுவின் பார்வையைப் பெற முடியாது.
நாம் நல்லெண்ணத்தோடு கொடுப்பதை தேவன் அறிவார், (வ.4). நாம் அன்போடு செய்யும் பெருந்தன்மையான கிரியைகளையே, தேவன் விரும்புகின்றார். அதுவே தேவனுக்கு மகிமையையும், கனத்தையும், புகழ்ச்சியையும் கொடுக்கும்.
மர்மமான உதவியாளர்கள்
தசைநார் தேய்வு என்ற நோயினால் லீலா வேதனைப் பட்டுக்கொண்டிருந்தாள். ஒரு நாள், அவள் இரயில் நிலையத்திலிருந்து வெளியேற முயற்சித்த போது, அதிகமான படிகளை ஏற வேண்டியதிருந்தது. அங்கு நகரும் மின் படிகளும் இல்லை. அவளுக்கு கண்ணீர் வர இருந்த வேளையில், திடீரென ஒரு மனிதன் அங்கு வந்து, அவளுடைய பைகளைச் சுமந்து கொண்டு, அவளும் மெதுவாக படியில் ஏறும் படி உதவினார். அவள் நன்றி கூறத் திரும்பிய போது, அவரைக் காணவில்லை.
மைக்கேல், ஒரு கூட்டத்திற்குச் செல்வதற்கு தாமதமாகிவிட்டது. ஓர் உறவின் மன முறிவினால் ஏற்பட்ட மனஅழுத்தம் ஒருபுறம், லண்டன் பட்டணத்தின் வாகன நெரிசல் மறுபுறம், இவற்றின் ஊடே கார் டயரில் காற்று இறங்கிவிட்டது. அவன் உதவியற்றவனாக, மழையில் நனைந்து கொண்டிருக்கும் போது, கூட்டத்திலிருந்து வ ந்த ஒரு மனிதன், காரின் பொருள் வைக்கும் பகுதியைத் திறந்து, காரை உயர்த்தி, டயரை மாற்றினான். மைக்கேல் நன்றி கூறத் திரும்பிய போது, அவரைக் காணவில்லை.
யார் இ ந்த மர்மமான உதவியாளர்கள்? இரக்கமுள்ள அந்நியர்கள்? அல்லது அதையும் விட மேலானவர்களா?
பிரகாசமான தோற்றமும், இறக்கைகளும் கொண்ட உருவம் தான், நாம் தேவதூதர்களுக்கு கொடுத்து வைத்திருக்கும் பிரபலமான உருவம். இதில் சிறிதளவே உண்மையுள்ளது. சில தேவதூதர்கள் இவ்வாறு தோன்றுகின்றனர் (ஏசா 6:2; மத் 28:3), மற்றும் சிலர் நிலத்தில் கால் பதித்து வருவதோடு, உணவு உண்ணவும் தயாராயிருக்கின்றனர். (ஆதி 18:1-5). அவர்களை நாம் சாதாரண மக்கள் என தவறாகவும் கருதக் கூடும். (நியா 13:16). நாம் அந்நியரை உபசரிப்பதன் மூலம், சில வேளைகளில் தேவதூதரையும் உபசரிப்பதுண்டு என்று எபிரெயரை எழுதியவர் கூறுகின்றார். (13:2)
லீலாவுக்கும், மைக்கேலுக்கும் உதவியவர்கள் தேவதூதர்கள் தானா, என்பதை நாம் அறியோம். ஆனால், வேதாகமத்தின் அடிப்படையில் நாம் பார்க்கும் போது, அப்படியும் இருக்கலாம். தேவதூதர்கள் இப்பொழுதும், தேவனுடைய பிள்ளைகளுக்கு உதவிக்கொண்டுதான் இருக்கிறார்கள் (எபி 1:14). அவர்கள் சாதாரணமாக நாம் தெருவில் பார்க்கும் மனிதர்களைப் போன்றும் வரலாம்.