வடக்குத் தாய்லாந்திலுள்ள ஓர் இளைஞர் கால்பந்து அணியினர், ஒரு குகையை ஆராயத் திட்டமிட்டனர். குகைக்குள் ஒரு மணி நேரம் செலவிட்ட பின், திரும்பினர். அவர்கள் நுழைவாயிலை அடைந்த போது, அங்கு வெள்ள நீர் நிரம்பியிருந்ததைக் கண்டனர். வெள்ள நீர் உயர, உயர அவர்களும் குகைக்குள்ளே இன்னும் வெகு தூரம் சென்றனர். நாட்கள் கடந்தன, கடைசியாக, அவர்கள் குகைக்குள்ளே இரண்டு மைல்களுக்கப்பால் (நான்கு கிலோமீட்டர்) சிக்கிக் கொண்டனர். இரண்டு வாரங்களுக்குப் பின், அவர்கள் வெற்றிகரமாக மீட்கப்பட்டனர். எப்படி அவர்கள் இந்த நம்பிக்கையற்ற இடத்தில் மாட்டிக்கொண்டனர் என்று அநேகர் ஆச்சரியப்பட்டனர். பதில்: ஒவ்வொரு அடியாக பின் தள்ளப்பட்டனர்.
தாவீது, தனக்கு உண்மையாயிருந்த போர்வீரனான உரியாவைக் கொன்ற போது, இஸ்ரவேலின் தீர்க்கதரிசியாகிய நாத்தான், அவனை எதிர்கொள்கின்றான். “கர்த்தர் தம்முடைய இருதயத்திற்கு ஏற்ற மனுஷனாகக்” (1 சாமு. 13:14) கண்ட ஒரு மனுஷன் எப்படி கொலைகாரனானான்? ஒவ்வொரு அடியாக, நடந்தது. தாவீது, ஒரே நாளில், ஒன்றுமில்லாமையிலிருந்து கொலைகாரனாகிவிடவில்லை. அவன் கொஞ்சம் கொஞ்சமாகத் தள்ளப்பட்டான். கொஞ்சக்காலமாக, அவனுடைய ஒவ்வொரு தவறான தீர்மானமும், அவனை ஒரு தவறிலிருந்து, மற்றொரு தவறுக்குள் தள்ளியது. அது இரண்டாம் முறை பார்த்ததில் ஆரம்பித்தது. பின்னர் அது காமப்பார்வையாக மாறியது. அவன் தன்னுடைய அரச அதிகாரத்தை பயன் படுத்தி, பத்சேபாளை அழைக்கின்றான், அவள் கர்ப்பம் தரித்ததை மறைப்பதற்காக, யுத்தத்தில் முன்னணியிலிருக்கும் அவளுடைய கணவனை அழைத்தனுப்புகின்றான். தன்னுடைய படைகளெல்லாம் யுத்தத்திலிருக்கும் போது, தான் மட்டும் தன்னுடைய மனைவியைச் சந்திக்க விரும்பவில்லை, தாவீது அவனைக் கொலை செய்யத் திட்டமிடுகிறான்.
நாம் கொலை குற்றத்திற்கு ஆளாவதும், குகைக்குள் அகப்பட்டுக்கொள்வதும் நம்முடைய சொந்த திட்டமில்லை. நாம் இயேசுவை நோக்கி செல்கின்றோமா அல்லது பிரச்சனையை நோக்கி செல்கின்றோமா என்பதே காரணம். பெரிய பிரச்சனைகள் ஒரே நாள் இரவில் உருவாவதில்லை. அவை நமக்குள் படிப் படியாக, ஒவ்வொரு அடியாக நுழைகின்றது.
பிரச்சனையை விட்டு விலகி, இயேசுவை நோக்கிச் செல்லும் படி, என்ன தீர்மானம் எடுக்கின்றாய்? இதனை உறுதிபடுத்த, என்ன செய்ய இருக்கின்றாய்?
இயேசுவே, நான் உம்மிடம் ஓடி வருகின்றேன்!