நாம் வசிக்கும் கிரகம், சூரியனிலிருந்து துல்லியமாக, மிகச்சரியான தொலைவில் இருப்பதால், அதன் வெப்பத்தின் சரியான பலனைப் பெற முடிகிறது. இன்னும் சற்று நெருங்கினால், புதனில் நடப்பது போன்று, பூமியிலுள்ள தண்ணீர் யாவையும் ஆவியாகி விடும். இன்னும் சற்று தள்ளிப் போனால், செவ்வாய் கிரகத்தில் நடப்பது போன்று, அனைத்தும் உறைந்து போகும். சரியான அளவு ஈர்ப்பு விசையை உருவாக்கும் படி, புவியின் உருவ அளவு அமைந்துள்ளது. ஈர்ப்பு விசை குறைவாக இருந்தால், நிலவில் உள்ளது போல எந்த உயிரினமும் வாழமுடியாமல் போய் விடும், அதிக ஈர்ப்பு விசை இருந்தால், நச்சு வாயுக்கள் எல்லாம் ஈர்க்கப்பட்டு, வியாழனில் உள்ளது போல் உயிரினங்கள் சுவாசிக்க முடியாத வளிமண்டலமாகி விடும்.
இயற்பியல், வேதியல், மற்றும் உயிரியலின் நுணுக்கமான பிணைப்புகளால் அமைந்துள்ள இவ்வுலகம், அதிநவீன படைப்பாளரின் கைத்திறனைக் காட்டுகின்றது. நாம் புரிந்து கொள்ள முடியாத காரியங்களைக் குறித்து, தேவன் யோபிடம் பேசும் போது, நாம் இந்த சிக்கலான கைவினையின் ஒரு சிறிய பகுதியைப் பற்றி தெரிந்து கொள்ள முடிகிறது. “நான் பூமியை அஸ்திபாரப்படுத்துகிற போது, நீ எங்கேயிரு ந்தாய்?…..அதற்கு அளவு குறித்தவர் யார்? அதின்மேல் நூல் போட்டவர் யார்? இதை நீ அறிந்திருந்தால் சொல்லு. அதின் ஆதாரங்கள் எதின்மேல் போடப்பட்டது? அதின் கோடிக்கல்லை வைத்தவர் யார்?” (யோபு 38:4-6) என தேவன் யோபுவிடம் கேட்டார்.
பரந்து விரிந்துள்ள படைப்புகளும், புவியின் மகா சமுத்திரங்களும், “கர்ப்பத்திலிருந்து உதிக்கிறது போல் சமுத்திரம் புரண்டு வந்தபோது, அதைக் கதவுகளால் அடைத்தவரும்,…….இம்மட்டும் வா, மிஞ்சி வராதே.” (வ.8-11) என்றவருக்கு முன்பாக வணங்கி நிற்கிறதைக் காணும் போது, நம்மை வியக்கச் செய்கிறது. நம்மை வியக்கச் செய்யும், விடியற்காலத்து நட்சத்திரங்களின் பாடல்களோடு, நாமும் பாடுவோம், தேவ புத்திரரோடு சேர்ந்து நாமும் மகிழ்ச்சியோடு ஆர்ப்பரிப்போம். (வ.7), ஏனெனில் இந்த அகன்ற உலகத்தை தேவன் நமக்காகவே உருவாக்கியுள்ளார் என்பதைத் தெரிந்து கொண்டு, அவர் மீது நம்பிக்கையோடிருப்போம்.
நம்மை அதிசயிக்கச் செய்யும், தேவனுடைய படைப்புகளை நாம் பார்க்கும் போது, எப்படி அவரை துதிக்கத் தோன்றுகிறது? படைப்புகளின் வடிவமைப்பு, அதை உருவாக்கியவரைப் பற்றி என்ன சொல்லுகின்றது?
படைப்பின் தேவனே, இந்த பரந்து விரிந்த உலகை, எங்களுக்காக வடிவமைத்தமைக்காக, உமக்கு நன்றி கூறுகின்றேன்.