“புயல் காற்றை பின்தொடர்வது” என்பது கொல்கத்தா மற்றும் வேறு சில இடங்களில் உள்ள வானிலை ஆர்வலர்களின் பொழுது போக்கு நிகழ்வு. இவர்கள் புயலைப் பின்தொடர்ந்து சென்று அதன் செயலைக் குறித்துத் தெரிந்துகொள்கின்றனர், மின்னல் தாக்குவதைப் படமெடுக்கின்றனர், அவற்றின் பின் விளைவுகளையும் கண்டறிகின்றனர், இத்தகைய மோசமான வானிலையின் போது நம்மில் அநேகர், இத்தகைய வலிமையான, தீய விளைவுகளை ஏற்படுத்தும் புயலின் போது வெளியே வருவதற்கே அச்சப்படும் போது, வெவ்வேறு இடங்களில் உள்ள இத்தகைய ஆர்வலர்கள் ஒன்று சேர்ந்து, ஊடகங்களோடு இணைந்து, புயலைப் பின் தொடர்கின்றனர்.
என்னுடைய அநுபவத்தில், என் வாழ்வில், நான் புயல்களை பின் தொடர அவசியமில்லை, அவைகள் என்னை விரட்டிக்கொண்டே வருகின்றன. அந்த அநுபவம், சங்கீதம் 107 ல் அப்படியே கூறப்பட்டுள்ளது. அது, புயலில் சிக்கிக் கொண்ட கடல் பிரயாணிகளைப் பற்றி விளக்குகின்றது. அவர்கள், தவறானவற்றைத் தேர்ந்து கொண்டதால் வந்த பின் விளைவுகளால் துரத்தப்படுகின்றனர். சங்கீதக்காரன் சொல்கின்றார், “தங்கள் ஆபத்திலே அவர்கள் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகிறார்கள், அவர்கள் இக்கட்டுகளுக்கு அவர்களை நீங்கலாக்கி விடுவிக்கிறார். கொந்தளிப்பை அமர்த்துகிறார், அதின் அலைகள் அடங்குகின்றது. அமைதலுண்டானதினிமித்தம் அவர்கள் சந்தோஷப்படுகிறார்கள்” (சங். 107:28-30).
நம் வாழ்வில் ஏற்படும் புயல்கள், நம்மால் உருவாக்கப்பட்டவையோ அல்லது இந்த உடைந்து போன உலகத்தில் வாழ்வதால் ஏற்பட்டதாகவோ இருக்கலாம். ஆனால் நம்முடைய தந்தை, இவை எல்லாவற்றையும் விடப் பெரியவர். புயல்கள் நம்மைத் துரத்தும் போது, அவர் ஒருவராலேயே, அவற்றை அமைதிப் படுத்த முடியும், அல்லது நமக்குள்ளேயுள்ள புயலை அடக்க முடியும்.
நீ கஷ்டங்களைச் சந்திக்கும் போது, யாரிடம் உதவிக்காகத் திரும்புகின்றாய்? உன்னுடைய வாழ்வின் புயலைக்காட்டிலும் பெரியவரான நம் பரலோகத் தந்தையை நம்பி, இன்று அவரிடம் செல்லாமா?
அப்பா, என்னுடைய போராட்டங்களின் போது, நீர் என்னோடு இருப்பதாலும், என் வாழ்வின் எல்லையெங்குமுள்ள புயலைக் காட்டிலும், நீர் வல்லமையுடையவராயிருப்பதாலும் உமக்கு நன்றி கூறுகின்றேன்.