Archives: டிசம்பர் 2019

நிகழ் காலத்தில் தேவனோடு நட

சி.எஸ் லூயிஸ் எழுதிய “மியர் கிறிஸ்டியானிட்டி” என்ற புத்தகத்தில், “நம் தேவனுக்கு நேரம் பொருத்தமானதல்ல என்பதை மிக உறுதியாகக் கூறமுடியும். அவருடைய வாழ்வில், ஒரு கணத்திற்குப் பின் மற்றொன்று என்ற கணிப்பேயில்லை. இவ்வுலகை உருவாக்கினது முதற்கொண்டு, எல்லா காலமும் அவருக்கு நிகழ்காலம் தான்.” என்று எழுதுகின்றார். ஆனாலும், காத்திருக்கும் காலம், நமக்கு நீண்டதாகத் தோன்றும். ஆனால், காலத்தை உருவாக்கிய தேவனை, நாம் நம்பும்படி கற்றுக்கொள்ளும் போது, நம்முடைய நிலையற்ற வாழ்வு அவருடைய கரத்தில் பாதுகாப்பாயிருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்வோம். 

சங்கீதம் 102ல், சங்கீதக்காரன் புலம்பும் போது, “என் நாட்கள் சாய்ந்து போகிற நிழலைப் போலிருக்கிறது; புல்லைப் போல் உலர்ந்து போகிறேன். கர்த்தராகிய நீரோ என்றென்றைக்கும் இருக்கிறீர்” என்கின்றார் (வச. 11-12). இச்சங்கீதத்தின் ஆசிரியர், தன்னுடைய துன்பங்களினால் சோர்வடைந்த போது, “தேவரீர் என்றென்றைக்கும் அரசாளுகிறீர்”  என்று வெளிப்படுத்துகின்றார். தேவனுடைய வல்லமையையும், மாறாத இரக்கத்தையும் நாம் அளவிட முடியாது என்கிறார் (வச. 13-18) திக்கற்ற வேளையில் (வச. 19-24), சங்கீதக்காரன், தன்னுடைய கண்களை, எல்லாவற்றையும் படைத்தவராகிய தேவனிடம் திருப்புகின்றார், (வச. 25) படைப்புகள் யாவும் அழிந்து போம், ஆனால் நம் தேவனோ நிலைத்திருப்பார். (வச. 26-27).

காலம் ஓடாதது போலும் அல்லது நீண்டும் காணப்பட்டால், நாம், தேவன் செயல் படவில்லையென தேவனைக் குறை கூற நேரலாம். நாம் பொறுமையிழக்கலாம், அல்லது ஒரேயிடத்தில் இருந்து சலிப்படையலாம். நம் நடைபாதையிலுள்ள ஒவ்வொரு கல்லைக் கூட அவர், நமக்காகத் திட்டமிட்டுள்ளார். நம்முடைய தேவைகளை நாமே பார்த்துக் கொள்ளும் படி, அவர் நம்மை விட்டு விடுபவரல்ல. அவர் மீதுள்ள நம்பிக்கையோடு நாம் வாழும் போது, நிகழ் காலத்தில் நாம் தேவனோடு நடப்பவர்களாவோம்.

ஆணிகளிடமிருந்தும் பாதுகாக்கும் தேவன்

என்னுடைய காரில் ஏறச் சென்ற போது, டயரில் ஏதோவொன்று மின்னியது என் கண்களில் பட்டது, அது ஓர் ஆணி, என்னுடைய காரின் பின் பக்க டயரின் பக்கவாட்டில் பதிந்திருந்தது. அதிலிருந்து காற்று வெளியேறும் சத்தம் கேட்கிறதாவென கவனித்தேன், நல்லவேளை, அது, துளையை நன்கு அடைத்துக் கொண்டிருந்தது.

நான் ஒரு டயர் கடைக்கு ஓட்டிச் சென்ற போது, எவ்வளவு காலமாக இந்த ஆணி அவ்விடத்தில் உள்ளது?சில நாட்களா? வாரங்களா? எனக்கே தெரியாத ஓர் அச்சுறுத்தலிலிருந்து, எவ்வளவு நாட்களாக நான் பாதுகாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறேன்? என ஆச்சரியப்பட்டேன்.

நம்மைச் சுற்றிலும் எல்லாம் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது என்று நாம் சில வேளைகளில் நம்பக்கூடும். ஆனால் இந்த ஆணி, அப்படியல்ல என்பதைக் காட்டுகிறது.

