1918 ஆம் ஆண்டு, முதலாம் உலகப் போர் முடிவுறும் நிலையில், புகைப்படநிபுணர் எரிக் என்ஸ்ட்ராம், தான் எடுத்துக்கொண்ட அனைத்துப் படங்களையும் கோர்வையில் அடுக்கிக் கொண்டிருந்தார். அந்நேரத்தில் ஒரு முழுமையை வெளிப்படுத்திய ஒரு படத்தை, அவர் அதனோடு சேர்க்க விரும்பினார், ஆனால், அநேகர் அப்படத்தில் வெறுமையை உணர்ந்தனர். அவர் மிகவும் நேசித்த அப்படத்தில், தாடியுடன் ஒரு முதியவர், தலைகவிழ்ந்தவராய் ஒரு மேசையின் அருகில் அமர்ந்திருக்கின்றார், அவருடைய கரங்களைக் குவித்து ஜெபித்துக் கொண்டிருக்கிறார். அ ந்த மேசையில் அவரின் எதிரே ஒரு புத்தகமும், மூக்கு கண்ணாடியும், ஒரு கோப்பை கஞ்சும், ஒரு துண்டு ரொட்டியும், ஒரு கத்தியும் உள்ளன. இதை விட ஒன்றும் கூடுதலாகவும் இல்லை, குறைவாகவும் இல்லை.

சிலர் இப்படம் பற்றாக்குறையைக் காட்டுகின்றது என்றனர். ஆனால், என்ஸ்ட்ராமின் கருத்து முற்றிலும் எதிராக இருந்தது. இங்கே வாழ்வு நிரம்பியுள்ளது, ஒருவர் நன்றியோடு வாழ்கின்றார், நாம் வாழும் சூழ்நிலைகளைத் தாண்டி, நீயும் நானும் அனுபவிக்க வேண்டிய நன்றியைக் காட்டுகின்றார், என்றார். யோவான் 10 ஆம் அதிகாரத்தில் இயேசு ஒரு நற்செய்தியைக் கூறுகின்றார். “வாழ்வு …….பரிபூரணப்படவும் வந்தேன்” (வ.10) என்கின்றார் .பரிபூரண வாழ்வு என்பதை, அநேகப் பொருட்களால் நிறைந்த வாழ்வு என்று கருதுவோமாயின், நாம் இந்த நற்செய்தியை இழிவு படுத்துகின்றோம். இயேசு குறிப்பிடும் பரிபூரணம் என்பது இவ்வுலகத்தின் செல்வம் அல்லது நிலபுலங்களால் வருவதில்லை. மாறாக, “ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற” (வ.11), நம்மைப் பாதுகாக்கிற, நம் அனுதினத் தேவைகளை பூர்த்திசெய்கிற, அந்த நல்மேய்ப்பனுக்கு நம் இருதயமும், மனதும், ஆன்மாவும்  நம் முழு பெலத்தோடும், நன்றியால் நிறைந்து  வழிய வேண்டும். இதுவே வாழ்வின் பரிபூரணம், தேவனோடுள்ள உறவில் மகிழ்ந்து வாழ்வதே பரிபூரணம். இது நம் ஒவ்வொருவருக்கும் கிடைக்கக்கூடியது.