1956 ஆம் ஆண்டு, ஜிம் எலியெட்டும் மற்றும் நான்கு மிஷ்னரிகளும் வரானி என்ற பழங்குடியினரால் கொல்லப்பட்ட போது, அதற்குப் பின்பு என்ன நடந்தது என்பதை யாருமே எதிர் பார்க்கவில்லை. ஜிம்மின் மனைவி எலிசபெத், அவர்களின் இளம்வயது மகள், மற்றொரு மிஷ்னரியின் சகோதரி ஆகியோர் மனப்பூர்வமாக, தங்களுக்கு அருமையானவர்களைக் கொன்ற அதே மக்களோடு வசிக்கும் படி தேர்ந்து கொண்டனர். அவர்கள் அநேக வருடங்களை, வரானி சமுதாயத்தினரோடு செலவிட்டனர். அவர்களுடைய மொழியைக் கற்றுக் கொண்டனர், வேதகமத்தை அவர்களின் மொழியிலேயே எழுதினர். இந்த மூன்று பெண்களும் காட்டிய மன்னிப்பையும், இரக்கத்தையும் கண்ட வரானி இன மக்கள், தேவன் அவர்கள் மீது வைத்திருக்கும் அன்பைப் புரிந்து கொண்டனர், அநேகர் இயேசுவைத் தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டனர்.

ஒருவனுக்கும் தீமைக்குத் தீமை செய்யாதிருங்கள் (ரோமர் 12:17) என்ற வேத வார்த்தைக்கு எடுத்துக்காட்டாக, எலிசபெத்தும் அவளுடைய சிநேகிதியும் நம்பமுடியாத காரியத்தைச் செய்தனர். தேவன் தங்களுடைய வாழ்வில் கொடுத்துள்ள மாற்றத்தை, அவர்கள்  தங்கள் செயலில் காட்ட வேண்டுமென, அப்போஸ்தலனாகிய பவுல், ரோமாபுரியிலுள்ள சபை மக்களை ஊக்கப்படுத்துகின்றார். பவுல் மனதில் சிந்திப்பது என்ன? அவர்களுக்குள், இயற்கையாகத் தோன்றும் பழிவாங்கும் எண்ணத்தை விட்டு விட்டு, இதையெல்லாம் தாண்டிய காரியங்களைச் செய்யச் சொல்கின்றார், தங்களுடைய எதிரிகளின் தேவைகளைச் சந்திக்கச் சொல்கின்றார், அவர்களுக்கு உணவும் தண்ணீரும் கொடுக்கச் சொல்கின்றார்.

ஏன் இவற்றைச் செய்ய வேண்டும்? பவுல், பழைய ஏற்பாட்டிலுள்ள ஒரு பழமொழியைச் சுட்டிக் காட்டுகின்றார். “உன் சத்துரு பசியாயிருந்தால், அவனுக்குப் புசிக்க ஆகாரம்கொடு; அவன் தாகமாயிருந்தால், குடிக்கத் தண்ணீர் கொடு.”(ரோமர் 12:20. நீதி.25:21-22) மேலும், விசுவாசிகள் அவர்களிடம் காட்டும் அன்பின் மூலம், தங்கள் எதிரிகளையும் ஆதாயப்படுத்திக் கொள்ள முடியும், அவர்களின் இருதயத்தில் மனம் திரும்புதலின் நெருப்பைக் கொளுத்திவிடவும் முடியும் என்கின்றார், இந்த அப்போஸ்தலன்.