நம்முடைய வாழ்க்கை நிலையற்றதாகவும், கட்டுப்படுத்த முடியாததாகவும் காணப்படும் போது, நம்பிக்கைக்குரிய ஒரு தேவன் இருக்கிறார், அவர் மீது நம்பிக்கை வை. சங்கீதம் 18ல், தாவீது, தன்னைப் பாதுகாக்கின்ற தேவனைப் போற்றுகிறார்.(வ.35-36) “என்னை பலத்தால் இடைக்கட்டி,… என் கால்கள் வழுவாதபடிக்கு, நான் நடக்கிற வழியை அகலமாக்கினீர்” (வச. 32,36) என்கின்றார். இந்த சங்கீதத்தில், தாவீது தன்னை தாங்குகின்ற தேவனுடைய பிரசன்னத்தைக் கொண்டாடுகின்றார் (வச. 35).

நான் ,தாவீதைப் போன்று யுத்தத்திற்குச் செல்லவில்லை, எந்தவொரு தேவையற்ற பிரச்சனையிலும் தலையிடுவதில்லை, ஆகிலும் என் வாழ்வு, அடிக்கடி குழப்பம் நிறைந்ததாகவே உள்ளது. 

நம் வாழ்வில் வரும் அத்தனை பிரச்சனைகளிலிருந்தும் நம்மை விலக்கிக் காப்பேன் என்று தேவன் கூறவில்லை, ஆனால் நான் எங்கேயிருக்கிறேன் என்பதை அவர் அறிவார், நான் எங்கே போகிறேன் என்பதையும் நான் எவற்றைச் சந்திப்பேன் என்பதையும் அவர் அறிவார். எல்லாவற்றையும் ஆளுகிறவர் அவர், என் வாழ்வின் ஆணிகளையும் அவர் அறிவார் என்ற நம்பிக்கையில் அமர்ந்திருப்பேன்.

உன்னுடைய மதிப்பென்ன?

வல்லமையான எழுத்தாளரான கெய்ட்லின்,  தன்னைத் தாக்கியவர்களை எதிர்த்துப் போராடிய போது ஏற்பட்ட மன அழுத்தத்தை விவரிக்கின்றார். அவளுடைய உடல் சார்ந்த போராட்டத்தைக் காட்டிலும், மனதின் போராட்டம் மிகவும் ஆழமாக இருந்தது. அது உண்மையென்பதையும் உணர்ந்தாள். “எத்தனை விரும்பத்தகாதவள் நான், நீ பழக விரும்பும் பெண்ணாக நான் இல்லை.” என்றாள். தான் நேசிக்கப்படத் தகுந்தவளல்ல, பயன் படுத்தி விட்டு, தூக்கி எறியப் பட, நான் விரும்பவில்லை எனவும் கூறினாள்.

தேவன் நம்மை புரிந்து கொள்கின்றார். அவர் அன்போடு இஸ்ரவேலரைப் பாதுகாத்தார், ஆனால் அவர்களோ அவருடைய மதிப்பைக் குறைத்தனர். “எனக்குக் கூலியாக முப்பது வெள்ளிக்காசை நிறுத்தார்கள்” (சகரி. 11:12) இது, ஓர் அடிமையின் மதிப்பு. வேறொருவனுடைய கவனக்குறைவால், எஜமானன் ஒருவனின் அடிமை மரித்துப் போனால், அதற்கு ஈடாக, அவன் முப்பது சேக்கல் நிறை வெள்ளியைக் கொடுக்க வேண்டும் என்பதாக யாத்திராகமம் 21:32ல் காண்கின்றோம்.இந்த மிகக் குறைந்த மதிப்பினை தேவனுக்குக் கொடுத்து, தேவனை அவமதித்தனர். அப்பொழுது தேவன் சகரியாவிடம், “அதைக் குயவனிடத்தில் எறிந்து விடு, இதுவே நான் அவர்களால் மதிக்கப்பட்ட மேன்மையான மதிப்பு,” என்று தேவன் இளப்பமாகக் கூறுகின்றார் (சகரி. 11:13).

இயேசுவின் நண்பன், அவருக்கு துரோகம் மட்டும் இழைக்கவில்லை, அவமானமும் அடையச் செய்தான். யூத மதத் தலைவர்கள் கிறிஸ்துவைப் புறக்கணித்தனர், எனவே அவர்கள் யூதாஸுக்கு முப்பது வெள்ளிக்காசைக் கொடுத்தனர், ஒரு மனிதனுக்கு கொடுக்கக் கூடிய மிகக் குறைந்த விலை மதிப்பைக் கொடுத்தனர். அவன் அதை வாங்கிக் கொண்டான் (மத். 26:14-15; 27:9) யூதாஸ் இயேசுவை மிகக் குறைவாக மதிப்பிட்டான், அவரை கீழ்த்தரமான தொகைக்கு விற்றுப் போட்டான்.

