“கல் சூப்”(Stone Soup) என்பது அநேக வெளியீடுகளில் வந்துள்ள ஒரு பழங்காலக் கதை. இக்கதையில், ஒரு கிராமத்திற்கு, ஒரு மனிதன் மிகுந்த பசியோடு வருகின்றான். ஆனால், அங்கு யாருமே அவனுக்கு ஒரு பிடி உணவளிக்க முன்வரவில்லை. அவன் நெருப்பை மூட்டி, அதில் ஒரு பானைத் தண்ணீரை வைத்து, அதில் ஒரு கல்லைப் போடுகின்றான். அவன், தன் “சூப்பை” கிண்ட ஆரம்பித்தவுடன், ஆர்வத்தோடு கவனித்துக்கொண்டிருந்த  அந்த கிராமத்தினரில் ஒருவர், இரண்டு உருளைக்கிழங்குகளை அதனோடு சேர்க்கும் படி கொண்டுவந்தார், மற்றொருவர் சில கேரட்டுகள், வேறொருவர் சில வெங்காயங்கள் இன்னும் ஒருவர் ஒரு கை பார்லி, ஒரு விவசாயி கொஞ்சம் பால் என அதனோடு சேர்த்தனர். கடைசியாக “கல் சூப்” மிகவும் ருசியான சூப்பானது.

இந்த கதை, பகிர்ந்து கொள்வதின் மதிப்பை விளக்குகின்றது. அத்தோடு, நம்மிடம் இருப்பது சாதாரணப் பொருளாக இருந்தாலும், அதையும் கொண்டுவரும்படி சொல்லுகின்றது. யோவான் 6:1-14 வரையுள்ள வார்த்தைகளில், ஒரு பெரிய கூட்ட மக்களிடையே, ஒரு சிறு பையன் மட்டும் தான், தனக்கு உணவு கொண்டு வ ந்திருக்கின்றான். அவனுடைய கொஞ்ச உணவான ஐந்து அப்பமும், இரண்டு மீன்களும், கிறிஸ்துவின் சீடர்களுக்கு எந்த வகையிலும் உதவுவதாக இல்லை. ஆனால், அதை இயேசுவிடம் அர்ப்பணித்த போது, அவர் அதைப் பெருகச் செய்து, ஆயிரக்கணக்கான ஜனங்களைப் போஷித்தார்!

ஒருமுறை, ஒருவர், “நீங்கள் ஐந்தாயிரம் மக்களுக்கு உணவளித்திருக்கத் தேவையில்லை, ஒவ்வொருவரும் தங்களுடைய உணவைக் கொண்டு வந்திருக்க வேண்டும்” என்றார். இயேசு ஒருவரின் உணவை எடுத்து, ஆசிர்வதித்து, நாம் நினைக்கவும், எதிர்பார்க்கவும் முடியாத அளவிற்குப் பெருகச் செய்தது போல (வ.11), நம்முடைய  சிறிய முயற்சியையும், திறமைகளையும், சேவையையும்  அவர் ஏற்றுக் கொள்வார். அவர் விரும்புவதெல்லாம், நம்மிடமுள்ளதை, மனப்பூர்வமாக அவரிடம் கொண்டு வர வேண்டும் என்பதையே.