இயேசுவையே தரக்குறைவாக மதிப்பிட்ட மக்கள், உன்னையும் தரக்குறைவாக மதிப்பிடும் போது ஆச்சரியப்பட வேண்டாம். மற்றவர்கள் உனக்கு தரும் மதிப்புமல்ல, நீ உன்னை நினைத்து வைத்திருக்கும் மதிப்புமல்ல, உன்னுடைய மதிப்பு, தேவனாலேயே நிர்ணயிக்கப்படுகின்றது. உன்னுடைய மதிப்பை, தன்னுடைய ஜீவனைக் கொடுக்கின்ற அளவுக்கு விலையேறப் பெற்றதாக தேவன் கருதுகின்றார்.

தண்ணீர் மூலம் நம்பிக்கை

டாம், மாற்கு ஆகிய இருவரும் செய்யும் ஊழியம் வாழ்விற்கு புத்துணர்ச்சியைத் தருவதாகவுள்ளது. அவர்கள் காண்பித்த ஒரு வீடியோ படக்காட்சி, இதைத் தெளிவுப் படுத்துகின்றது. திறந்த வெளியில் அமைக்கப் பட்ட ஒரு தூவாலைக் குழாயில் (shower bath tube) வரும், புத்துணர்ச்சிதரும் நீரில், ஏழ்மையில் வாழும் சில குழந்தைகள் முதல் முறையாகக் குளித்து,  ஆடிப் பாடி, சிரித்து மகிழ்ந்து கொண்டிருந்தனர். ஹைட்டியிலுள்ள ஆலயங்களின் கிணற்று நீரைச் சுத்திகரிப்பதற்கு, வடிப்பான் அமைப்புகளை ஆண்கள் பொருத்திக் கொண்டிருந்தனர். அசுத்தமான நீரைப் பருகுவதன் மூலம் வரும் வியாதிகளிலிருந்து அம்மக்களைக் காப்பற்றி, அவர்களின் வாழ்நாளை நீடிக்கச் செய்தனர். சுத்தமான நீரை, அவர்களுக்கு கிடைக்கச் செய்வதன் மூலம், அவர்களுக்கு எதிர் காலத்தின் மீது ஒரு நம்பிக்கையை கொடுத்தனர்.

யோவான் 4 ஆம் அதிகாரத்தில், நம் வாழ்விற்கு, தொடர்ந்து புத்துணர்ச்சியைத் தரக்கூடிய “ஜீவத் தண்ணீரைப்” பற்றி குறிப்பிடுகின்றார். களைப்பாகவும், தாகமாகவும்  இருந்த இயேசு, சமாரியா பெண்ணிடம் தண்ணீர் கேட்கின்றார், (வ.4-8). இந்த  வேண்டல்  ஓர்  உரையாடலுக்கு வழி வகுக்கின்றது. அப்பொழுது  இயேசு அவளுக்கு “ஜீவத்தண்ணீரைத்” தருவதாக வாக்களிக்கின்றார் (வச. 9-15). “ நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்திய ஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும் “ என்றார் (வச. 14). 

இந்த ஜீவத்தண்ணீரைப் பற்றி யோவான் பின்னால் விளக்குகின்றார். “ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து, பானம் பண்ணக்கடவன். என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து  ஜீவத் தண்ணீருள்ள நதிகள் ஓடும்”, என்று இயேசு கூறுகின்றார். தம்மை விசுவாசிக்கிறவர்கள் அடையப் போகும் ஆவியைக் குறித்து இப்படிச் சொன்னார் என்று யோவான் விளக்குகின்றார் (7:37-39).

பரிசுத்த ஆவியின் மூலம், நாம் கிறிஸ்துவோடு இணைக்கப்பட்டு, தேவனுடைய அளவில்லாத வல்லமையையும், நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் பெற்றுக்கொள்ள முடிகிறது. ஒவ்வொரு விசுவாசிக்குள்ளும் ஆவியானவர், ஜீவ தண்ணீராக வாழ்ந்து , நம்மை புதுப்பித்து, புத்துணர்ச்சியைத் தருகிறார்.